Sunday, November 21, 2010

பண்டிகை காலப் பயணங்கள்


என்னைப் போன்ற நடுத்தர மக்களுக்கு சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள்ள இருக்குற சொந்த ஊருக்குப் போறதுக்கு ரெண்டே ரெண்டு வழி தான் இருக்கு. ஒன்னு பஸ்ஸு, இன்னொன்னு ரயில்வே. முன்னெல்லாம் ஊருக்கு போறது ரொம்ப ஈஸியா இருந்துச்சு. வருசம் 365 நாள்ல முழுசா ஏதாவது 10- 15 நாள்கள் அப்புறம் கோடை விடுமுறைகள்ள தான் கூட்டம் இருக்கும். ட்ரெயின்ல வெயிட்டிங் லிஸ்ட் - ம் இருக்கும். மற்ற நாட்கள்ள வண்டி எல்லாம் சும்மா தான் போகும். கோயம்பேடு போனா கையை புடிச்சு இழுக்காத குறையா 'மதுர, மதுர' நு சத்தம் போட்டு கூப்பிட்டு ஆள் ஏத்துவாங்க. அதனால நெனைச்ச நாட்கள்ல ஊருக்கு போக முடிஞசது. 

ஆனா இப்ப அப்படியா ! ஊருக்கு போகணும்னா ஒரு மாசம், இரண்டு மாசம் முன்னாலேயே டிக்கெட் ரிசெர்வ் பண்ண வேன்டியதாயிருக்கு. சரி ரிசெர்வேசன் ஆவது ஒழுங்கா பண்ண முடியுதான்னா அதுக்கும் இப்ப சிக்கல். காரணம் ரயில்வே ஏஜென்ட்களின் அட்டகாசம். அவங்களோட பல்க் புக்கிங். பல பொய்யான பெயர்கள்ல டிக்கெட் எடுத்து வச்சுக்கிட்டு பொங்கல், தீபாவளி சமயங்கள்ல அதிக விலைக்கு வித்து காசு பார்க்கிறாங்க. ரயில்வேக்கு இது தெரிஞ்சாலும் அவங்க ஒன்னும் பண்ணப் போறதில்லை. காரணம் ரயில்வேக்கு இவங்களால வர்ற நிச்சய வருமானம்.

புக்கிங் திறந்த உடனே இருபது நிமிசத்துல எல்லா டிக்கெட்டும் வித்துப் போய் வெய்டிங் லிச்ட் 200 - 300 போய்டும். இதப் பார்த்தவுடனே ஊருக்கு போற ஆசையே இல்லாம போயுடும். காரணம் ரிசெர்வேசன் பண்ணாம பயணம் செய்யிற நாள்ள கோயம்பேட்டிலே பஸ் சீட்டுக்காக நாயா, பேயா அலையிறதும், கண்டக்டரை கணக்கு பண்ணுறதிலேயும் நம்ம ஜீவன் போய்டும். அந்த சமயங்கள்ள கண்டக்டர் ஏதோ கலெக்டர் ரெஞ்சுக்கு மாறிடுவார். அவரைச் சுத்தி பத்து இருபது பேர் எப்பவும் பின் தொடர்ந்தமேனிக்கு இருப்பாங்க. அதுல நானும் ஒருத்தனாத்தான் இருப்பேன்.




இப்ப அந்த கண்டக்டர் பின்னால சுத்துற மாதிரி இல்லாம கொஞ்சம் பரவாயில்லைன்னு சொல்லலாம். காரணம் வரிசை. ரிசெர்வசன் இல்லாம வர்றவங்க வரிசையில நின்னு முதல்ல டொக்கன் வாங்கனும். எதாவது ஒரு ரூட்டில் ஒடிக்கொண்டிருக்கும் டவுன் பஸ் மாதிரியான வண்டிய கொண்டு வந்து நிறுத்துவாங்க. பஸ் வர வர டொக்கன் குடுத்து ஆளை ஏத்தி அனுப்பி விடுவாங்க. இப்படி வர சில பஸ்கள்ல புஷ்பேக் சீட் கிடையாது, டீவி கிடையாது. ஆனா அதுக்குண்டான காச மட்டும் வாங்கிருவாங்க. புஷ்பேக் சீட் இருந்தாலும் ஒன்னு, ரெண்டு வேலை செய்யாது. கண்டக்டர்கிட்ட புகார் செஞ்சா வேற சிட் இல்ல சார், வெனுமின்னா அடுத்த பஸ்ஸுல வாங்கன்னு ஒரு விசில ஊதி நம்ம பதிலுக்கு கூட காத்திராம வண்டிய நிப்பாட்டி 'டுர்ர்ர்ர்....டுர்ர்ர்ர்....' நு எஞ்சின ஒட விடுவான். எல்லார் பார்வையும் நம்ம மேல இருக்க என்ன முடிவெடுக்கிறதுன்னே தெரியாம மண்டை குழம்பிப் போயிரும்.

