Showing posts with label tamilnadu. Show all posts
Showing posts with label tamilnadu. Show all posts

Saturday, March 21, 2015

Parvathamalai Travel

பர்வதமலை - கடலாடி வழியில்

பர்வதமலையை பற்றி கேள்விப்பட்டது இல்லை என்றாலும், இரண்டு வருடங்களுக்கு முன்பு அலுவலகத்தில் கூட வேலை செய்யும் ஒரு நண்பர் மூலமாக அந்த மலையை பற்றி தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஏறுவதற்கு கஷ்டமான மற்றும் சித்தர்கள் வாழும் மலை என்று சொல்லி எங்களை அவ்வப்போது கூப்பிடுவார். அவர் அடிக்கடி சென்று வருபவர். என்னால் அப்பொழுது போக முடியாவிட்டாலும், இப்பொழுது போகும் சந்தர்ப்பம் வாய்த்தது. திடிரென்று முடிவான பயணம். நானும் நண்பர்கள் இருவர் என்று மூன்று பேராக பர்வதமலை பயணம் கிளம்பினோம். எந்த புது இடத்திற்கு கிளம்பும் முன்பும் அந்த இடங்களை பற்றியும், போகும் வழி, தங்கும் இடம் பற்றியும் இணையத்தில் தேடி தெரிந்து கொள்வது வழக்கம். அதே போல் அங்கு ஏற்கனவே சென்றவர்களின் அனுபவங்களையும் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்வது வழக்கம். அப்படி மற்றவர்களின் அனுபவங்களை படித்த பிறகு பர்வதமலைக்கு போகவேண்டும் என்ற ஆவல் அதிகமானது என்னவோ உண்மை. இணையத்தில் காணப்பட்ட எல்லா தகவல்களும் இரண்டு வருடங்களுக்கு முற்பட்டவையாக இருந்தன. சமீபத்தில் சென்றவர்களின் அனுபவங்கள் ஏதும் இல்லை. மலைமேல் சிவன்கோயில் இருப்பதால் பவுர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் பயணம் செய்தவர்களின் அனுபவங்களே  அதிகமாக இருந்தன. இரவில் மலையேறி, சாமி தரிசனம் முடித்து காலையில் இறங்குபவர்களின் அனுபவங்கள். எங்களுக்கும் அவ்வாறு இரவில் தங்கி காலையில் இறங்கவே ஆசை. ஆனால் கோவில் கட்டுமானப்பணி நடப்பதாலும்,  மலைமேல் இருக்கும் தற்போதைய நிலமை தெரியாததாலும் முதல் முதலாக  பகல் நேரப் பயணம் போவதே சரி என்று முடிவு செய்து ஒரு வியாழன் இரவு பன்னிரண்டு மணியளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலைக்கு பஸ் ஏறினோம்.

கோயம்பேடு பேருந்து நிலையம்

அதிகாலை நான்கு மணிக்கே திருவண்ணாமலை பேருந்து நிலைய விஜயம். பர்வதமலை போவதற்கு கடலாடி, தென்மாதிமங்கலம் என்று இரு வழிகள் இருந்தாலும் நாங்கள் கடலாடி வழியையே தேர்ந்தெடுத்தோம். கடலாடி வழியின் தூரம் குறைவு, ஆனால் கடினமான மலைப்பாதை பயணம். Trekking செய்ய ஏற்றது. தென்மாதிமங்கல வழியோ கடினமில்லாத நீண்ட தரைவழி, படிக்கட்டு மற்றும் குறைந்தளவு மலைப்பாதை பயணம். பெண்கள், குழந்தைகள் என்று குடும்ப சகிதமாக வருபவர்களுக்கு ஏற்றது. ஆனால் இரண்டுமே ஓரிடத்தில் சந்தித்து ஒரே பாதையாக மலையுச்சி கோவிலுக்கு செல்லும். Trekking ஆர்வம் இருந்தபடியால் நாங்கள் கடலாடி வழிப்பயணத்தை தேர்ந்தெடுத்தோம்.

கடலாடிக்கு முதல் பஸ் 6.00 மணிக்கு  என்று சொன்னார்கள். நேரம் இருந்தபடியால், ஆட்டோ பிடித்து திருவண்ணாமலை கோவில்  கிளம்பினோம். 40.00/30.00 ரூபாய் ஆட்டோ சார்ஜ். கோவிலை சுற்றி நிறைய குளிக்கும் விடுதிகள் இருந்தபடியால் இந்தப் பயணம். Bus stand எதிரிலேயே ஒரு குளிக்கும் விடுதி இருக்கிறது. நாங்கள் போன போது மோட்டார் வேலைசெய்யவில்லை. ஒரு இருட்டான சந்துக்குள் இருந்தது விடுதி. அது போக போகும் பாதை வேறு சுத்தம் இல்லை. குடித்துவிட்டு போடும் பாட்டில் சிதறல்களும் ஆங்காங்கு கிடக்கிறது என்பதால் கோவில் அருகில் சென்று விடுவது உத்தமம்.  அங்கு குளித்து முடித்து அண்ணாமலையார் கோபுர தரிசனம் செய்து மறுபடியும் பேருந்து நிலையம் சென்றோம்.

