Thursday, July 02, 2009

உறவுகள் மேம்பட...


குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க -

1) நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (Ego) விடுங்கள்.

2) அர்த்தமில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள் (Loose Talks)

3) எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள் (Diplomacy), விட்டுக் கொடுங்கள் (Compromise).

4) சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் (Tolerance).

5) நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள் (Adament Argument), குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். (Narrow Mindedness)

6) உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் (Carrying Tales)

7) மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் (Superiority Complex)

8) அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (Over Expectation)

9) எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

10) கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

11) உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் (Flexibility)

12) அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்

13) மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். (Mis-understanding)

14) மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.(Courtesy)

15) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

16) பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

17) அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் விட்டு பேசுங்கள்.

18) பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.

19) நிலையை உயர்த்து..... நினைப்பை உயர்த்தாதே.

20) விட்டுக் கொடுப்பவன், கெட்டுப் போவதில்லை.

வேதாத்திரி மகரிஷி

Saturday, June 27, 2009

Beyond Sixth Sense

பொதுவா இப்பவும் எல்லோருக்கும் புரிபடாத, நம்புறதா வேணாமான்னு இருக்கிற ஒரு விசயம் என்னன்னா இறந்து போனப்புறம் நாம என்னாவோம்கிறதும், ஆத்மாக்கள், ஆவிகள் பத்தியும் தான்.


இந்த 21ம் நூற்றாண்டில கம்ப்யுட்டர் காலத்தில் பேயாவது, பூதமாவது தான்னு பெரும்பாலனவங்க நினைக்கிறாங்க. விஞ்ஞானத்தால நிருபிக்கப்படாத எதுவும் நம்புவதற்க்கில்லை என்கிற மனோபாவம்தான் இன்னைக்கு பெரும்பாலனவங்ககிட்ட இருக்கிற ஒன்னு. குறிப்பா நகர்ப்புறத்து மக்களுக்கு, படிச்சவங்களுக்கு.

ஆனா கிராமப்புறத்தை பொருத்தவரைக்கும் இது எல்லாமே உண்மை தான்னு நினைக்கிறாங்க. விஞ்ஞானத்தால இறந்த பிறகு உலவும் ஆத்மாக்கள், ஆவிகள் இருக்கிறதை நிருபிக்க முடியலைன்னாலும் விஞ்ஞானம் இன்னைக்கும் ஒத்துக்கிற ஒரு விசயம் என்னன்னா அதனால எதுலயும் ஒரு அளவுக்கு மேல போகமுடியலைங்கிறதுதான். என்ன தான் முயற்சி பண்ணினாலும் ஒரு லெவல் வரைக்கும் தான் போக முடியுது. அதுக்கு மேல சூன்யம் தான்னு ஒத்துக்குது.

அத தான் நாம சக்தி, அந்த பவர், இந்த பவர், சுப்பர் பவர், அல்லா, சிவன்னு சொல்றோம். என்னைப் பொருத்தவரைக்கும் இதுல நம்பிக்கை இருக்கா, இல்லையான்கிறத விட இதெல்லாம் உண்மையான்னு தெரிஞ்சுகிறதுல எனக்கு ஆர்வம் உண்டு.

இதுல மட்டும் இல்லாம ஏவல், பில்லி, சூன்யம்ன்னு சொல்லப்படுற சங்கதிகள், நாம தினசரி கோயிலுக்கு போய் கும்பிடற, மனசுக்குள்ள வேண்டிக்கிற இஷ்ட தெய்வங்கள், ஊர் காவல் தெய்வங்கள், வன, கிராம தேவதைகள், காவல் காக்கிறதா சொல்ற பூத கணங்கள் இப்படி நல்ல சக்திகள்னு நினைக்கிற விசயங்களிலும் உண்டு.


எனக்கும், என்னைச் சார்ந்த சிலருக்கும் நம்ப முடியாத, எப்படினு தெரியாத, அமானுஷ்ய விசயங்களை அனுபவபூர்வமா உணர்ந்த, சில சப்தங்கள் கேட்ட சம்பவங்கள் நிறைய இருக்கு. 

எதாவது பிரச்சனைகள்ள சம்பந்தமே இல்லாம ஒரு சில பேரால நான் பாதிக்கப்பட்டு பயந்து போய் மனசொடுஞ்சு நின்னுருக்கேன். அப்பெல்லாம் எனக்கு துணையா நான் நம்பிக்கை வச்சுருக்கிற சில தெய்வங்களை நினைத்துக் கொள்வதோ, வேண்டிக் கொள்வதோ தான்.  Ripley's believe it or not மாதிரி சொன்னா யாரும் நம்ப மாட்டார்கள். சில நாள்களிலேயே என்னை பயப்பட வைத்தவர்கள் எதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாகி போறதையோ, கை...கால் அடிபட்டு மாசக்கணக்கில் படுக்கையில் கிடப்பதை என் கண் முன்னாலேயே பார்த்திருக்கிறேன். பல சமயங்களில் எனக்கு ஒரு கவசம் போல சில சக்திகள் பாதுகாப்பாய் இருப்பதை உணர முடிந்தது. சில காரணங்களால் மனம் சஞ்சலப்படும்போதும், மன அழுத்தம் ஏற்பட்டு இடமாற்றம் சாத்தியமே இல்லாத சில இடங்களை விட்டு நான் தூர விலகி போக நினைக்கும் போதும் அதிசயமாக அந்த இடத்தை விட்டு ஒரு சில நாட்களிலேயே நான் வேறு இடத்திற்க்கு அப்புறப்படுத்தப்படுகிறேன். காந்தம் போல சில சக்திகள் என்னுடனே என்னை சுற்றி வருகிறது என்பதை சில நேரங்களில் தெரிந்து கொள்கிறேன்.

