|
பர்வதமலை - கடலாடி வழியில்
|
பர்வதமலையை பற்றி கேள்விப்பட்டது இல்லை என்றாலும், இரண்டு வருடங்களுக்கு முன்பு அலுவலகத்தில் கூட வேலை செய்யும் ஒரு நண்பர் மூலமாக அந்த மலையை பற்றி தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஏறுவதற்கு கஷ்டமான மற்றும் சித்தர்கள் வாழும் மலை என்று சொல்லி எங்களை அவ்வப்போது கூப்பிடுவார். அவர் அடிக்கடி சென்று வருபவர். என்னால் அப்பொழுது போக முடியாவிட்டாலும், இப்பொழுது போகும் சந்தர்ப்பம் வாய்த்தது. திடிரென்று முடிவான பயணம். நானும் நண்பர்கள் இருவர் என்று மூன்று பேராக பர்வதமலை பயணம் கிளம்பினோம். எந்த புது இடத்திற்கு கிளம்பும் முன்பும் அந்த இடங்களை பற்றியும், போகும் வழி, தங்கும் இடம் பற்றியும் இணையத்தில் தேடி தெரிந்து கொள்வது வழக்கம். அதே போல் அங்கு ஏற்கனவே சென்றவர்களின் அனுபவங்களையும் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்வது வழக்கம். அப்படி மற்றவர்களின் அனுபவங்களை படித்த பிறகு பர்வதமலைக்கு போகவேண்டும் என்ற ஆவல் அதிகமானது என்னவோ உண்மை. இணையத்தில் காணப்பட்ட எல்லா தகவல்களும் இரண்டு வருடங்களுக்கு முற்பட்டவையாக இருந்தன. சமீபத்தில் சென்றவர்களின் அனுபவங்கள் ஏதும் இல்லை. மலைமேல் சிவன்கோயில் இருப்பதால் பவுர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் பயணம் செய்தவர்களின் அனுபவங்களே அதிகமாக இருந்தன. இரவில் மலையேறி, சாமி தரிசனம் முடித்து காலையில் இறங்குபவர்களின் அனுபவங்கள். எங்களுக்கும் அவ்வாறு இரவில் தங்கி காலையில் இறங்கவே ஆசை. ஆனால் கோவில் கட்டுமானப்பணி நடப்பதாலும், மலைமேல் இருக்கும் தற்போதைய நிலமை தெரியாததாலும் முதல் முதலாக பகல் நேரப் பயணம் போவதே சரி என்று முடிவு செய்து ஒரு வியாழன் இரவு பன்னிரண்டு மணியளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலைக்கு பஸ் ஏறினோம்.
|
கோயம்பேடு பேருந்து நிலையம்
|
அதிகாலை நான்கு மணிக்கே திருவண்ணாமலை பேருந்து நிலைய விஜயம். பர்வதமலை போவதற்கு கடலாடி, தென்மாதிமங்கலம் என்று இரு வழிகள் இருந்தாலும் நாங்கள் கடலாடி வழியையே தேர்ந்தெடுத்தோம். கடலாடி வழியின் தூரம் குறைவு, ஆனால் கடினமான மலைப்பாதை பயணம். Trekking செய்ய ஏற்றது. தென்மாதிமங்கல வழியோ கடினமில்லாத நீண்ட தரைவழி, படிக்கட்டு மற்றும் குறைந்தளவு மலைப்பாதை பயணம். பெண்கள், குழந்தைகள் என்று குடும்ப சகிதமாக வருபவர்களுக்கு ஏற்றது. ஆனால் இரண்டுமே ஓரிடத்தில் சந்தித்து ஒரே பாதையாக மலையுச்சி கோவிலுக்கு செல்லும். Trekking ஆர்வம் இருந்தபடியால் நாங்கள் கடலாடி வழிப்பயணத்தை தேர்ந்தெடுத்தோம்.