திருவண்ணாமலை கோபுர தரிசனம்

கடலாடி வழியாக தென்மாதிமங்கலம் செல்லும் பேருந்து புறப்பட தயாராக நின்றிருந்தது. 'பர்வதமலை செல்ல நீங்கள் தென்மாதிமங்கலத்தில் இறங்குவதே சரியாக இருக்கும்' என்று பேருந்து ஓட்டுனர் மற்றும் சில பயணிகள் வழி  கூறினர்.  ஆனாலும் நாங்கள் கடலாடி வழியே போவதென்று முடிவு செய்துவிட்டபடியால் கடலாடியிலயே இறங்கினோம். பஸ் டிக்கெட் 12.00 ரூபாய் ஒருவருக்கு. அரைமணி நேரப்பயணம். Bus stand-ல் இறங்கிய உடனே 'விட்டோபானந்தர் ஆசிரமம்' செல்லும் வழி என பலகை தென்பட்டது. இந்த ஆசிரமம் வழியாகத்தான் செல்லவேண்டும். Bus stand-ல் இருந்து ஆசிரமம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் இருக்கும். சமவெளிப் பயணம். அதற்க்கு பின்னர் ஆசிரமத்தில் இருந்தே மலைப்பகுதி ஆரம்பிக்கிறது. மலைப்பகுதி தூரம் மட்டும் சுமாராக 5.5 கிலோமீட்டர். மலை மேலே ஏறுவதற்கு உடலில் பலம் வேண்டுமே.  ஏறுவதற்கு முன்பு ஏதாவது சாப்பிட்டு விடலாம் என்றெண்ணி அருகில் இருந்தவர்கள்களிடம் விசாரித்தோம். அருகிலேயே மூன்று சிறிய உணவகம் இருப்பதாக  கூறினர். மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து, ஒரு பதினைந்து நிமிடங்கள் காத்திருந்து சுவையான இட்லி, வடை, பூரியை சாப்பிட்டு முடித்தோம். அவ்வுணவகம் சரியாக காலை 7.15 க்கு ஆரம்பமாகிவிடுகிறது. பர்வதமலை பயணத்தை சரியாக 7.30 மணிக்கு கடலாடி கிராம bus stand-ல் இருந்து ஆரம்பித்தோம். அதிகாலை நேரம். இளம்வெயில். விட்டோபானந்தர் ஆசிரமம் அடைந்தவுடன், அங்கிருந்து மலையேற்றம் தொடங்கியது.

மேகங்கள் தொட்டுச் செல்லும் மலைக்கோவில்

கடலாடி வழியில் பயணம்

ஆசிரமம் முன்பே ஒரு பெண்மணி சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். தண்ணீர், பிஸ்கட், டீ போன்றவைகள் கிடைக்கும். இதை விட்டால் வார நாட்களில் மேலே கடைகள் இருக்கும் என்று சொல்ல முடியாது. சனி, ஞாயிறு, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மேலே கடைகள் இருக்கும். சமவெளியாக போகும் பாதை, போகப்போக ஏற்றம் காண்கிறது. நாம் மலையேறும் பாதை உண்மையில் பாதையே அல்ல. மழை பெய்தால் வெள்ளம் புரண்டு வரும் வழி. ஆகையால் மழைக்காலங்களில்(monsoon time) தென்மாதிமங்கல வழி செல்வதே சிறந்தது. இது Reserved forest area வேறு.

கடலாடி வழி செல்லும் பாதை - உண்மையில் மழை பெய்தால் வெள்ளம் புரண்டு வரும் வழி இது

இதற்க்கு முன்னர் இங்கு வந்தவர்களின் அனுபவங்களை வலைத்தளங்களில் படிக்கும்போது அவர்கள் குறிப்பிட்ட ஒரு விசயம் 'புதியவர்களாகவோ அல்லது வழி தெரியாமல் தடுமாறுகிறவர்களோகவோ இருந்தால் நாய் ஒன்று எங்கிருந்தோ வந்து துணையாக வழிகாட்டும் என்பதே. எங்களுக்கும் அப்படியான ஒரு அனுபவம் வாய்த்தது. ஆசிரமத்தை கடந்தவுடன் எங்கிருந்தோ ஒரு கருப்பு வண்ண நாய் வந்து எங்களோடு ஒட்டிக்கொண்டது. நாய் என்று சொல்வதை விட 'பைரவர்' என்று சொல்வது சரியாக இருக்கும்.

வழியில் உள்ள சிறிய கோவில்

பைரவரின் துணை

பலரும் தங்கள் அனுபவத்தில், நாய் சிறிது தூரம் தங்களோடு பயணித்து பின்னர் திடிரென்று காணமல் போய்விடும் என்று சொல்லி இருந்தனர். நாங்களும் அவ்வாறே நினைத்தோம். ஆனால் எங்களுக்கு ஆசிரம அடிவாரத்தில் இருந்து எங்களோடு பயணித்த 'பைரவர்' கடப்பாரை படி வரை துணைக்கு வந்தது. கரடுமுரடான மலைப்பகுதியில் மூவரோடு நால்வராக பயணித்து எங்களோடு ஐக்கியமானது. முழுவதுமாக ஐந்து கிலோமீட்டர் கஷ்டமான பயணம். ஆனாலும் சில இடங்களில், பாறை ஏற்றங்களில் ஏற கஷ்டப்பட்டது. எங்களிடமிருந்த பெரும்பாலான தண்ணீர், ரொட்டி வகைகளை அதற்க்கு உணவாக அளித்தோம். அந்தக் கடும் பயணத்தில் தன்னை வருத்தி எங்களோடு பயணித்தது உண்மையில் ஆச்சர்யம்.

மலை அடிவாரம் தொடங்கி

மலை உச்சி வரை

மலை உச்சி வரை

 மலையின் பாதிவழியில் சில குரங்குகள் கூட்டம். நாய் இருந்ததினால் தைரியமாக முன்னேறினோம். குரங்குகளுக்கு, நாய்கள் ஆகாது. ஆகையால் எங்கள் கிட்டே வர பயந்தது. சுற்றிலும் தெரிந்த மலைப் பிரதேசங்கள், நிலப்பரப்புகள், பரந்த வான்வெளி என உடலும், மனமும் பிரபஞ்ச வெளியில் லயிக்க ஆரம்பித்தது என்னவோ உண்மை.

