Thursday, January 04, 2007

என்னைப் போல் ஒருவன் !

சின்ன வயசுல நம்மளை போல 7 பேரு இந்த உலகத்துல்ல இருப்பாங்கன்னு பெரியவங்க சொல்லி கேள்வி பட்டு இருக்கேன். அது எந்தளவுக்கு உண்மையின்னு தெரியாது. ஆனா என்னை போல 2 பேரை நான் நேர்லயே பார்த்து இருக்கேன். 3 வதா உள்ளவரை என் சொந்தக்காரங்க டிவில பார்த்ததா சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்.
பரமக்குடியில நாங்க குடியிருக்கும்போது என்கூட 'ஹைராத்துல் ஹமாலியா கீழ முஸ்லிம் ஸ்கூலில்' 6 ஆம் வகுப்பு படிக்கும்போது ஒருத்தன் படித்தான். என் க்ளாஸ் இல்லாட்டியும் அதே 6 ஆம் வகுப்பு. ஆனா வேற க்ளாஸ். அவன் கூட பேசி பழகாட்டியும் பல தடவை ஆச்சர்யமா அவனை பார்த்து இருக்கேன்.
அதுக்கப்புறம் மதுரைக்கு வந்து பல வருடங்கள் கழித்து என் நண்பன் ஒருவன் மூலமா 2 ஆவது நபரை சந்திச்சேன். அவன் பேர் 'வால்டர்'. கிறிஸ்டியன். என் வயசு. என்ன நான் ஒல்லியா இருப்பேன். அவன் கொஞ்சம் குண்டு. மற்றபடி எல்லாமே ஒரே மாதிரி தான். பின்னாளில் நாங்க ரெண்டு பேரும் நண்பர்களாயிட்டோம்.
அதுக்கப்புறம் கொஞ்ச நாளில் வேலை பார்க்க சென்னை வந்த பிறகு... வரலாறு கானாத அளவுக்கு நல்ல மழை. அப்போ ஊட்டியிலே தொடர் நிலச்சரிவு. அதனால தடம் புரண்ட மேட்டுப்பாளயம் - ஊட்டி புகை வண்டியை சன் டிவி-ல காட்டி இருக்காங்க. அதில் என்னை போல உள்ள ஒரு பயணியும் பின்னால் இருந்துருப்பான் போல. சொந்தக்காரங்க எங்க விட்டுக்கு போன் பண்ணி 'உங்க பையனை டிவி-ல பார்த்தேனே. பையன் என்ன ஊட்டிக்கா போய் இருக்கான் ?' நு விசாரிச்சுருக்காங்க. அப்புறம் தான் எங்க விட்டுல இருந்து எனக்கு போன். டிவி-ல பார்த்த தேதிய சொல்லி அன்னைக்கு ஊட்டிக்கு போனியான்னு கேட்டாங்க. நான் கடைசியா ஊட்டிக்கு போனதோ காலேஜ் கடைசி வருஸம் படிச்சப்போ. நான் போகலைப்பா-நு சொன்னாலும் என்னை கடைசி வரைக்கும் நம்பலே. எங்க அப்பாவோ 'போறதுல தப்பில்லை. ஆனா சொல்லிட்டு போடா'-நு சொன்னாரு. அதுக்கு மேலே என்ன சொல்லுறது.
நல்ல வேளை...உருவத்துல ஒற்றுமையா இருக்கவங்க என்னை போல நல்லவங்களா இருப்பாங்க போலிருக்கு. சினிமாவில் டபுள் ஆக்ஸன் ஹிரோவுல ஒருத்தர் எதாவது தப்பு பண்ண, அதுக்கு தண்டனை இன்னொருத்தர் அனுபவிப்பது போல நம்ம வாழ்க்கைளையும் வராம இருந்தா சரிதான். ஆக மொத்தத்துல என்னையும் சேர்த்து 4 பேரு ஆச்சு. மிச்சம் இருக்குற 3 பேரை எப்ப, எந்த வயசுல, எங்கே சந்திக்க போறேன்னுதான் தெரியலை. பார்ப்போம் !
பின்னர் பல மாதம் கழித்து ஒரு நாளில் என் மேன்சனில் என்னையே ஒருவர் உற்று உற்றுப் பார்த்துகொண்டிருந்தார். திடிரென்று ஒருநாள் என்னைப் பார்க்கும் போது... தஞ்ஜாவூர் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தின் பெயரை சொல்லி, அதில் உள்ள ஒருவரின் மகன் தானே நீங்கள். அப்பா நன்றாக இருக்கிறாரா ? என்று கேட்டார். நான் அவரிடம்...நான் தஞ்ஜாவூர் இல்லை, மதுரையை சேர்ந்தவன் என்று பின்னர் விளக்கினேன். அதே போல இன்னொருவரும் என்னை பார்த்து விட்டு அவர் கூட வந்தவரிடம் அப்படியே 'நம்ம சேக் அப்துல்லா மாதிரியே இருக்கான்லடா' என்று கூறி விட்டு சென்றார். எல்லாம் என்னைப்போல் முகச்சாயல் உள்ளவர்கள் போல என்று நினைத்துக்கொண்டேன். வேறென்ன சொல்ல...