Monday, July 26, 2010

தப்புத் தாளங்கள்


ஒரு ஞாயிற்றுக்கிழமையில் பொழுதை போக்குவதற்க்கு என்ன செய்வதன்று தெரியாமல் ரூம்மில் அங்கும் இங்குமாக சிதறிக் கிடந்த பொருட்களை ஒழுங்குபடுத்தி, எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன்.

பாக்கிங் அட்டைப் பெட்டிகளில் நிறைய சினிமா DVD கள் இருந்தபடியால், அதை இழுத்து வைத்து ஏதாவது பார்க்காத படம் இருக்காதா? இல்லையென்றால் பார்த்த படத்தையே மறுபடி
யும் பார்ப்போமா என்று தேடிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ரிலீசான "கார்த்திக்-அனிதா" பட DVD இருந்தது.






சரி, நாம பார்க்காத படம், இன்னைக்கி ஒரு வழியா பொழுத போக்கிவிடலாம் என்றென்னி, ரூமில் இருந்த கம்ப்யுட்டரில் படத்தை ஒட விட்டேன். படம் சுத்த போர், ஆனாலும் படத்தில் ஒரு காட்சி எனக்கு சுவாரசியமானதாக இருந்தது.

அந்தக் காட்சி...


கல்லூரியில் படித்து கொண்டிருந்த ஹீரோவிடம் கல்லூரி நிர்வாகத்தினர் ஏதோ ஒரு காரணத்துக்காக பெற்றோரை அழைத்து வரச் சொல்லியிருப்பர். ஹிரோ பெற்றோரை அழைத்து வருவதற்க்கு பதிலாக செட்டெப்பாக ஒருவரை அப்பாவாக அழைத்து வருவார். இதை எப்படியோ தெரிந்து கொண்டு விடும் ஹீரோவை வெறுக்கும் ஹீரோயின் கல்லூரி நிர்வாகத்திற்க்கு செட்டப் அப்பாவை பற்றிய தகவல்களை போட்டுக் கொடுத்து விடுவார். இதனால் ஹீரோ மாட்டிக் கொள்வார்.


மேலே உள்ள இந்தக் காட்சி எனக்கு சுவாரசியமானாதா இருந்ததுக்கு காரணம் இதே போல என் வாழ்க்கையிலயும் நடந்தது தான்.

ஆனா இந்த விசயத்துல என்னோட கம்ப்பேர் பண்றப்போ படத்துல வர்ற ஹீரோவோ அல்லது நிஜவாழ்க்கையுல அவனப் போல கல்லூரிக் காலத்தில் அப்பா, அம்மாவை செட்டப் பண்ணுனவங்களோ எனக்கு சாதரணம்...


காரணம் நான் பள்ளிகூடம் படிக்கும் போதே அந்த இழவெல்லாம் பண்ணிட்டேன். முழுவதுமாக மறந்து போன அந்த சம்பவம் இந்த படத்தை பார்த்தவுடனே ஞாபகத்துக்கு வந்தது. அன்றிரவு முழுவதும் பள்ளியில் நடந்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நினைவில் வந்தது. மறந்து போன பால்ய காலத்து நினைவுகளை இது போன்ற ஏதாவது சில படங்களோ அல்லது ஏதேனும் சம்பவங்களோ ஞாபகப்படுத்திவிடுகின்றது.




LKG முதல் பத்தாம் வகுப்பு வரை மெட்ரிக்குலேசன் கல்வி. பத்தாம் வகுப்புக்கு மேல் அங்கு இல்லாததால் அப்பாவின் நண்பர் சொன்னபடியால் மீனாட்சி அம்மன் தெற்கு கோபுரம் (தெற்கு சித்திரை வீதி) எதிரில் இருக்கும் ஆயிர வைசியர் மேல்நிலைப்பள்ளியில் +1, +2 சேர்த்து விடப்பட்டேன். Boys ஸ்கூல். வெள்ளியம்பலம் ஸ்கூல் என்றால்தான் பொதுவாக எல்லோருக்கும் தெரியும். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம்.