இயற்கையை மிஞ்ஞ எதுவுமில்லை

மலை ஏற்றத்தின் போது

மலையில் மூலிகைகள் அதிகம் என்பதால் மூலிகைக் காற்று உடம்பினுள் சென்று வர தீராத நோயும் தீர்ந்துவிடும் என்பர். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் போது அதிலிருந்து சில பகுதிகள் ஆங்காங்கே கீழே விழுந்தன என்றும் அவ்வாறு விழுந்த மலைகளின் ஒரு பகுதிதான் பர்வதமலை என்றும் கூறப்படுகின்றது.  ஆகையாலே இங்கு மூலிகைகள் அதிகம். உயிர் காக்கும் சஞ்சீவனி மூலிகை இங்குள்ளது என்றும், ரசவாதம் செய்யப் பயன்படும் சில முக்கிய மூலிகைகள் இங்கு உள்ளன என்பதும் சிலரது கருத்தாக உள்ளது. அனுதினமும் சூட்சும ரீதியாக சித்தர்கள் வந்து வாசம் செய்யும் மலையாகவும் இது போற்றப்படுகிறது.  சில நேரங்களில் சித்தர்கள் சூட்சும ஒளி உடலை எடுத்து, பறவையாயாகவோ, விலங்காகவோ, வேறு மனித ரூபத்திலோ மலை மீது இறைவனை வழிபட செல்வதுண்டாம். அவர்களை சாதாரணமாக பார்க்க முடியாது.  அவர்கள் எடுத்து செல்லும் கற்பூரம், அகர்பத்தி , சாம்பிராணி, சந்தனம்  போன்ற பொருட்களின் வாசனை மூலம் அவர்கள் கடப்பதை அறியலாம் என்று சிலர் கூறுவர். சில நேரங்களில் சித்தர்கள் தேனீ, பைரவர் (நாய்), போன்ற வடிவத்தில் உண்மையான பக்தர்களுக்கு வழிகாட்டும் விதமாக மலை ஏறும் வரை காட்சி கொடுப்பார்கள். இப்படியாக இவ்வாறு பலர் கூறி இருக்கின்றனர். உண்மையா புருடாவா என்பது அவரவர்களின் நம்பிக்கை. 

இயற்கையை மிஞ்ஞ எதுவுமில்லை

இயற்கையை மிஞ்ஞ எதுவுமில்லை

ஒருவழியாக கடைப்பாரை படியை நெருங்கும் பொழுது மணி 11.00. ஒரு பெண்மணி அப்பொழுதுதான் தன் கடையை பரப்பிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 3000 அடி உயரத்தில்.  தேனிர் மற்றும் தண்ணீர், குளிர்பானங்கள் விற்கும் கடை. விலை அதிகம் தான். ஆனால் அந்த இடத்திற்கு அவ்வளவு தருவது தகும். ஒரு லிட்டர் தண்ணிர் கேன் 35.00 ரூபாய். அதிகம் என்று நினைப்பவர்கள் கீழிருந்தே தண்ணிர் எடுத்து வருவது உத்தமம். மலைப்பயணம் என்பதால் அதிக தண்ணிர் தேவைப்படும். தினசரி வைத்திருந்த கடையை forest department கெடுபிடியால் சனி, ஞாயிறு மற்றும் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மட்டுமே இப்போது திறக்கிறார்.

வழியில் தென்படும் கடை

 நாங்கள் மலைமேல் செல்வதால் தன்னிடமிருந்த ப்ளாஸ்டிக் பாட்டிலில் இருந்த 'கீரைக்கூட்டை' மேலேயுள்ள ஆசிரமத்தில் சேர்த்து விடுமாறு கூறினார். சிறிது தூரம் சென்றதும் வழி ஏதுமின்றி ஒரு பெரிய பாறையிலான செங்குத்தான மலை மட்டுமே இருந்தது. அதன் உச்சியில் கோவில் மற்றும் விட்டோபானந்தர் ஆசிரம மடம்.

நெட்டுப்பாறை

 பாறையில் ஏறுவதற்கு இரு வழிகள் உண்டு. ஒன்று கடப்பாரை படி, மற்றொன்று ஏணிப்படீ. செங்குத்தான பாறையின் இரண்டு பக்கங்களிலும் கடப்பாரையால் துளையிட்டு அவைகளை ஒன்றோடொன்று சங்கிலியால் கட்டியிருந்தனர். கடின மலைப்பாதை. உயரம் பயம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் பயமாக இருக்கும். கீழே பார்க்காமல் இறைவனை நினைத்து ஏற வேண்டும். எல்லாம் அவன் செயல்.  இறைவன் அருளால் இதுவரை ஒரு சிறு விபத்தும் நேரவில்லை என்று சொல்லப்படுகிறது.
கடப்பாரை வழி தொடக்கம்
இன்னொன்று ஏணிப்படி. செங்குத்தான மலையின் மேல் பெரிய இரும்பு ஏணிகளை ஆங்காங்கு வைத்திருக்கின்றனர். அதன் மூலமாகவும் ஏறலாம்.

நாங்கள் கடப்பாரை படி வழியாக ஏறினோம். இடையிடையே மேலே போக வழி இல்லாத இடங்களில் தண்டவாளம் போன்ற இரும்பு பலகையை போட்டிருந்தனர். அதன் மேல் நடந்து செல்ல வேண்டும்.

தண்டவாளப்படி
இதுபோக ஆகாயப்படி என்ற ஒன்றும் உண்டு. அந்தப் படிகளின் கீழிருந்து மேலே பார்க்கும் போது, பாதை ஆகாயவெளிக்கு செல்வது போல் இருக்கும். Way to Sky.