ஆனா இந்த பதிவுல அந்த அனுபவங்களை சொல்லல. அதைப் பத்தி விரிவா வேறொரு பதிவில் சொல்றேன்.

இந்த பதிவு எதுக்குன்னா ஆவிகளோட பேசும் மனிதர்களைப் பற்றி, அவங்க உடம்புல இருக்குற சில விசித்திர மாற்றங்களை பத்தி. பொதுவா ஆவிகள் நாய்கள் கண்ணுக்குத் தெரியும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. எந்த அளவு உண்மைய்னு தெரியல. விஞ்ஞானம் அது பொய்னு சொன்னாலும் பலரிடம் இந்த நம்பிக்கை இருக்கு.

ஆறறிவு படைத்த மனிதனை விட அறிவில் குறைந்த நாய்கள், பூனைகள், குதிரைகள் கண்ணுக்கு மட்டும் எப்படி தெரியும்னு தெரியல. உலகெங்கும் உள்ள ஆவி உலக ஆராய்ச்சியாளர்கள் சொல்வது சில விலங்குகளுக்கு ஆவிகளின் நடமாட்டம் நன்கு தெரியுமென்பதே. ஆனால் அந்த நேரங்களில் இவ்விலங்குகள் நிலைகொள்ளாமல் தவிக்கின்றன. கிறீச்சிடுகின்றன, பதுங்குகின்றன. அந்த நடமாட்டம் அவைகளை பாதிக்கிறது. அருகில் ஆவிகள் நடமாடுவது அவற்றுக்குப் புரிகிறது.

இன்னொரு பொதுவான தகவல் ஆவிகள் நடமாடும் இடத்தின் டெம்பரேச்சர். இயல்பு நிலையிலிருக்கும் டெம்பரேச்சர் ஆவிகள் வருகையின்போது மட்டும் சரேலேன குறைந்து அந்த இடம் ஜில்லிட்டு போவது. அது வீடு, அறை அல்லது வெளியே எங்கிருந்தாலும். ஆவிகள் அந்த இடத்தை விட்டு சென்றவுடன் மறுபடியும் சிதொஷ்ண நிலை இயல்பு நிலைக்கு வந்துவிடுகிறது.

சில விடுகள் முன்னாடி நாய்கள் ஊளையிடும். அப்போ அதை விரட்டுவாங்க. காரணம் அந்த பகுதியில எதாவது சாவு விழுந்துடுமோன்னு ஒரு பயம்.

அந்த பகுதியில இருக்கிற, ஏதாவது ஒரு வீட்ல இருந்து மனித உயிர் போகப்போகுதுன்னா அந்த ஆத்மாவ ஆவி உலகத்துக்கு வரவேற்க சில ஆவிகள் வருமாம். அதைப் பார்க்கிற நாய் ஊளையிடும்னு சொல்வாங்க. நல்ல கதை தான் போங்க.

ஒரு வேளை ஆவிகள் நாய்கள் கண்ணுக்கு தெரியும் அப்படின்னா ஆறறிவு !? படைத்த மனுசனுக்கு ஏன் தெரிய மாட்டேங்குதுனு கேட்கலாம். ஆனா சிலர் சொல்றது என்னன்னா மனிதர்களுக்கும் தெரியும், உணர முடியும் ஆனா எல்லாருக்கும் அல்ல நு அப்படிங்கிறதுதான்.

அந்த சில பேருக்கு மட்டும் எப்படி அப்படின்னா...இதோ இதனாலதான்னு ஒரு புத்தகம் சொல்லுது.

"என்டோபிளாசம் அதிகம் சுரக்கும் திரேகங்கள் மனிதர்களில் உண்டு. அனேகமாக இவர்கள் அமாவாசைக்கு முதல் நாளில் ஜனித்திருப்பார்கள். அன்னையின் கருப்பையில் இவர்கள் தாய் தந்தையர் அண்டகோச அடிச்சுவட்டில்தான் உருத்திரள்வார்கள். ஆயினும் பிரபஞ்ச வெளியின் ஒளியும் இருளுமான கால கட்டங்கள், நட்சத்திரக் கதிரொளிகள், திதி கால விசேடாம்சங்கள் கருவின் உயிர்ப்பந்தான உடலைத் தாக்கி உயிரணுக்களை இயக்கி ஆசைகளை மூட்டும்.