பதினொன்றாம் வகுப்பு முடிந்து பண்ணிரன்டாம் வகுப்பிற்குள் அடியெடுத்த வைத்து சில நாட்கள் சென்றிருக்கும். எங்கள் வகுப்பு Physics Teacher விஜயலெட்சுமி. மாணவர்களிடம் அன்பாக இருப்பவர், நன்றாக புரியும் படி பாடம் நடத்துபவர். அதே நேரத்தில் மாணவர்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்பவர். வீட்டில் குடும்ப பிரச்சனையால் திடிரென்று ஒரு நாள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதனால் அவருக்கு பதிலாக புதிதாக ஒரு Physics Teacher வந்து சேர்ந்தார் இரண்டு நாள் கழித்து. முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும்.


புதிதாக வந்த டீச்சர் ஆகையால் மாணவர்கள் அவர் நடத்தும் பாடங்களை சரியாக கவனிப்பது கிடையாது. 'விஜயலெட்சுமி டீச்சர் இருந்த இடத்தில் இவளா !'' என்று மாணவர்கள் அவரை வெறுத்தனர். அரட்டை அடித்துக் கொண்டும், டீச்சரை பத்தி ஏதாவது கேலி, கமெண்ட் அடித்துக் கொண்டும் இருப்பார்கள். பொருத்துப் பொருத்துப் பார்த்தவர் தன்னை கேலி செய்கிறார்கள் என்று தெரிந்தவுடன் ஒரு சில வாரங்களில் மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள அரம்பித்தார்.

மாணவர்களின் வெறுப்பு மேலும் வளர்ந்தது. ஒரு நாள் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது வகுப்பில் மாணவர்களுக்குள் விட்ட பேப்பர் ராக்கெட் எப்படியோ வழி தவறி டீச்சரின் முதுகில் குத்தி கீழே விழுந்தது.

கீழே விழுந்த ராக்கெட்டை எடுத்த அவர் 'இது யாரோட வேல ?' என்றார்.

ஒருவரும் பேசவில்லை. அமைதியாக இருந்தது வகுப்பு.

மறுபடியும் 'யாரு ராக்கெட் விட்டா ? எந்திருச்சு நில்லுங்க' என்றார் முகத்தை கடுமையாக வைத்தபடி.


மறுபடியும் எங்களிடையே மவுனம். இந்த முறை கோபமாக,

'ராக்கெட் விட்டது யாருன்னு எனக்கு தெரிஞ்சாகனும் அது வரைக்கும் உங்க க்ளாசுக்கு பாடம் நடத்த வரமாட்டேன்' என்று கூறி வகுப்பை விட்டு வெளியே சென்று விட்டார்.

நல்ல வேலையாக ஹெட் மாஸ்டரிடம் செல்லவில்லை. ராக்கெட் விட்டவன் மன்னிப்பு கேட்டால் பார்க்கலாம் என்று சக ஆசிரியையிடம் சொல்லி அனுப்பினார் சிறிது
நேரம் கழித்து.

சில ஆண், பெண் ஆசிரியர்களும் உள்ளே வந்து எங்களைத் திட்டி விட்டு சென்றனர். பின்னர் மாலை பள்ளி முடியும் நேரத்தில் எல்லா மாணவர்களும் ஒன்றாக சென்று மன்னிப்பு கேட்டோம். அதற்க்கு மேல் அவராலும் ஒன்றும் செய்ய முடியாததால் அடுத்த நாளிலிருந்து வகுப்பிற்க்கு வர ஆரம்பித்தார். ஆனாலும் எங்கள் மேல் இருந்த கோபம் குறையவில்லை. இதற்க்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல இன்னோரு சம்பவும் நடந்தது.

நான் படித்தது 12th A Section English Medium. அருகிலேயே 12th B Section Tamil Medium இருந்தது. எங்கள் பள்ளிக்கென்று உள்ள Physics, Chemistry, Biology லேப்-கள் எல்லாம் தெற்கு ஆவணி மூல வீதியில் இருந்தது. லேப் பீரியட்-ல் மட்டும் அங்கு சென்று விடுவோம்.

மூன்று நிமிட நடை நேரம் தான்.