ஆகாயப் படி

 சரியாக பண்ணிரண்டு மணி அளவில் கோவிலை சென்றடைந்து ஆசிரமத்தில் உணவுப்பொருளை அங்கிருந்த ஒருவரிடம் ஒப்படைத்தோம். அங்கிருந்த ஆசிரம குகையில் எங்களை பிரார்த்தனை செய்யவும், தியானம் செய்யவும் அப்பெரியவர் உள்ளே அனுப்பினார். உள்ளே நல்ல குளிர்ச்சி. உள்ளே ராஜராஜேஸ்வரி விக்ரகம் மற்றும் சில சாமி படங்கள் இருந்தன. சிறிது நேரத்தில் எங்களுக்கெல்லாம் மதிய உணவாக பொங்கல் அன்னதானம் நடந்தது. களைப்புடன் மேலேறி வருபர்களுக்கு இவ்வாசிரமமே அன்னதானம் வழங்கி வருகிறது. மலைக்கு வரும் பக்தர்கள் ஆசிரம்மத்திற்க்கு தங்களால் முடிந்த நன்கொடை வழங்குவது நல்லது. யாரொ ஒருவர் செய்த தர்மத்தினாலே(நன்கொடை), இன்று எங்களால் சுவையான மதிய உணவருந்த முடிந்தது. உணவோடு நல்ல குளிர்ச்சியான, சுத்தமான மலைத்தண்ணிர் தருகிறார்கள். 20,000 லிட்டர் கொள்ளளவில் ஒரு தொட்டி கட்டி மழைநீரை சேமித்து வைத்துப் பயன்படுத்துகிறார்கள். எங்கள் மூவரோடு மற்றுமொரு நான்கு இளைஞர்கள் உணவருந்தினர். தஞ்சாவூர் அருகில் இருக்கும் பட்டுக்கோட்டையில் இருந்து வந்திருப்பதாகவும்.... இது போல சதுரகிரி, வெள்ளியங்கிரி மலைகளில் ஏறியிருப்பதாகவும் கூறினர். மற்ற மலைகளை விட பர்வதமலை சற்று கடினமாக இருப்பதாக கூறினர்.



வெள்ளிக்கிழமை ஆதலால் கூட்டம் இல்லை. அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மலைமேல் ஏறுவர் என்றும், சனி, ஞாயிறுகளில் பல நூறு பேர் ஏறுவர் என்றும் ஆசிரம பெரியவர் கூறினார். அவ்வாசிரமம் மகான் மௌனயோகி விட்டோபானந்தரை சேர்ந்தது. இவர் சுமார் 20 வருடங்களாக மலைமேல் இருக்கும் குகையில் கீழே இறங்காமல் தவம் செய்து  வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த எல்லா வருடங்களிலும் யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்ததினால் மௌனயோகி என்று அழைக்கப்படுகிறார்.

இவர் 2010-ல் காலமாகிவிட்டபடியால் அவரின் நேரடி சிஷ்யரே தற்போது மடத்தை கவனித்து வருகிறார். அன்னதானம் முடிந்தவுடன் பெரியவரிடம்(சிஷ்யர்) விடைபெற்று, அருகில் இருக்கும் கோவிலை நோக்கி நடந்தோம். ஸ்ரீ மல்லிகார்ஜுனர் மற்றும் ஸ்ரீ பிரம்மராம்பிகை தாயார் குடிகொண்டுள்ள இடம்.  இவர்கள் போக, விநாயகர், வள்ளிதேவசேனா சமதே முருகர், வீரபத்திரர், காளி, அகத்தியர், கோரக்கர் போன்றோர்களையும் தரிசிக்கலாம். கற்களால் ஆன கோவில் சுமார் ரெண்டாயிரம் வருடங்களாக அம்மலையுச்சியில் இருந்தாலும், தற்போது தான் நம் ஊர்களில் இருப்பது போன்ற கோவில் அமைப்பில் கோவில் கட்டும் பணி நடைபெறுகிறது.

புதுப்பொழிவுடன் கட்டப்படும் கோவில்

புதுப்பொழிவுடன் கட்டப்படும் கோவில்

கோவில் உள்ளே

கோவில் உள்ளே


அழகிய காட்சி
இதை முன்னெடுத்துச் செய்பவர்கள் சென்னையில் உள்ள "திருவல்லிக்கேணி ஸ்ரீ பருவதமலை அடியார்கள் திருப்பணி சங்கம்" என்ற அமைப்பினர். மாவட்ட கலெக்டர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதியுடன் கோவில் திருப்பணி நடக்கிறது. கட்டுமானப் பொருட்களை மேலே கொண்டு செல்வது கடினம் ஆகையால், விரும்பும் பக்தர்கள் மூலமாக எல்லாமே தலைச்சுமையாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது. வெயிலின் தொடக்க காலமான மார்ச் மாதத்தில் செல்வதால் மழையோ, மேகங்களோ இல்லை. வறண்ட வானிலை. கோவிலில் பூசாரி என்று எவரும் இல்லை. நாமேதான் பூஜை செய்யவேண்டும். கோவிலின் உள்ளே சூடம், பத்தி போன்றவைகளை கொளுத்துவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் இருப்பதால், சூடம், பத்தி போன்றவைகளை வெளியே இருக்கும் ராட்சத சூலாயுதம் முன்பு கொளுத்தினோம்.


பின்னால் தெரிவது ஜவ்வாது மலைத் தொடர்கள்

உள்ளே இருக்கும் சிவலிங்கம் மற்றும் மற்ற சாமி சிலைகளுக்கு விபுதி அபிஷேகம் மட்டும் செய்தோம். வந்த களைப்பு நீங்க சிறிது நேரம் ஒய்வெடுத்து, கோவிலை சுற்றி வந்தோம்.

சிறிய இளைப்பாறல்

கையில் இருக்கும் அத்தனையும் புடுங்கி விடும். ஜாக்கிரதை

கையில் இருக்கும் அத்தனையும் புடுங்கி விடும். ஜாக்கிரதை

வேலைகள் நடந்தபடி இருக்கிறது. இன்னும் நான்கு மாதங்களில் கும்பாபிஷேகம் என்று அங்கிருந்த திருப்பணி சங்க உதவியாளர் சொன்னார். கோவிலில் மின்சார வசதி இல்லாததால் ஜெனரேட்டர்உதவியுடன் இரவு பன்னிரண்டு மணி வரை மட்டுமே மின்விளக்குகளை  ஒளிரவிடுகின்றனர். கதவுகள் இல்லாத கோவில்.
பர்வதமலை கடல் மட்டத் திலிருந்து சுமார்நான்காயிரத்து ஐந்நூறு அடி உயரம் கொண்டதாக சொல்லப்படுகிறது. திருவண்ணா மலையைவிட இந்த மலை உயரம். நாங்கள் ஒய்வெடுத்துக் கொண்டிருக்கும்போதே ஒரு குடும்பம் மேலேறி வந்தது. அதில் ஒரு சிறுமியும், ஒரு குழந்தையும் அடக்கம். இச்சிறிய குழந்தைகளை கூட்டிக்கொண்டு எப்படி மேலேறி வந்தார்கள் என்று ஆச்சர்யம். அதுவும் இந்த செங்குத்தான பாறைகளில்.