வெளியூர்கள்ல ஒடுற டவுன் பஸ், ரூட் பஸ், ஷெட் - ல நிப்பாட்டி வச்சு இருந்த ஓட்டை உடைசலான டீலக்ஸ் பஸ் இப்படி எல்லாத்தையும் கொண்டு வந்து நிப்பாட்டுவாங்க. பயணம் செய்யப் போறது பொது மக்கள்தானே. இந்த தீபாவளிக்கு சென்னையில ஒடுன ஏ.சி. பஸ்ஸ கூட சென்னை - திருச்சி ரூட்டா மாத்தி சிறப்புப் பேருந்துனு விட்டாங்க. கட்டணம் அதிகமில்லை, வெறும் 350 ரூபா தான். 




சராசரி நாள்கள்ல ஆம்னி பஸ்கள்ல வசூலிக்கிற கட்டணத்த விட இது கொஞ்ச அதிகம். சரி எப்படியோ ஊருக்குப் போற சந்தோசத்துல ஏதாவது ஒரு வண்டியை புடிச்சு ஏறி உட்கார்ந்தா, நாம எப்ப ஊருக்கு போய் சேருவோம்கிறத சுத்தமா மறந்துடனும். காரணம் அரசாங்க தொ(ல்)லை தூரப் பேருந்துகள்ள இருக்கிற வேகக் கட்டுப்பாடும் இல்லைன்னா நமக்கு வாய்க்கிற டிரைவரோட செயல் வேகமோ தான்.

சென்னையிலிருந்து மதுரைக்கோ இல்ல மதுரையிலிருந்து சென்னைக்கோ குறைந்தபட்ச பயண நேரம் 8 மணி நேரம், அதிகபட்சம் எவ்வளவு நேரம்னு சொல்ல முடியாது. பெரும்பாலான ஆம்னி பஸ்கள்ல இந்த தூரத்த 8 மணி நெரத்துல கடந்து வந்திடுறாங்க. ஆனா அரசாங்க பஸ்ல அப்படி எல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஒரு சமயம் கோயம்பேட்டிலிருந்து சரியா இரவு 9 மணிக்கு புறப்பட்ட அரசாங்க பஸ் அடுத்த நாள் காலைல சரியா 9 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்குள்ள நுழைன்சது. சரியா 12 மணி நேரப்பயணம். இப்படித்தான் இருக்குது நம்ம அரசாங்க தொலை தூரப் பேருந்துகளோட வேகம். ஆம்னி பஸ்ல பிரச்சனை என்னன்னா அவங்க வசூலிக்கிற அதிகப் படியான அநியாய கட்டணம் தான். சாதரண நட்கள்ல 300 - 350 ரூபாய்னா பண்டிகை நாட்கள்ல குறைந்தபட்சம் 500 - லிருந்து ஆரம்பிக்கும். இந்த தீபாவளிக்கு சென்னை - மதுரை அதிகபட்சம் 800, 900, 1000 வரை போச்சு. தீபாவளி முடிஞ்சு சென்னை வரும் போது 600 கொடுத்து தனியார் ஆம்னி பஸ்ல தான் வர வேண்டியிருந்தது. காரணம் ' சிறப்புப் பேருந்துகள் எதுவுமே இப்ப இல்ல. அப்படியே வந்தாலும் இரவு பத்து மணிக்கு மேல தான் நிலவரமே தெரியும்' நு சொல்றாரு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருக்கிற அரசாங்கப் பேருந்து நிலைய அறை அதிகாரி. வேற வழியில்லாம தான் என்னப் போல பலர் ஆம்னி பஸ்ல வர வேண்டியதா போச்சு.