கடலாடிக்கு முதல் பஸ் 6.00 மணிக்கு என்று சொன்னார்கள். நேரம் இருந்தபடியால், ஆட்டோ பிடித்து திருவண்ணாமலை கோவில் கிளம்பினோம். 40.00/30.00 ரூபாய் ஆட்டோ சார்ஜ். கோவிலை சுற்றி நிறைய குளிக்கும் விடுதிகள் இருந்தபடியால் இந்தப் பயணம். Bus stand எதிரிலேயே ஒரு குளிக்கும் விடுதி இருக்கிறது. நாங்கள் போன போது மோட்டார் வேலைசெய்யவில்லை. ஒரு இருட்டான சந்துக்குள் இருந்தது விடுதி. அது போக போகும் பாதை வேறு சுத்தம் இல்லை. குடித்துவிட்டு போடும் பாட்டில் சிதறல்களும் ஆங்காங்கு கிடக்கிறது என்பதால் கோவில் அருகில் சென்று விடுவது உத்தமம். அங்கு குளித்து முடித்து அண்ணாமலையார் கோபுர தரிசனம் செய்து மறுபடியும் பேருந்து நிலையம் சென்றோம்.
|
திருவண்ணாமலை கோபுர தரிசனம் |
கடலாடி வழியாக தென்மாதிமங்கலம் செல்லும் பேருந்து புறப்பட தயாராக நின்றிருந்தது. 'பர்வதமலை செல்ல நீங்கள் தென்மாதிமங்கலத்தில் இறங்குவதே சரியாக இருக்கும்' என்று பேருந்து ஓட்டுனர் மற்றும் சில பயணிகள் வழி கூறினர். ஆனாலும் நாங்கள் கடலாடி வழியே போவதென்று முடிவு செய்துவிட்டபடியால் கடலாடியிலயே இறங்கினோம். பஸ் டிக்கெட் 12.00 ரூபாய் ஒருவருக்கு. அரைமணி நேரப்பயணம். Bus stand-ல் இறங்கிய உடனே 'விட்டோபானந்தர் ஆசிரமம்' செல்லும் வழி என பலகை தென்பட்டது. இந்த ஆசிரமம் வழியாகத்தான் செல்லவேண்டும். Bus stand-ல் இருந்து ஆசிரமம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் இருக்கும். சமவெளிப் பயணம். அதற்க்கு பின்னர் ஆசிரமத்தில் இருந்தே மலைப்பகுதி ஆரம்பிக்கிறது. மலைப்பகுதி தூரம் மட்டும் சுமாராக 5.5 கிலோமீட்டர். மலை மேலே ஏறுவதற்கு உடலில் பலம் வேண்டுமே. ஏறுவதற்கு முன்பு ஏதாவது சாப்பிட்டு விடலாம் என்றெண்ணி அருகில் இருந்தவர்கள்களிடம் விசாரித்தோம். அருகிலேயே மூன்று சிறிய உணவகம் இருப்பதாக கூறினர். மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து, ஒரு பதினைந்து நிமிடங்கள் காத்திருந்து சுவையான இட்லி, வடை, பூரியை சாப்பிட்டு முடித்தோம். அவ்வுணவகம் சரியாக காலை 7.15 க்கு ஆரம்பமாகிவிடுகிறது. பர்வதமலை பயணத்தை சரியாக 7.30 மணிக்கு கடலாடி கிராம bus stand-ல் இருந்து ஆரம்பித்தோம். அதிகாலை நேரம். இளம்வெயில். விட்டோபானந்தர் ஆசிரமம் அடைந்தவுடன், அங்கிருந்து மலையேற்றம் தொடங்கியது.
|
மேகங்கள் தொட்டுச் செல்லும் மலைக்கோவில் |
|
கடலாடி வழியில் பயணம் |
ஆசிரமம் முன்பே ஒரு பெண்மணி சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். தண்ணீர், பிஸ்கட், டீ போன்றவைகள் கிடைக்கும். இதை விட்டால் வார நாட்களில் மேலே கடைகள் இருக்கும் என்று சொல்ல முடியாது. சனி, ஞாயிறு, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மேலே கடைகள் இருக்கும். சமவெளியாக போகும் பாதை, போகப்போக ஏற்றம் காண்கிறது. நாம் மலையேறும் பாதை உண்மையில் பாதையே அல்ல. மழை பெய்தால் வெள்ளம் புரண்டு வரும் வழி. ஆகையால் மழைக்காலங்களில்(monsoon time) தென்மாதிமங்கல வழி செல்வதே சிறந்தது. இது Reserved forest area வேறு.