சரியாக 2.30 மதியம் மலையை விட்டு கீழே இறங்க ஆரம்பித்தோம். மேலேரும்போது கடப்பாரை படி வழியாக வந்தபடியால், கீழிறங்கும் போது ஏணிப்படி வழியாக இறங்கினோம். எனக்கு உயர பயம் உள்ளபடியால் உடல் நடுங்க கைகளை அழுந்தப்பிடித்து மெதுவாக இறங்கினேன். தவறியும் கீழே பார்க்கவில்லை. படிக்கட்டை மட்டும் பார்த்து இறங்க வேண்டியதாயிற்று.

ஏணிப்படி
நம்மோடு துணைக்கு வரும் பைரவரால் கடப்பாரை படி வரையுமே வரமுடியும். அதற்க்கு மேல் அதனால் வரமுடியாது. அசதியில் எங்களோடு வந்த பைரவரை நாங்கள் மறந்தே விட்டோம். மேலிருந்து இறங்கும்போது  எதார்த்தமாய் நான் பார்க்க, அங்கே மரத்தின் அடியில் இருந்த பாறையில் நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தது எங்கும் போகாமல். மலை அடிவாரத்தில் இருந்து எங்களோடு பயணித்த காரணத்தால், அதைப் பிரிய மனமின்றி நாய் இருந்தால் கடலாடி வழி, இல்லையேல் தென்மாதிமங்கலம் வழி என்று முடிவு செய்திருந்தோம். ஆனாலும் கடலாடி வழி கரடுமுரடான பாதை என்பதால் எங்கள் உள் விருப்பம் தென்மாதிமங்கலமாகத்தான் இருந்தது. நாங்கள் இறங்க நாயும் எங்கள் கூடவே இறங்கி வந்தது. செல்லும் வழியில் இருந்த கடையின் பெண்மணியிடம் இது குறித்து கேட்டபோது நீங்கள் விரும்பும் வழியில் செல்லுங்கள், நாய் அதுவாகவே அதன் இடத்திற்கு சென்று விடும், பைரவர் துணைக்கு வருவது என்பது தலபுராணத்திலேயே உள்ளது எனவும், அது சிறு வயதில் இங்கே தான் வளர்ந்தது என்று கூறினார். எங்களோடு வந்த நாய் போக அங்கு மற்றொரு வெள்ளை நாயும், brown கலர் நாயும் இருந்தது. கடலாடியும், தென்மாதிமங்கலமும் சேரும் இடம் வந்தவுடன் நாங்கள் தென்மாதிமங்கல வழியில் செல்ல முடிவெடுத்தோம்.

கடலாடியும், தென்மாதிமங்கலமும் சேரும் இடம்.

ஆனாலும் அவ்வழியிலும் எங்களை பின்தொடர்ந்து வந்தது. மறுபடியும் கடினமான பயணம் அது மேற்கொள்ள நாங்கள் விரும்பாததால், மேலேறிக்கொண்டிருந்த இரு பெரியவர்களிடம் ஒரு பிஸ்கட் பாக்கெட்டைக் கொடுத்து அதை மறுபடியும் மேலே கொண்டு செல்ல வேண்டினோம். அவர்களும் அவ்வாறே செய்ய சிறிது குழப்பத்துடன் அவர்கள் பின்னே மேலேறி சென்றது. ஆனால் இது எல்லாம் கொஞ்ச நேரம் தான். கல்பாதை பயணம் முடிந்து படிக்கட்டுகள் வழி கீழிறங்குதல் ஆரம்பமானபோது நாங்கள் மேலே பார்த்த brown கலர் நாய் எங்கிருந்தோ ஓடி வந்து எங்களோடு ஒட்டிக்கொண்டது. கருப்பு பைரவர் போய் இப்பொழுது brown பைரவர். அதற்கும் எங்களிடமிருந்த ரொட்டி மற்றும் தண்னிர் வகைகளை கொடுத்தோம். சிறிது தூரம் எங்கள் துணையாக வந்து பின்னர் திடிரென்று மறைந்தது. ஏறியதிலிருந்து இறங்கியதுவரை எங்களை விட்டுப் பிரியாமல் எங்களோடு துணைக்கு வந்த அதை என்னவென்று சொல்ல.

தென்மாதிமங்கல வழி இறங்கல்


இறங்கும் போதும் எங்களை பின் தொடரும் பைரவர்

தென்மாதிமங்கல வழி இறங்கல்

தென்மாதிமங்கல வழி இறங்கல்

எங்களோடு பைரவர் வடிவத்தில் வந்தது சித்தர்களே என்பது என் நம்பிக்கை. கடலாடி வழியை விட இந்த தென்மாதிமங்கல வழி அதிக தூரம். ஏறுவதற்கு கடலாடிப் பாதையும், இறங்குவதற்கு தென்மாதிமங்கல பாதையும் ஏற்றது. படிக்கட்டுக்கள் முடிந்தவுடன் சமவெளிப் பாதை வருகிறது. ஆனாலும் அங்கிருந்து reserved forest  எல்லைவரை செல்ல இரண்டு மைல் தூரம். அந்த மலையடிவாரத்திலேயே வீரபத்திரர் சுவாமி ஆலயம் இருக்கிறது. பர்வதமலையின் எல்லைக் காவல் தெய்வம். சற்று தூரம் சென்றால் வனப்பேச்சி அம்மன் மற்றும் அம்மனுக்கு காவலாக முனீஸ்வரர்கள் கோவிலும் இருக்கிறது.
மலைஅடிவார பேச்சியம்மன் கோவில் முனீஸ்வரர்கள்