12 B Section தமிழ் மீடியம் மாணவர்கள் Physics பீரியடில் லேப் சென்று இருந்தனர். அங்கு அந்த புது டீச்சரும் இருந்தார். மாணவர்களுக்கு பரிசோதனைகளை
செய்து காண்பித்து கொண்டு இருந்த போது மூன்று மாணவர்கள் அவர் குனிந்த போது இடுப்பை பிடித்து அமுக்கி கிள்ளி விட்டனர். அதிர்ச்சியில் அலறித் துடித்த டீச்சர் நேராக ஹேட் மாஸ்டரிடம் புகார் செய்து விட்டார்.

அந்த மூன்று மாணவர்களையும் பள்ளியில் இருந்து நீக்கி விட்டனர். இத்தகைய சம்பவங்களினால் +2 மாணவர்கள் மீது வெறுப்பு கொண்டார்.


ஒரு நாளின் முதல் வகுப்பு Physics பீரியட் ஆக இருந்தது. அன்று ரிகார்ட் நோட்புக் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள். ஆனால் ஞாபக மறதியால் அதை அன்று பள்ளிக்கு எடுத்து செல்ல வில்லை. மேலும் டிராபிக் பிரச்சனையால் 10 மணிக்கு செல்ல வேண்டிய நான் 10.30 மணிக்கே செல்ல முடிந்தது.

வகுப்பிற்க்குள் செல்ல முயலுகையில் வாசலில் என்னைப் போல் லேட்டாக வந்த நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். ரிகார்ட் நோட்புக் மற்றும் லேட்டாக வந்ததற்காக physics டீச்சர் உள்ளே விட மறுத்து விட்டார். போய் ஹேட்மாஸ்டரை பார்த்து விட்டு வருமாறு கூறி பாடத்தை நடத்தத் தொடங்கி விட்டார்.


10.40 மணி போல் கையில் பிரம்புடன் ஹேட்மாஸ்டர் கணபதி ரவுண்ட்ஸ் வருவார்.

எங்களைப் பார்த்தவுடன் 'ஏண்டா வெளியே நிக்கிறிங்க' என்று கேட்டபடி

'டீச்சர், ஏன் இவங்க வெளியே நிக்கிறாங்க" என்று டீச்சரிடம் கேட்டார்.

"ரிகார்ட் நோட்புக் எழுதி கொண்டு வரல சார். அதுவுமில்லாம முக்கியமான க்ளாஸ், நேத்தைக்கே யாரும் லேட்டா வரக்கூடாதுனு சொல்லி இருந்தேன். அப்படி இருந்தும் வேனுமின்னே வந்துருக்காங்க சார்" என்று கூறிவிட்டார்.


அவ்வளவுதான். எங்கள் பக்கம் திரும்பிய ஹேட்மாஸ்டர் 'போங்கடா, போய் உங்க அப்பா, அம்மாவை கூட்டிக்கிட்டு வந்து என்னை பாருங்க' அப்பத்தான் க்ளாசுக்குள்ள போக முடியும் ' என்று கூறி விட்டு மற்ற வகுப்புகளுக்கு சென்றார். என்ன செய்வதன்று தெரியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தோம்.


திரும்பி வந்தவர் 'ஏண்டா இன்னமுமா போகல நீங்க' என்று கூறி கையிலிருந்த பிரம்பால் ஒவ்வொருவரின் காலிலும், பின்புறத்திலும் பலம் கொண்ட மட்டும் அடித்து விரட்டினார். எனக்கும் சுளிரென்று இரண்டு அடி விழுந்தது. வலி தாங்க முடியாமல் 'சார்....சார்' என்று கையால் தடுத்தபடி மாடியிலிருந்து இறங்கி வந்து விட்டோம் ஐந்து பேரும்.

பள்ளி தலைமை ஆசிரியர் ஹிட்லர் பேர்வழி. மாணவர்கள் எல்லோருக்கும் அவர் மேல் பயம் உண்டு. ஆகையால் வேறு வழியில்லை என்பதால் நேராக எதிரில் இருந்த மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்று விட்டோம். சிறிது நேரம் கோயிலுக்குள் சுற்றி விட்டு பின்னர் வெளிப்பிரகாரத்தில் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் மேடையில் படுத்து விட்டோம்.