மதுரையில இரவு 9.45 எடுத்த ட்ரைவர் விரட்டு விரட்டு - நு விரட்டி சரியா காலை 5.45 மணிக்கு தாம்பரம் கொண்டு வந்து சேத்துட்டார். மதுரையில ஆக்ஸிலேட்டர்ல வச்ச கால சென்னையில வந்து தான் எடுத்தார் ட்ரைவர். இடையில கொஞ்சம் கால் ரெஸ்டுக்கு ஒரே ஒரு மோட்டல்ல நிப்பாட்டினாங்க. லியோனி பட்டிமன்றம், சில கேட்க சகிக்காத ரீ-மீக்ஸ், குத்து பாடல்கள கேட்டுகிட்டு இயற்கை உபாதயை கழிச்சதோட சரி. வேறு எதுவும் வாங்கி சாப்பிடல. காரணம் எல்லோருக்கும் தெரிஞ்சது தானே. மலைக்க வைக்கிற விலையும், தரமில்லாத உணவும் தான். அவங்கள தட்டிக் கேட்க, முறைப்படுத்த ஒரு நாதியும் இல்ல.

சரி இந்தத் தொல்லையே வேனாம். ட்ரெய்ன்ல போலாம் அப்படின்னு எக்மோர் ஸ்டேசனுக்கு வந்தா தலையே கிறு கிறுத்துப் போயிடும். டிக்கெட் எடுக்க ஒரு பெரிய வரிசையே நிக்கும். என்னைக்கு டிக்கெட் வாங்கி நாம என்னைக்கி ஊருக்கு போகப்போறோமோன்னு நினைச்சுகிட்டு சீக்கிரமா நகருர வரிசையில ஓடிப் போய் நின்னா பக்கத்துல இருக்குற வரிச ரொம்ப வேகமா போகும். நாம நிக்கிற வரிச நகலவே நகலாது. எப்படியோ டிக்கெட் வாங்கி ப்ளாட்பாரத்துக்கு வந்தா எந்த ட்ரெயின் எந்த ப்ளாட்பாரத்துல நிக்கிதுனு கண்டுபுடிக்கனும். அன்ரிசர்வடு கோச் எந்த இடத்துல நிக்கும்னு விசாரிச்சு ஓடி ஆடி அங்க போயி பார்த்தா நம்மளைப் போல நமக்கு முன்னாலேயே நூத்துக் கணக்கான பேரு பொட்டி படுக்கையோட வரிசை கட்டி நிப்பானுங்க.

சீக்கிரமா போனா வரிசையில முன்னால நிக்கலாம். இல்லைன்னா கடைசியிலதான் நிக்கனும். இடம் கிடைக்கிறது குதிரை கொம்பு தான். ஏற்கனவே உள்ள போனவன் நம்மளை மேழும் கிழும் பார்த்துட்டு போனா போகுதுன்னு இடம் குடுத்தா தான் உண்டு, இல்லையினா ஆள் வருவாங்க சார் - நுட்டு நீட்டி படுத்துருவான்.

இப்படியான சில சந்தர்ப்பங்கல்ல  ட்ரெயின் படிக்கட்டுல உட்கார்ந்துகிட்டும் நாற்றமடிக்கும் பாத்ரூம் பக்கத்துலயிம் நின்னுகிட்டே போன கொடுமையான அனுபவங்களும் எனக்கு கிடைச்சிருக்கு. அவரசமான சமயங்கள்ள போறதுக்கு பாத்ரூம் கதவை உள்ள தள்ளினா அங்க எவனாவது ஒருத்தன் தன் பொட்டி படுக்கையோட, இல்ல எதாவது ஒரு பார்சல வச்சு குத்த வச்சு உட்கார்ந்து இருப்பான். எப்படி இருக்கும் அந்த நேரத்துல. சரி நாம நின்ன இடத்துக்கே போவோம் அப்படின்னா அந்த இடத்தில அப்பாடான்னு எவனாவது காலை, கையை நீட்டி உட்கார்ந்தோ, படுத்தோ நம்மல பார்க்காத மாதிரி இருப்பான். அவன தள்ள சொன்னா எதோ எதிரிய பார்க்குற மாதிரி பார்த்து ஒதுங்குவான். இன்னும் சில பேர் பொருட்கள் வைக்கிற மேல் அடுக்குல பொருட்களை விலக்கி வச்சுட்டு நல்லா நீட்டி படுத்திருவாங்க.