இங்கிருந்து இன்னுமொரு இரண்டு கிலோமீட்டர் பயணம் செய்தால்தான் bus stand வருகிறது. அங்கிருந்து போளுருக்கோ, திருவண்ணாமலைக்கோ செல்லலாம்.  நாங்கள் போளுர் சென்று அங்கிருந்து சென்னை சென்றடைந்தோம். பயணங்கள் என்றுமே மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் தரும் ஒரு அனுபவம். அதுவும் மலைக் கோவில் பயணம் என்றால் கேட்கவே வேண்டியதில்லை.  அப்படியான அனுபவங்களில் எங்களுக்கு இதுவும் ஒன்றாகிப் போனதில் ஆச்சர்யமில்லை. சித்தர்கள் வாசம் செய்யும் மலையில் நினைத்ததும் சர்வ சாதாரணமாக சென்று வந்து விட முடியாது, பரம்பொருளின் அருளும், சித்தர்களின் ஆசியாலும், நமது விதிப்பயன்படிதான் நாம் காலடி எடுத்து வைக்க முடியும்' என்பது ஆன்மிகப் பெரியோர்களின் வாக்கு. அத்தகைய விதிப்பயன் இருப்பதாலே நாங்களும் பர்வதமலையை தரிசித்து வந்தோம் என்பதில் அய்யமில்லை.

பின்னால் தெரியும் திருவண்ணாமலை
ஜவ்வாது மலைதொடர்கள்

பர்வதமலையின் பால்கனி


Thursday, December 18, 2014

A visit to the Vandaloor Zoo.

Everyone in the world wishes to travel and explore new places, but not everyone can fulfill this due to family and job commitments. Though I have been in Chennai for 10 years, I haven't visited many places around, especially the local tourist spots. Recently, I visited the 'Arignar Anna Zoological Park,' one of the largest zoos in India, also known as 'Vandaloor Zoo.' Unlike a jungle, where we can't see animals in their habitats up close, this zoo allows us to enjoy watching various species and endangered animals with only a small wall or iron net separating them from us.

One fine Saturday, my friend and I started our journey from Egmore to Vandaloor by train. As it is the technology era, I usually Google places to know "how to go, where to go, procedures, and the do's and don'ts" before visiting somewhere new. While exploring Google Maps for the route to Vandaloor, I noticed that there is just about 1 km between the Vandaloor railway station and the zoo entrance, which can be covered by walking or taking an auto. Without hesitation, we started walking to cover the 1 km. On the way, near the railway station, even some families asked us for directions to the zoological garden. We guided them, thanks to Google Maps and smartphones.

We reached the entrance at 12:00 PM and saw a few sellers offering food items to visitors. Upon entering after buying tickets, we noticed that the zoo security checked visitors' bags and removed any food items packed in plastics.

Entry tickets cost Rs. 30.00 per adult. Additionally, we paid Rs. 25 for a still camera, whether it is a DSLR, point-and-shoot, or mobile camera. However, they charge more for candy cameras. For more information about ticketing, it's better to refer to their website as the fee structure may change frequently.

There are three options for transportation inside the zoo:

By walking.
By bicycle.
By battery-operated vehicle carrying around 8-10 persons.

The battery-operated vehicle is suitable for older people or groups of around 10. However, it has limitations on stops inside the zoo and operates on an hourly basis. The best way to explore the zoo is by walking or renting a bicycle. Bicycle rent is Rs. 10.00 per hour with an advance of around Rs. 100.00. We decided to walk around the zoo and started from the bird section. There are white arrow signs on the road guiding visitors from one spot to another. To fully explore the zoo, it will take a full day, so it's better to arrive around 9:00 AM and finish before 5:00 PM, the zoo's closing time. For lunch, visitors need to return to the Tamil Nadu Tourism Hotel located at the entrance.

It is good to carry water as we have to walk many kilometers inside. At the entrance, there is a Tamil Nadu Tourism Hotel, the only place offering food. Inside the zoo, there is a 'Tea Shop' selling snacks, samosas, and tea, and several water tanks to quench our thirst.

There are sufficient toilets available, but they are not in good condition and are pay toilets.

The spaces allotted for all species and animals are really small, which is sad. Animals like tigers and cheetahs live in small, isolated areas that are not enough for them. The only creatures with ample space are the lions and the free-roaming Sambar deer.

An annoying thing we observed was some visitors making noise to attract the animals. There were no forest guards or officials nearby to control this. Additionally, many couples used the zoo as a lovers' park, creating an embarrassing environment for families and children.

After exploring most areas, we skipped the aquarium to go for the Lion Safari. The ticket costs Rs. 30.00 per person. We were transported in a covered mini-van. The van reached the entrance of the safari gate in 5 minutes. There are two gates at the entrance, with a space for the van to stand between them. The guards opened the first gate, let the van in, then closed it and opened the second gate into the lion habitat. The van driver acted as a guide and took us to a yard where we saw around 8-10 lions, most of them lean, older, and inactive. Visibility from the van was not good due to the glass doors and iron nets on the windows.

After waiting around 10 minutes, the van left and returned to the safari office. As it was 4:30 PM, we decided to end our exploration and walked towards the hotel, taking photos of flowers and greenery with my mobile.

After refreshing ourselves with dosa and poori (good taste but a bit costly), we headed home.

Friday, October 31, 2014

காவலன்


அலுவலகம் சென்று வர pickup, drop கள் பெரும்பாலும் Call center/BPO எனப்படும் ITES களில் மட்டுமே உண்டு. முன்பெல்லாம் Cab-களில்  security guards கிடையாது.  Cab-இல் பெண்கள் கடைசியாக இறங்க வேண்டி இருந்தாலும் அவர்களுக்கென்று தனி பாதுகாப்பு எல்லாம் முன்பு இல்லை. பெரும்பாலும் பெண் பணியாளர்களுக்கு Home drop தான்.  சிறிய தெருவாக இருந்து இருட்டில் கொஞ்ச தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தால் கொஞ்சம் கஷ்டம். ஒரு சில‌ பொறுப்புள்ள cab driver-கள் மட்டும் வண்டியின் ஹெட் லயிட்டை தெருவுக்குள் பாய்ச்சி அவர் வீடு சென்று சேரும் வரையோ  இல்லை அப்பெண் "போகலாம்" என்று சைகை காட்டும் வரையோ காத்திருப்பர். ஆனால் பலர் இதை  செய்வதில்லை.