கோயிலுக்குள் எதிரில் இருக்கும் பள்ளி மாணவர்களாகிய எங்களை யாரும் எதுவும் கேட்பதற்கில்லை. மதிய உணவு நேரத்தில் பெரும்பாலான எங்கள் பள்ளி மாணவர்கள் கோயிலின் உள்ளே வெளிப்பிரகாரத்தில் உட்கார்ந்து தான் சாப்பிடுவர். நானும் இரண்டு வருடங்களாக வகுப்பு தோழர்களுடன் இங்கு தான் சாப்பிட்டேன். இதனாலேயே கோயிலின் இண்டு இடுக்குகள் அத்தனையும் அத்துப்படி ஆயிற்று.



மதிய உணவு நேரத்தில் உள்ளே வந்த வகுப்புத் தோழர்களுடன் பேசிவிட்டு ஐந்து பேரும் மதுரை ரயில்வே நிலையத்திற்கு சென்றோம். ஒருவன் மட்டும் பிரிந்து தன் ஏரியா நண்பர்களை பார்க்க செல்வதாக கூறி சென்று விட்டான். ரயில்வே யார்டில் ஏதாவது மூன்று நான்கு தொலைதூர ரயில்கள் எப்பொழுதும் நின்றிருக்கும். க்ளாஸ் கட் அடித்து விட்டு சில நாட்களில் இங்கே வந்து ஏதாவது ஒரு ரயிலில் ஏறி படுத்து தூங்கி மாலையில் வீட்டுக்கு சென்று விடுவோம்.


நாங்கள் எப்படி மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்று சாப்பிடுகிறோமோ அதே போல் பெரியார் பஸ் நிலையத்தில் இருக்கும் U.C. மேல்நிலைப்பள்ளி மற்றும் ரயில்வே ஸ்கூலை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் ரயில் நிலையத்திற்குள் சென்று சாப்பிடுவர். எங்கள் பள்ளி மாணவர்களும் சிலர் சாப்பிட இங்கு தினமும் வருவர். இரண்டு வருடங்களில் இரண்டு தடவை மட்டும் நான் சாப்பிட வந்ததாக ஞாபகம். மற்றபடி கட் அடித்து விட்டு இங்கு வருவது தான் அதிகம்.



யார்டில் நின்ற ஒரு ரயிலில் ஏறி சாப்பிட்டு விட்டு தூங்கி மாலையில் விட்டிற்க்கு சென்று விட்டோம். மறுநாள் நாங்கள் நால்வரும் பேசியபடி பள்ளியின் வாசல் வரை வந்து பின்னர் நேராக சினிமாவிற்க்கு சென்று விட்டோம்.

பெரியார் பஸ் நிலையத்தில் இருக்கும் தங்கரீகல் தியேட்டரில் படம் பார்த்ததாக ஞாபகம். படம் முடிந்ததும் ரயில்வே நிலையத்தில் சாப்பிட்டு விட்டு தூங்கி மாலையில் வீட்டிற்க்கு சென்று விட்டோம். மூன்றாவது நாள் எல்லோரும் நேராக பெரியார் பஸ் நிலையம் வந்து அங்கிருந்து காமராஜர் பழ்கலைக்கழகம் செல்லும் வழியில் உள்ள நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள நண்பனின் வீட்டிற்க்கு சென்றோம்.



நண்பன் எங்களோடு +1 ல் ஒன்றாக படித்தவன். ஆனால் அந்த ஆண்டு +1 ல் பெயில் ஆகிவிட்டபடியால் பிரைவேட் ஆக படித்துக் கொண்டிருந்தான். வீட்டில் அம்மா, அப்பா வேலைக்கும், அண்ணன் கல்லூரிக்கும் சென்று விடுவதால் வீட்டில் தனியாகத் தான் இருப்பான். டிவி பார்ப்பது, ஏதாவது சமையல் செய்து சப்பிடுவது, வீட்டின் பின்னால் இருக்கும் நாகமலையின் அடிவாரத்தில் இருக்கும் கல்குவாரிகளில் தேங்கி இருக்கும் பல அடி ஆழ மழைத்தண்ணிரில் குளித்து, அங்கேயே மீன் பிடித்து சுட்டு சாப்பிட்டு மலை மீதேறி சுற்றுவது, இப்படியே இரண்டு நாட்கள் சென்றது.