|
கடலாடி வழி செல்லும் பாதை - உண்மையில் மழை பெய்தால் வெள்ளம் புரண்டு வரும் வழி இது
|
இதற்க்கு முன்னர் இங்கு வந்தவர்களின் அனுபவங்களை வலைத்தளங்களில் படிக்கும்போது அவர்கள் குறிப்பிட்ட ஒரு விசயம் 'புதியவர்களாகவோ அல்லது வழி தெரியாமல் தடுமாறுகிறவர்களோகவோ இருந்தால் நாய் ஒன்று எங்கிருந்தோ வந்து துணையாக வழிகாட்டும் என்பதே. எங்களுக்கும் அப்படியான ஒரு அனுபவம் வாய்த்தது. ஆசிரமத்தை கடந்தவுடன் எங்கிருந்தோ ஒரு கருப்பு வண்ண நாய் வந்து எங்களோடு ஒட்டிக்கொண்டது. நாய் என்று சொல்வதை விட 'பைரவர்' என்று சொல்வது சரியாக இருக்கும்.
|
வழியில் உள்ள சிறிய கோவில் |
|
பைரவரின் துணை
|
பலரும் தங்கள் அனுபவத்தில், நாய் சிறிது தூரம் தங்களோடு பயணித்து பின்னர் திடிரென்று காணமல் போய்விடும் என்று சொல்லி இருந்தனர். நாங்களும் அவ்வாறே நினைத்தோம். ஆனால் எங்களுக்கு ஆசிரம அடிவாரத்தில் இருந்து எங்களோடு பயணித்த 'பைரவர்' கடப்பாரை படி வரை துணைக்கு வந்தது. கரடுமுரடான மலைப்பகுதியில் மூவரோடு நால்வராக பயணித்து எங்களோடு ஐக்கியமானது. முழுவதுமாக ஐந்து கிலோமீட்டர் கஷ்டமான பயணம். ஆனாலும் சில இடங்களில், பாறை ஏற்றங்களில் ஏற கஷ்டப்பட்டது. எங்களிடமிருந்த பெரும்பாலான தண்ணீர், ரொட்டி வகைகளை அதற்க்கு உணவாக அளித்தோம். அந்தக் கடும் பயணத்தில் தன்னை வருத்தி எங்களோடு பயணித்தது உண்மையில் ஆச்சர்யம்.
|
இயற்கையை மிஞ்ஞ எதுவுமில்லை |
|
மலை ஏற்றத்தின் போது
|
மலையில் மூலிகைகள் அதிகம் என்பதால் மூலிகைக் காற்று உடம்பினுள் சென்று வர தீராத நோயும் தீர்ந்துவிடும் என்பர். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் போது அதிலிருந்து சில பகுதிகள் ஆங்காங்கே கீழே விழுந்தன என்றும் அவ்வாறு விழுந்த மலைகளின் ஒரு பகுதிதான் பர்வதமலை என்றும் கூறப்படுகின்றது. ஆகையாலே இங்கு மூலிகைகள் அதிகம். உயிர் காக்கும் சஞ்சீவனி மூலிகை இங்குள்ளது என்றும், ரசவாதம் செய்யப் பயன்படும் சில முக்கிய மூலிகைகள் இங்கு உள்ளன என்பதும் சிலரது கருத்தாக உள்ளது. அனுதினமும் சூட்சும ரீதியாக சித்தர்கள் வந்து வாசம் செய்யும் மலையாகவும் இது போற்றப்படுகிறது. சில நேரங்களில் சித்தர்கள் சூட்சும ஒளி உடலை எடுத்து, பறவையாயாகவோ, விலங்காகவோ, வேறு மனித ரூபத்திலோ மலை மீது இறைவனை வழிபட செல்வதுண்டாம். அவர்களை சாதாரணமாக பார்க்க முடியாது. அவர்கள் எடுத்து செல்லும் கற்பூரம், அகர்பத்தி , சாம்பிராணி, சந்தனம் போன்ற பொருட்களின் வாசனை மூலம் அவர்கள் கடப்பதை அறியலாம் என்று சிலர் கூறுவர். சில நேரங்களில் சித்தர்கள் தேனீ, பைரவர் (நாய்), போன்ற வடிவத்தில் உண்மையான பக்தர்களுக்கு வழிகாட்டும் விதமாக மலை ஏறும் வரை காட்சி கொடுப்பார்கள். இப்படியாக இவ்வாறு பலர் கூறி இருக்கின்றனர். உண்மையா புருடாவா என்பது அவரவர்களின் நம்பிக்கை.