Drop நள்ளிரவு ஒரு மணி அல்லது அதிகாலை மூன்று நான்கு மணியாகத்தான் இருக்கும் ஆதலால், சில நேரங்களில் அரிதாக எங்களில் யாரேனும் அப்பெண் வீடு வரை சென்று விட்டு வருவதுண்டு..  2005ல்  பெங்களூர் call center பெண், cab driver ஆல் கொலை செய்யப்பட்ட பிறகு நிலைமை மாறி... கூட வரும் சக ஆண் பணியாளர் அவரை இறக்கிவிட்டு கடைசியாக இறங்க வேண்டியதாக மாறியது.  சில வருடங்களாக தொடர்ந்த இந்த ஏற்பாடு பின்னர் 2013ம் வருடம் நடந்த டெல்லி சம்பவத்திற்கு பிறகு மாறி... பெண்கள் கடைசியாக இறங்க வேண்டியிருந்தால் அந்த வண்டிக்கென்று மட்டும் ஒரு security escort அனுப்பப்பட்டார்.

சென்னை TCS பெண் கொலை சம்பவத்திற்கு பிறகு இதுவும்  மாறியது. வண்டியில் பெண் பணியாளர்கள் இருந்தாலே ஒரு security escort ஏற்றப்படுகிறார். கெட்டதிலும் ஒரு நன்மை என்று பார்த்தால்,  இதற்கென்றே ஒரு துறை உருவாகி ஆயிரக்கணக்கானவர்களுக்கு  வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததுதான். இரவுப் பணி. பத்தாயிரம் ரூபாய் வரை  சம்பளம். இதில் முன்பு வடஇந்தியர்களே அதிகமாக இருந்தனர். இப்பொழுது அவர்களோடு சென்னையை தவிர்த்த பிற தமிழக ஊர் பகுதியை சேர்ந்தவர்களும் அதிகளவில் வருகின்றனர்.  நகரத்தில் security சம்பந்தப்பட்ட‌ ஏதாவது ஒரு வேலை கிடைக்காதா என்று அலைந்து திரியும் இதுபோன்ற‌ என்னற்ற பேர்களுக்கு இப்பொழுது இத்துறை ஒரு சிறிய ஆறுதல். அலுவலக reception-ல் கையில் Resume-களோடு தினமும் வந்து குவியும் என்னற்ற‌ பேர்களே இதற்க்கு சாட்சி.

Sunday, November 10, 2013

ஆட்டோவும்... மீட்டரும்.


புதுசா  தமிழ்நாட்டுல ஆட்டோ மீட்டர் கட்டணம் திருத்தப்பட்ட பிறகு முதல் முறையா  ஆட்டோவுல திருவல்லிக்கேணியில் இருந்து எக்மோர் வரைக்கும் ஆட்டோவுல போக வேண்டியதா இருந்துச்சு. பழக்க தோஷத்துல எவ்வளவு-நு கேட்டு தொலைச்சிட்டேன். அறுபது ரூபா குடுங்க சார் -நு சொன்னான் டிரைவர். அம்பது ரூபா தரேன்னு அலுவலகம் போக நேரமாயிடுச்சேனு ஏறி உட்கார்ந்து மீட்டர் இல்லையானு கேட்டேன். மீட்டர் போட்டா  எவ்வளவு வருதோ அத விட இருபது ரூபாய் கூட தர்றியா - நு கேட்டான். பார்க்கலாம்னு சொல்லி வண்டிய எடுக்க சொன்னேன். அடுத்து நான் பண்ணது...முதல்ல என்னோட ஸ்மார்ட்போன்-ல திருவல்லிக்கேணி டு எக்மோர் எவ்வளவுநு பார்த்தா Google Maps la 4.4 கிலோ மீட்டர் காட்டுச்சு. அதே போல திருத்தப்பட்ட கட்டணம் எவ்வளவுன்னும்Chrome browser-la browse பண்ணி பார்த்தா... முதல் 1.8 கிலோமீட்டர் 25.00 ரூபாயும் அப்புறம் ஒவ்வொரு கிலோமிட்டர்களுக்கு 12.00  ரூபாயும் கட்டணமா இருந்தது . சரி...இறங்கும் போது ரொம்ப பேசினானா அவன்கிட்ட பேசுறத்துக்கு மேட்டர் கிடைச்சாச்சுன்னு இருந்தேன். ஒரு வழியா எக்மோர் போய் சேர்ந்தப்போ மீட்டர்படி நாலு கிலோமிட்டருக்கும் குறைவா தான் இருந்தது.  கட்டணம் 41.50 காசு. Google maps படி திருவல்லிக்கேணி கோவில்ல இருந்து Navigation Start ஆச்சு. ஆனா நான் அத விட ஒரு கிலோமிட்டர் தள்ளி தான் ஆட்டோ ஏறினேன். அவன் கேட்டதோ 60.00 ரூபாய், ஆனா மீட்டர்படி 41.00 ரூபாய். மீட்டர் காசுதான் குடுப்பேன்னு சொல்லி கடைசியா போய் தொலைடாநு 45.00 ரூபாயா குடுத்துட்டு அப்பிட் ஆனேன். இத ஏன் சொல்லுறேன்னா இனிமே ஆட்டோவுல போகும்போது மீட்டர் போடச் சொல்லுங்க. இதுக்கு முன்னாடி எப்படி எல்லாம் நம்மல ஏமாத்தி இருக்கானுங்க பாருங்க... திருட்டுப்பசங்க.


Saturday, May 12, 2012

கண்றாவிக் காதல் கதைகள் - 1

சென்னை வந்த புதிதில் திருவல்லிக்கேணியில் நான் தங்கியிருந்த ஆண்கள் மேன்சன் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்திருந்தது. பெண்களின் வாடை நுழையா பிரதேசம்.

காற்று வாங்க... வேடிக்கை பார்க்க என்கிற போர்வையில் அக்கம் பக்கத்து விட்டுப் பெண்களை சைட் அடிக்கவே ஒரு பெருங்கும்பல் வரிசையாக நின்றிருக்கும் மேன்சன் பால்கனியில்.