மொத்தமாக நான்கு நாட்கள் சென்ற பின்னர் சிலருக்கு பயம் வந்து விட்டது. ஆகையால் என்னைத் தவிர மற்ற மூவரும் வீட்டில் இருந்து அப்பா, அண்ணன், சித்தப்பா என்று யாரையாவது கூட்டி வந்து ஒரு வழியாக வகுப்பிற்க்குள் சென்று விட்டிருந்தனர்.

மிஞ்சியது நானும் இன்னொரு சக மாணவனும் தான். அவனும் அடுத்து வந்த நாள்களில் வீட்டில் இருந்து தன் அண்ணனை கூட்டி வந்து வகுப்பிற்குள் சென்று விட்டான்.

கடைசியில் மிஞ்சியது நான் ஒருவன் மட்டும் தான். வீட்டில் சொல்ல எனக்கு விருப்பமில்லை. சொன்னாலும் ஐந்து நாளும் சொல்லாமல் எங்கேடா சுற்றினாய் என்று அடி விழும். நண்பன் ஒரு யோசனையோடு என்னை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரிக்கு கூட்டிச் சென்றான்.

அந்த ஏரியாவைச் சேர்ந்த, நண்பனின் அண்ணனின் நண்பர்கள் சிலர் அக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் கல்லூரியின் அருகில் இருக்கும் டீ கடைகளில் தான் இருப்பர். அப்படி ஒரு கடையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த அண்ணனின் நண்பர்கள் சிலரிடம் கூட்டிச் சென்றான். அதில் ஒருவனை தனியாக அழைத்து என் பள்ளி விசயத்தை கூறி என் அண்ணனாக பள்ளிக்கு வர முடியுமா ? என்று கேட்டான். தனக்கு பரிட்ச்சை இருப்பதாகவும் இந்த வாரம் முழுவதும் தன்னால் எங்கும் வர முடியாது என்று கூறினான்.

பின் இன்னொருவரிடமும் கேட்ட போதும் இதையே தான் கூறினார். 'சரி இது சரிப்படாது, பேசாமல் விட்டிலிருந்து யாரையாவது கூட்டிகிட்டு வந்துடு, இல்லைனா நாளைக்கு வா, ஏதாவது பண்ணலாம்' என்றான். 'சரி' என்று கூறிவிட்டு நான் வீட்டிற்க்கு செல்ல பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன்.

அடுத்த பஸ் ஸ்டாப்பில் உள்ள டெய்லர் கடையில் ஒருவரை பார்க்கவேண்டும், நீயும் வா, அங்கிருந்து பஸ்ஸில் போய் விடலாம் என்றான். இருவரும் அடுத்த பஸ் நிலையத்தை நோக்கி நடந்தோம். கீழக்குயில்குடி பஸ் ஸ்டாப் என்று ஞாபகம். டெய்லர் கடையில் அவனுக்கு தெரிந்தவரை பார்த்து விட்டு நானும் அவனும் கடைக்கு அருகில் இருந்த பஸ் ஸ்டாப் குடைக்கு கீழே நின்று கொண்டிருந்தோம்.

பத்து நிமிடமாகியும் பஸ் வந்தபாடில்லை. எங்களைப் போலவே நீண்ட நேரமாக அங்கு நடுத்தர வயது ஆசாமி ஒருவர் நின்றிருந்தார். வயது சுமார் நாற்பதுக்குள் இருக்கும். கருப்பு நிறம், வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி அனிந்திருந்தார். சட்டையின் மேல் பகுதியின் இரண்டு மூன்று பட்டன்களை அவிழ்த்து விட்டு காற்றாட நின்றிருந்தார். கிராமத்து மனிதர் போன்ற தோற்றம். கையில் பீடிக்கட்டு. பஸ் ஸ்டாப்பில் எங்கள் மூவரைத் தவிர வேறு யாரும் இல்லை.