|
இயற்கையை மிஞ்ஞ எதுவுமில்லை |
|
இயற்கையை மிஞ்ஞ எதுவுமில்லை
|
ஒருவழியாக கடைப்பாரை படியை நெருங்கும் பொழுது மணி 11.00. ஒரு பெண்மணி அப்பொழுதுதான் தன் கடையை பரப்பிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 3000 அடி உயரத்தில். தேனிர் மற்றும் தண்ணீர், குளிர்பானங்கள் விற்கும் கடை. விலை அதிகம் தான். ஆனால் அந்த இடத்திற்கு அவ்வளவு தருவது தகும். ஒரு லிட்டர் தண்ணிர் கேன் 35.00 ரூபாய். அதிகம் என்று நினைப்பவர்கள் கீழிருந்தே தண்ணிர் எடுத்து வருவது உத்தமம். மலைப்பயணம் என்பதால் அதிக தண்ணிர் தேவைப்படும். தினசரி வைத்திருந்த கடையை forest department கெடுபிடியால் சனி, ஞாயிறு மற்றும் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மட்டுமே இப்போது திறக்கிறார்.
|
வழியில் தென்படும் கடை
|
நாங்கள் மலைமேல் செல்வதால் தன்னிடமிருந்த ப்ளாஸ்டிக் பாட்டிலில் இருந்த 'கீரைக்கூட்டை' மேலேயுள்ள ஆசிரமத்தில் சேர்த்து விடுமாறு கூறினார். சிறிது தூரம் சென்றதும் வழி ஏதுமின்றி ஒரு பெரிய பாறையிலான செங்குத்தான மலை மட்டுமே இருந்தது. அதன் உச்சியில் கோவில் மற்றும் விட்டோபானந்தர் ஆசிரம மடம்.
|
நெட்டுப்பாறை |
பாறையில் ஏறுவதற்கு இரு வழிகள் உண்டு. ஒன்று கடப்பாரை படி, மற்றொன்று ஏணிப்படீ. செங்குத்தான பாறையின் இரண்டு பக்கங்களிலும் கடப்பாரையால் துளையிட்டு அவைகளை ஒன்றோடொன்று சங்கிலியால் கட்டியிருந்தனர். கடின மலைப்பாதை. உயரம் பயம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் பயமாக இருக்கும். கீழே பார்க்காமல் இறைவனை நினைத்து ஏற வேண்டும். எல்லாம் அவன் செயல். இறைவன் அருளால் இதுவரை ஒரு சிறு விபத்தும் நேரவில்லை என்று சொல்லப்படுகிறது.
|
கடப்பாரை வழி தொடக்கம் |
இன்னொன்று ஏணிப்படி. செங்குத்தான மலையின் மேல் பெரிய இரும்பு ஏணிகளை ஆங்காங்கு வைத்திருக்கின்றனர். அதன் மூலமாகவும் ஏறலாம்.