மேன்சனின் இரண்டாவது தளத்தில் ரஞ்ஜித் - எட்வர்ட் என்ற இருவர் ஒரே ரூமில் தங்கியிருந்தனர். ரஞ்ஜித் இருபது வயதேயான ஒரு மலையாளி. கெட்ட சகவாசத்தினாலும், விட்டிலிருந்தே பெரும் பணத்தை திருடியதாலும் பெற்றோரால் விட்டிலிரிந்து துரத்தப்பட்டவன்.  


அவனோடு தங்கி இருந்த எட்வர்ட்-கு அவனை விட பத்து வயது அதிகம். டான்ஸ் மாஸ்டர்.  சிலரின் வீடுகளுக்கே சென்று...அவர்களின் குழைந்தைகளுக்கு டான்ஸ் பயிற்சி அளித்து அதன் மூலம் வருமானம் ஈட்டுபவன். இவர்களுக்குள் எப்படிப் பழக்கமோ தெரியாது, ரஞ்ஜித் - கான தங்கும் செலவு, சாப்பாடு அனைத்தையுமே எட்வர்டே பார்த்துக் கொண்டான். இதற்க்கான காரணம் ஒரு நாள் நள்ளிரவின் போது ஆதாம் ஏவாளாக அவர்களை ஒரே கட்டிலில் பார்த்த போது தெரிந்தது.
வேட்டையாடு விளையாடு அமுதன், இளமாறன் போல.


எங்களின் மேன்சன் எதிரில் ஒரு மலையாளக் குடும்பம். அதில் அக்காள், தங்கை இருவர். அக்கா படிக்காமல் வீட்டில் இருக்க, தங்கை பள்ளியில் பத்தாம் வகுப்பு கொண்டிருந்த நேரம். பெரும்பாலான நேரத்தை டிவியில் சினிமா பார்த்து செலவிடுபவர்கள். அவர்களின் விட்டுப் பால்கனியும், எங்களின் மேன்சன் பால்கனியும் கைக்கெட்டும் தூரம். அக்காவும், தங்கையும் காலை மாலை நேரங்களில் பால்கனியின் ஒரு ஒரத்தில் இருந்த தண்ணிர் அடி குழாய்லிருந்து தண்ணிரை அடித்தமேனியிருப்பர்.


அவர்களை சைட் அடிக்க என்றே ஒரு குரூப் பால்கனியில் நின்றிருக்கும். ரஞ்ஜித் தங்கையை சைட் அடிக்கத் தொடங்கிருந்தான். கையை ஆட்டி அவளின் கவனத்தை ஈர்ப்பதையும், இங்கிருந்து சைகை மொழியில் பேசுவதையும் வழக்கமாக கொண்டிருந்த அவன் பிரிதொரு நாளில் திடிரென்று எதையோ பேப்பரில் எழுதி கசக்கி அவள் பால்கனியில் இருந்த நேரமாக பார்த்து பந்தாக விட்டெறிந்தான்.

மறுநாள் அவனே எதிர்பார்க்காத வண்ணம் அவள் கையில் வைத்திருந்த கசங்கிய காகிதத்தை பயந்து அக்கம் பக்கம் பார்த்து விட்டு, இவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே கீழே நழுவ விட இவன் அதை எடுத்து வந்தான். ரஞ்ஜித் படித்து முடித்து அவளிடம் சைகை மொழியில் பேசக் கிளம்ப அந்தக் கசங்கிய காகிதம் பறிக்கப்பட்டு எங்களிடம் வந்து சேர்ந்தது.


கடிதம் தமிழில் எழுதப்பட்டிருந்தது.  கடிதத்தின் தொடக்கமே "அன்புள்ள கணவனுக்கு" என்று இருந்தது. பின்பு கடிதத்தில் உங்கள் ஊர் என்ன, உங்களுக்கு எந்தக் கலர் பிடிக்கும், என்ன ஜாதி என்று கேட்டு சில ஜாதிகளின் பெயர்களையும் குறிப்பிட்டு, இவைகளில் எதாவதா ?, எங்கு வேலை செய்கிறிர்கள் போன்ற பல கேள்விகள். கடைசியில் முத்தாய்ப்பாக கடிதத்தை முடிக்கும் போது பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் மனைவி என்று இருந்ததை பார்த்து சிரித்துக் கொண்டோம்.


சினிமா என்னும் கவர்ச்சியான பொய் உலகம் ஒரு சிறு பெண்ணின் மனதுக்குள் புகுந்து எப்படி எல்லாம் ஆட்டிப் படைத்திருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்க முடிந்தது.

பின்னர் இரண்டொரு நாளில் அவள் பள்ளி இருக்கும் ராயப்பேட்டை ஐஸ் கவுஸ் பகுதிக்கு சென்று அவளைப் பார்ததாகவும், நான்கைந்து முறை சினிமாவிற்க்கு அழைத்துச் சென்று முத்தங்களை பரிமாறிக்கொண்டதாகவும் கூறினான்.


ஆனால் இந்தத் தொடர்பு அதிக நாட்கள் நீடிக்கவில்லை. வேலை இல்லாமல் இருந்த எட்வர்ட் வாடகை கொடுக்கப் பணமில்லாத சுழலில் திடிரென்று ஒரு நாள் ரஞ்ஜித்தும், எட்வர்டும் மேன்சனை விட்டு ஒடிப்போனார்கள்.

காணாத அவனை தேடி சில நாள்களாக அவள் கண்களால் அலைந்து பின்னர் சிறிதொரு நாள்களில் பார்ப்பதை நிறுத்திக்கொண்டாள். அக்கா திருமணமாகி சென்று விட அன்று முதல் இன்று வரை அவள் மட்டும் தனியாக தண்ணிர் பிடிக்க வந்து செல்கிறாள். ஆனால் மறந்தும் இன்று மேன்சன் இருக்கும் பகுதியை அவள் பார்ப்பதே இல்லை.

(அடுத்து வரும் பதிவுகளில் இன்னுமொரு கண்றாவிக் காதலுடன்... )