நண்பன் என்ன நினைத்தானோ திடிரென்று என்னிடம் 'இவரிடம் வெனும்னா பேசிப் பார்க்கலாமா' என்று கேட்டான். நானும் அவரை சில நிமிடங்கள் மேலும் கீழுமாக பார்த்து விட்டு, சரியான ஆள்தானா, ஒரளவிற்க்கு என்னைப் போன்ற ஜாடை, நிறம், உயரம் உள்ளவரா என்று பார்த்து விட்டு நண்பனிடம் 'சரி பேசலாம்' என்றேன்.

தனியாக நின்று பீடி குடித்துக் கொண்டிருந்த அவரை நெருங்கி எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். 'என்ன விசயம்' என்று அவர் கேட்பதற்க்கு முன்பாகவே நண்பன் என்னைப் பற்றியும், பள்ளியில் நடந்த விவரங்களையும் உருக்கமாக கூறினான்.

'ரொம்ப நல்ல பையன்னே, நல்லா படிப்பான், வீட்டுக்கு தெரிஞ்சா கொன்னுடுவாங்க, நீங்க தான்னே உதவி செய்யனும், உங்க பையனா நினைச்சுகோங்க பணம் வேணுமின்னா கூட தர்ரோம்' என்றான்.

நண்பன் ப்ரைவேட் ஆக படித்து கொண்டிருந்தபடியால் கலர் டிரெஸ்ஸில் இருந்தான். நான் மட்டும் பள்ளி யுனிபார்ம் -ல் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்டில் இருந்தேன்.

நண்பன் அப்படிக் கூறியதும் என்னைப் மேலும் கீழுமாக பார்த்தவர் சிறிது யோசைனைக்கு பிறகு தான் பள்ளிக்கு வருவதாக ஒப்புக் கொண்டார். பள்ளியில் என் மாமா என்று கூறிக் கொள்ளுங்கள் என்று நான் கூறினேன். அவரும் அப்படியே செய்வதாக கூறிவிட்டு 'என் பள்ளி விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார். நண்பனைப் பற்றியும் அவனின் விவரங்களையும் கேட்டுக் கொண்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு மாநகர பஸ்கள் எங்களை கடந்து விட்டுச் சென்றிருந்தன. அடுத்து வரும் பஸ்ஸில் ஏறிச் சென்றுவிடலாம் என்று கூறினார் பெரியவர். தன் பெயர், ஊர், குடும்ப விவரங்களை எங்களிடம் கூறிக் கொண்டிருந்தார். அந்த விவரங்கள் எதுவும் இப்பொழுது என் ஞாபகத்தில் இல்லை.

மூன்றாவதாக ஒரு நகரப் பேருந்து வந்தவுடன் நண்பன் எங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டான். பஸ்ஸில் அவர் டிக்கெட் தான் எடுப்பதாக கூறினார். 'வேண்டாம்னே நான் எடுத்துருரேன்' என்று இரண்டு டிக்கெட் வாங்கிக் கொண்டேன். பெரியார் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோயில் எதிரில் இருக்கும் பள்ளிக்கு செல்ல எப்படியும் ஒரு மணி நேரமாகிவிடும். பஸ்ஸில் வரும்போது என்னிடம் தன் குடும்ப விவரங்களை கூறிக் கொண்டு வந்தார்.

தான் ஒரு விவசாயி என்றும், வயல் வேலைகளுக்கும், கூலி வேலைக்கும் தன் மனைவி செல்வாள் எனவும் கூறினார். தனக்கு இரண்டு குழந்தைகள், மூத்தவன் பையன் பத்தாம் க்ளாஸ் படிக்கிறான். ஆனால் சரியாக படிப்பதில்லை, சேரக்கூடாத சேர்க்கைகளோடு சேர்ந்து பையன் கெட்டு விட்டான். பாடப் புத்தகங்களுக்கு மத்தியில் ஆபாசப் புத்தகத்தை ஒரு நாள் தன் மனைவி கண்டெடுத்தாக சொல்லிக் கொண்டிருந்தார்.

உன்னைப் பார்த்தா நல்ல பையனாட்டம் தெரியுற, உனக்காக நான் பள்ளிக்கு வர்ரேன்' என்றார். லேசாக உடம்பை நெளித்ததை விட நான் வேறு என்ன செய்ய.