நாங்கள் கடப்பாரை படி வழியாக ஏறினோம். இடையிடையே மேலே போக வழி இல்லாத இடங்களில் தண்டவாளம் போன்ற இரும்பு பலகையை போட்டிருந்தனர். அதன் மேல் நடந்து செல்ல வேண்டும்.
|
தண்டவாளப்படி |
இதுபோக ஆகாயப்படி என்ற ஒன்றும் உண்டு. அந்தப் படிகளின் கீழிருந்து மேலே பார்க்கும் போது, பாதை ஆகாயவெளிக்கு செல்வது போல் இருக்கும். Way to Sky.
|
ஆகாயப் படி
|
சரியாக பண்ணிரண்டு மணி அளவில் கோவிலை சென்றடைந்து ஆசிரமத்தில் உணவுப்பொருளை அங்கிருந்த ஒருவரிடம் ஒப்படைத்தோம். அங்கிருந்த ஆசிரம குகையில் எங்களை பிரார்த்தனை செய்யவும், தியானம் செய்யவும் அப்பெரியவர் உள்ளே அனுப்பினார். உள்ளே நல்ல குளிர்ச்சி. உள்ளே ராஜராஜேஸ்வரி விக்ரகம் மற்றும் சில சாமி படங்கள் இருந்தன. சிறிது நேரத்தில் எங்களுக்கெல்லாம் மதிய உணவாக பொங்கல் அன்னதானம் நடந்தது. களைப்புடன் மேலேறி வருபர்களுக்கு இவ்வாசிரமமே அன்னதானம் வழங்கி வருகிறது. மலைக்கு வரும் பக்தர்கள் ஆசிரம்மத்திற்க்கு தங்களால் முடிந்த நன்கொடை வழங்குவது நல்லது. யாரொ ஒருவர் செய்த தர்மத்தினாலே(நன்கொடை), இன்று எங்களால் சுவையான மதிய உணவருந்த முடிந்தது. உணவோடு நல்ல குளிர்ச்சியான, சுத்தமான மலைத்தண்ணிர் தருகிறார்கள். 20,000 லிட்டர் கொள்ளளவில் ஒரு தொட்டி கட்டி மழைநீரை சேமித்து வைத்துப் பயன்படுத்துகிறார்கள். எங்கள் மூவரோடு மற்றுமொரு நான்கு இளைஞர்கள் உணவருந்தினர். தஞ்சாவூர் அருகில் இருக்கும் பட்டுக்கோட்டையில் இருந்து வந்திருப்பதாகவும்.... இது போல சதுரகிரி, வெள்ளியங்கிரி மலைகளில் ஏறியிருப்பதாகவும் கூறினர். மற்ற மலைகளை விட பர்வதமலை சற்று கடினமாக இருப்பதாக கூறினர்.
வெள்ளிக்கிழமை ஆதலால் கூட்டம் இல்லை. அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மலைமேல் ஏறுவர் என்றும், சனி, ஞாயிறுகளில் பல நூறு பேர் ஏறுவர் என்றும் ஆசிரம பெரியவர் கூறினார். அவ்வாசிரமம் மகான் மௌனயோகி விட்டோபானந்தரை சேர்ந்தது. இவர் சுமார் 20 வருடங்களாக மலைமேல் இருக்கும் குகையில் கீழே இறங்காமல் தவம் செய்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த எல்லா வருடங்களிலும் யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்ததினால் மௌனயோகி என்று அழைக்கப்படுகிறார்.
இவர் 2010-ல் காலமாகிவிட்டபடியால் அவரின் நேரடி சிஷ்யரே தற்போது மடத்தை கவனித்து வருகிறார். அன்னதானம் முடிந்தவுடன் பெரியவரிடம்(சிஷ்யர்) விடைபெற்று, அருகில் இருக்கும் கோவிலை நோக்கி நடந்தோம். ஸ்ரீ மல்லிகார்ஜுனர் மற்றும் ஸ்ரீ பிரம்மராம்பிகை தாயார் குடிகொண்டுள்ள இடம். இவர்கள் போக, விநாயகர், வள்ளிதேவசேனா சமதே முருகர், வீரபத்திரர், காளி, அகத்தியர், கோரக்கர் போன்றோர்களையும் தரிசிக்கலாம். கற்களால் ஆன கோவில் சுமார் ரெண்டாயிரம் வருடங்களாக அம்மலையுச்சியில் இருந்தாலும், தற்போது தான் நம் ஊர்களில் இருப்பது போன்ற கோவில் அமைப்பில் கோவில் கட்டும் பணி நடைபெறுகிறது.