நடைபாதையில போக வர்றதுக்கு ஒரு இன்ச் இடம் கூட இருக்காது. சீட்டில் உட்கார்ந்து இருக்கவன் பாத்ரூம் போகனும்னா குரங்காட்டம் எங்கேயாவது காலை, கையை வச்சு தொங்கிகிட்டு வரவேண்டியதிருக்கும். அதுலயிம் அந்த சமயங்கள்ள பெண்கள் படுற பாடு பார்க்கவே பரிதாபமா இருக்கும். குடும்பத்தோட வந்து குழைந்தைக்கு தொட்டில் வேற கட்டி ஆட்டிகிட்டு வர்ற குடும்பமும் இருக்கும். சில நாட்களுக்கு முன்னால வர ட்ரைன்ல அன்ரிசர்வ்டு கோச் - ல இடம் புடிக்கனும்னா ஒரு காரியம் செய்வேன். செங்கோட்டை வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் விரைவு வண்டி, தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் எல்லாம் ஏழாவது, எட்டாவது பிளாட்பாரத்துல நிக்கும். புறப்படுற நேரம் எட்டு, எட்டரை மணி ஆனாலும் யார்டில் இருந்து அந்த ரெண்டு வண்டிகளையும் மதியம் பன்னிரண்டு, ஒரு மணி வாக்குல பிளாட்பாரத்துல கொண்டு வந்து நிறுத்திருவாங்க. இரவு புறப்படுற வரைக்கும் அங்க தான் நிக்கும்.

ஒரு நாலரை, ஐந்து மணிக்கு அங்க போனா ஒருத்தன் கூட இருக்க மாட்டான். நாம தான் மொத போனி. தனியா இருக்குற சீட்டுல பேக்கை வச்சுட்டு வெளியே வந்து வேடிக்கை பார்க்க நின்னுடுவேன். என்ன கிட்டத்தட்ட மூணு, மூண்றரை வரைக்கும் அங்கேயே கிடக்கனும். போரடிக்கும். இப்படி சீட்டு பிடிக்க சிக்கிரமா வர்ற வித்தைய கோவில்பட்டியை சேர்ந்த  நண்பன் ஒருத்தன் சொல்லிக் கொடுத்தான். அவனும் அப்படித்தான் ஏறுவான் இங்க வந்து. பெரும்பாலான பேருக்கு இப்படி ஒரு வழி இருக்கிறது தெரியாது. அரக்க பரக்க கடைசி நேரத்துல ஒடி வந்து இடம் கிடைக்காம அலைந்து திரிந்து வண்டி கிளம்பும்போது பார்த்தா எங்கேயாவது ஒரு பாத்ரூம் பக்கத்துல மூக்க பொத்திகிட்டு நின்னுகிட்டு வருவாங்க. ஏழு, எட்டரை மணி வாக்கில எதிரில் இருப்பவரை இடத்தை பாத்துக்க சொல்லிட்டு வெளியே போய் சாப்பிட்டு வந்துடுவேன். நண்பர்கல பார்க்கவும், பிறந்து வளர்ந்த மண்ணுல கால் வைக்கப் போறோமேன்கிற சந்தோசத்திலயும் இந்தக் கஷ்டமெல்லாம் தெரியாது. ஆனா இப்ப அதுக்கும் வச்சுட்டான் ஆப்பு. முன்ன போல இல்லாம இப்ப கிளம்புற நேரத்துக்கு ஒரு அரைமணிக்கு முன்னாலதான் பிளாட்பாரத்துக்கே கொண்டு வர்றான். அதுக்கும் இப்ப வரிசை வேற.

பயணங்கள் என்னைக்குமே மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் தர்ர ஒரு விசயம். ஆனா அதுவே பண்டிகைகள் சமயத்துல நரக வேதனை தர்ர அனுபவமா மாறுறது தான் கொடும.