பெரியார் பஸ் நிலையம் வந்ததும் அங்கிருந்து இறங்கி பள்ளிக்கு நடந்து சென்றோம். வரும்போது ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்துக் கொண்டு வந்தார். பள்ளிக்கு வந்தவுடன் சிறிது நேரம் நின்று பீடியை குடித்து முடித்துவிட்டு 'உள்ளே போகலாம் வா' என்று என்னைக் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். சட்டையின் பட்டன்கள் மூன்றை அப்படியே திறந்து விட்டிருந்தார். பதட்டமாகி ' அண்ணே சட்டை பட்டன் போடுங்கண்ணே' என்றவுடன் அவரும் 'சரி தம்பி' என்றபடி இரண்டு பட்டன்களை மாட்டிக் கொண்டார்.

நேராக ஹெட் மாஸ்டர் கணபதி இருக்கும் அறைக்கு சென்றால் அவர் இல்லை. அன்று அவர் பள்ளிக்கு விடுமுறை என்றார் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர். அவர் இல்லை என்றானவுடன் பள்ளியின் தாளாளர் இருக்கும் அறைக்கு முன்னால் போய் நின்று கொண்டோம். அவரின் பெயர் ஞாபகமில்லை.

சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்த தாளாளர் என்ன விசயம் என்றார். நான் நடந்தவைகளை கூறி என் மாமாவை கூட்டி வந்திருப்பதாக கூறினேன். என்னோடு வந்தவர் 'சார் நான் பையனோட மச்சான் தான் சார். பையன் என்ன தப்பு பண்ணினாலும் அடிங்க சார் ! அடிச்சு திருத்துங்க. நான் எதுவும் கேட்க மாட்டேன். நல்லா படிச்சு ஒழுங்கா வளர்ந்தா சரி' என்று கூறியது மட்டும் தான் ஞாபகத்தில் இருக்கிறது. அவர் அப்படி பேசியவுடன் எனக்கு பகீர் என்றது. நாமளோ மாமான்னு சொல்லுறோம். இவரோ மச்சான்னு உளர்றாரே நு ஒரு பதட்டம். ஆனாலும் தாளாளர் அதைப் பத்தி ஒன்னும் கண்டுக்கல. வேறு என்ன சொன்னார் என்ற சமாச்சாரமெல்லாம் சுத்தமாக நினைவில் இல்லை. பேசி முடித்த பின்னர் நாளையிலிருந்து க்ளாசுக்கு சென்று விடு என்று கூறி விட்டார் தாளாளர்.

பள்ளியை விட்டு வெளியே வந்தவுடன் கால் மணி நேரம் எனக்கு அறிவுரைகள் சொன்னார். 'பணம் எதுவும் வேண்டுமா' என்று கேட்டேன். 'வேண்டாம்' என்றார். 'வேறு எதுவும் வேண்டுமா ?' என்று கேட்டதற்க்கு 'எதுவும் வேண்டாம், நீ நல்லா படிச்சாலே போதும்' என்றார்.

அருகில் இருந்த டீ கடையில் இருவரும் டீ சாப்பிட்டவுடன் ஒரு பீடியை பற்ற வைத்து கொண்டு என்னிடமிருந்து விடைப் பெற்றுக் கொண்டார்.


சிக்கலான(?) அந்த தருணத்தில் வந்து உதவிய அவரின் முகம் பள்ளி இறுதி நாட்கள் வரை மட்டுமே என் நினைவில் இருந்தது. மறுநாள் வழக்கம் போல் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் யாரும் ஒன்றும் கேட்கவில்லை. பெரும்பாலான சக மாணவர்களுக்கு கூட கடைசி வரை (இன்று வரையும் கூட) இவ்விசயம் தெரியாது, ஒரு, சில மாணவர்களை தவிர. இப்போது அந்த சம்பவத்தை நினைக்கும் போது, அன்று அப்படியெல்லாம் ஒழுங்கினமாக இருந்தது நானா என்றே எண்ணத் தோன்றுகிறது. வேறு என்ன சொல்ல !