|
புதுப்பொழிவுடன் கட்டப்படும் கோவில் |
|
புதுப்பொழிவுடன் கட்டப்படும் கோவில் |
|
கோவில் உள்ளே |
|
கோவில் உள்ளே |
|
அழகிய காட்சி |
இதை முன்னெடுத்துச் செய்பவர்கள் சென்னையில் உள்ள "திருவல்லிக்கேணி ஸ்ரீ பருவதமலை அடியார்கள் திருப்பணி சங்கம்" என்ற அமைப்பினர். மாவட்ட கலெக்டர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதியுடன் கோவில் திருப்பணி நடக்கிறது. கட்டுமானப் பொருட்களை மேலே கொண்டு செல்வது கடினம் ஆகையால், விரும்பும் பக்தர்கள் மூலமாக எல்லாமே தலைச்சுமையாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது. வெயிலின் தொடக்க காலமான மார்ச் மாதத்தில் செல்வதால் மழையோ, மேகங்களோ இல்லை. வறண்ட வானிலை. கோவிலில் பூசாரி என்று எவரும் இல்லை. நாமேதான் பூஜை செய்யவேண்டும். கோவிலின் உள்ளே சூடம், பத்தி போன்றவைகளை கொளுத்துவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் இருப்பதால், சூடம், பத்தி போன்றவைகளை வெளியே இருக்கும் ராட்சத சூலாயுதம் முன்பு கொளுத்தினோம்.
|
பின்னால் தெரிவது ஜவ்வாது மலைத் தொடர்கள் |
உள்ளே இருக்கும் சிவலிங்கம் மற்றும் மற்ற சாமி சிலைகளுக்கு விபுதி அபிஷேகம் மட்டும் செய்தோம். வந்த களைப்பு நீங்க சிறிது நேரம் ஒய்வெடுத்து, கோவிலை சுற்றி வந்தோம்.
|
சிறிய இளைப்பாறல் |
|
கையில் இருக்கும் அத்தனையும் புடுங்கி விடும். ஜாக்கிரதை |
|
கையில் இருக்கும் அத்தனையும் புடுங்கி விடும். ஜாக்கிரதை |
வேலைகள் நடந்தபடி இருக்கிறது. இன்னும் நான்கு மாதங்களில் கும்பாபிஷேகம் என்று அங்கிருந்த திருப்பணி சங்க உதவியாளர் சொன்னார். கோவிலில் மின்சார வசதி இல்லாததால் ஜெனரேட்டர்உதவியுடன் இரவு பன்னிரண்டு மணி வரை மட்டுமே மின்விளக்குகளை ஒளிரவிடுகின்றனர். கதவுகள் இல்லாத கோவில்.
பர்வதமலை கடல் மட்டத் திலிருந்து சுமார்நான்காயிரத்து ஐந்நூறு அடி உயரம் கொண்டதாக சொல்லப்படுகிறது. திருவண்ணா மலையைவிட இந்த மலை உயரம். நாங்கள் ஒய்வெடுத்துக் கொண்டிருக்கும்போதே ஒரு குடும்பம் மேலேறி வந்தது. அதில் ஒரு சிறுமியும், ஒரு குழந்தையும் அடக்கம். இச்சிறிய குழந்தைகளை கூட்டிக்கொண்டு எப்படி மேலேறி வந்தார்கள் என்று ஆச்சர்யம். அதுவும் இந்த செங்குத்தான பாறைகளில்.
சரியாக 2.30 மதியம் மலையை விட்டு கீழே இறங்க ஆரம்பித்தோம். மேலேரும்போது கடப்பாரை படி வழியாக வந்தபடியால், கீழிறங்கும் போது ஏணிப்படி வழியாக இறங்கினோம். எனக்கு உயர பயம் உள்ளபடியால் உடல் நடுங்க கைகளை அழுந்தப்பிடித்து மெதுவாக இறங்கினேன். தவறியும் கீழே பார்க்கவில்லை. படிக்கட்டை மட்டும் பார்த்து இறங்க வேண்டியதாயிற்று.
|
ஏணிப்படி |
நம்மோடு துணைக்கு வரும் பைரவரால் கடப்பாரை படி வரையுமே வரமுடியும். அதற்க்கு மேல் அதனால் வரமுடியாது. அசதியில் எங்களோடு வந்த பைரவரை நாங்கள் மறந்தே விட்டோம். மேலிருந்து இறங்கும்போது எதார்த்தமாய் நான் பார்க்க, அங்கே மரத்தின் அடியில் இருந்த பாறையில் நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தது எங்கும் போகாமல். மலை அடிவாரத்தில் இருந்து எங்களோடு பயணித்த காரணத்தால், அதைப் பிரிய மனமின்றி நாய் இருந்தால் கடலாடி வழி, இல்லையேல் தென்மாதிமங்கலம் வழி என்று முடிவு செய்திருந்தோம். ஆனாலும் கடலாடி வழி கரடுமுரடான பாதை என்பதால் எங்கள் உள் விருப்பம் தென்மாதிமங்கலமாகத்தான் இருந்தது. நாங்கள் இறங்க நாயும் எங்கள் கூடவே இறங்கி வந்தது. செல்லும் வழியில் இருந்த கடையின் பெண்மணியிடம் இது குறித்து கேட்டபோது நீங்கள் விரும்பும் வழியில் செல்லுங்கள், நாய் அதுவாகவே அதன் இடத்திற்கு சென்று விடும், பைரவர் துணைக்கு வருவது என்பது தலபுராணத்திலேயே உள்ளது எனவும், அது சிறு வயதில் இங்கே தான் வளர்ந்தது என்று கூறினார். எங்களோடு வந்த நாய் போக அங்கு மற்றொரு வெள்ளை நாயும், brown கலர் நாயும் இருந்தது. கடலாடியும், தென்மாதிமங்கலமும் சேரும் இடம் வந்தவுடன் நாங்கள் தென்மாதிமங்கல வழியில் செல்ல முடிவெடுத்தோம்.
|
கடலாடியும், தென்மாதிமங்கலமும் சேரும் இடம். |
ஆனாலும் அவ்வழியிலும் எங்களை பின்தொடர்ந்து வந்தது. மறுபடியும் கடினமான பயணம் அது மேற்கொள்ள நாங்கள் விரும்பாததால், மேலேறிக்கொண்டிருந்த இரு பெரியவர்களிடம் ஒரு பிஸ்கட் பாக்கெட்டைக் கொடுத்து அதை மறுபடியும் மேலே கொண்டு செல்ல வேண்டினோம். அவர்களும் அவ்வாறே செய்ய சிறிது குழப்பத்துடன் அவர்கள் பின்னே மேலேறி சென்றது. ஆனால் இது எல்லாம் கொஞ்ச நேரம் தான். கல்பாதை பயணம் முடிந்து படிக்கட்டுகள் வழி கீழிறங்குதல் ஆரம்பமானபோது நாங்கள் மேலே பார்த்த brown கலர் நாய் எங்கிருந்தோ ஓடி வந்து எங்களோடு ஒட்டிக்கொண்டது. கருப்பு பைரவர் போய் இப்பொழுது brown பைரவர். அதற்கும் எங்களிடமிருந்த ரொட்டி மற்றும் தண்னிர் வகைகளை கொடுத்தோம். சிறிது தூரம் எங்கள் துணையாக வந்து பின்னர் திடிரென்று மறைந்தது. ஏறியதிலிருந்து இறங்கியதுவரை எங்களை விட்டுப் பிரியாமல் எங்களோடு துணைக்கு வந்த அதை என்னவென்று சொல்ல.
|
தென்மாதிமங்கல வழி இறங்கல் |
|
இறங்கும் போதும் எங்களை பின் தொடரும் பைரவர் |
|
தென்மாதிமங்கல வழி இறங்கல் |
|
தென்மாதிமங்கல வழி இறங்கல் |