அவ்வேளையில் தான் உடலின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும் கரு வளர்ச்சியில் தத்தம் வடிவைப் பெற்ற வண்ணமிருக்கும். இதில் கபால பாகம் மட்டும் நெற்றிக்கு மேல் ஓர் அங்குல தொலைவில் ஒரு சுண்டு விரல் உள்நுழையும் அளவான துவாரத்தோடு முழுமை சேராமல் இருக்கும் (இதை நம் ஊரில் உயிர் குழி, உச்சிக் குழி என்று கூறுவர்). அந்த உயிர், அன்னையின் கருப்பையை விட்டு வெளியேறிய பிறகு வெளி உலக இருள், ஒளி, காற்று, அருள் மற்றும் அன்னையின் அமுது (பால்) இவற்றால் தாங்கப்பட்டு மெல்ல வளர்ச்சி கண்டு கபால பாகம் மூடப் பெறும். இதை பொதுவில் இயற்கை என்பார்கள்.

ஆனால் அயிரத்தில் ஒருவருக்கு இந்த கபால பாகம் சரியாக மூடப்பெறாது. கைகளால் தொட்டுப் பார்த்தே தலை பாகத்தில் அது மூடப் படாததை உணரலாம். இத்தகைய கபாலமுடையவர்கள் ஆவிகளோடு எளிதில் பேசும் வல்லமையுடைய மீடியங்களாக முடியும்.

இவர்கள் உடலில் என்டோபிளாச திரவ அளவு கூடுதலாக இருக்கும். இது காற்றில் அலைந்து திரியும் ஆல்ப்பா, பீட்டா, காமா மற்றும் மின் காந்த அலைகளை மிக வேகமாக ஸ்வீகரித்து உணரக்கூடியது. புலன்களுக்கு புலனாகாத விஷயங்கள் இவர்கள் சரீரத்தால் ஈர்க்கப்படும். பயிற்சி பெறப் பெற இவர்கள் சரீரமே ஒரு மின்காந்த சமுத்திரமாக மாறிவிடக்கூடியது. இவர்கள் தியானம் செய்தால், அது மிக இலகுவாக இவர்களுக்கு வசப்படும். மனம் மிகச் சீக்கிரம் ஒருமைப்படும். இருந்தும் இல்லாதவராக இவர்களால் ஆக முடியும். அப்படி ஒருவர் தன்னை மீடியமாக கருதி காற்றுப் புகமுடியாதபடி அல்லது காற்று அவ்வளவாகயில்லாத ஒரு வெற்றிடப் பரப்பை உருவாக்க முடிந்த பாத்திரம் ஒன்றை கவிழ்த்துப் பிடித்து, தன் சிரத்தை அதன் மேல் வைத்து ஒரு தொடர்பினை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். பின் இறந்த வரை எண்ணி தியானித்து அழைக்க இறந்தவர் அந்தப் பாத்திரம் வசம் நுழைந்து தங்கள் அலை போன்ற வடிவிலான சூட்சும தேக சக்தியால் அந்தப் பாத்திரத்தை அசைத்து தங்கள் வருகையை நிருபிப்பார்கள். நமது கேள்விகளுக்கு பதிலை அவர்களால் நமது சிரத்தின் வழியாக புகுந்து எழுதிக் காட்டவும் இயலும்."

மேலே சொன்ன என்டோபிளாசம் சங்கதி எந்தளவுக்கு உண்மைய்னு தெரியாது. காற்றில் அலைந்து திரியும் மின்காந்த அலைகலை சரியாக இனம் கண்டு அதை தன்னுள் இழுத்துக் கொண்டு வந்து தொலைதூரத்தில் இருப்பவர்களோடு உரையாட நமக்கு உதவும் செல்போன் ஒரு சரியான உதாரணம். அதைப் போன்று இதுவும் ஏன் இருக்கக் கூடாதுனு தான் தோணுது.

Saturday, May 09, 2009

சென்னை மத்திய சிறையில் ஒரு நாள்...




சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன் எதிரில் இருக்கும் மேம்பாலத்தை எத்தனையோ முறை பஸ்களில் கடந்து சென்றிருந்த போதிலும் கவனமோ, கண்ணோ எப்பொழுதாவது தான் மத்திய சிறைச்சாலையின் பக்கம் செல்லும். அப்பொழுதெல்லாம் சினிமாக்களில் நான் பார்த்த சிறை வளாகக் காட்சிகளும், அதிலே வரும் இரக்கமற்ற, கொடுரம் நிறைந்த சிறை வார்டன்களும், வார்டிகளும், சில சினிமாக்களில் பார்த்தது போன்ற கைதிகள் உட்கார ஒன்றிரண்டு ஆலமரம், அதைச் சுற்றி திண்டு போல உள்ள ஒன்றும், கொலைக் குற்றவாளிகளும், பிரபலமான தாதாக்களும், ஆட்டோ சங்கர், வீரமணி போன்றவர்களுமே என் நினைவில் வந்து செல்வர். அப்படி நினைக்கும்போது கூடவே, வாழ்க்கையில் எந்த ஒரு சுழ்நிலையிலும் இங்கு காலடி எடுத்து வைக்கும் நிலை வந்து விடக் கூடாது என்றும் நினைத்துக்கொள்வேன்.

நான் பார்க்கும்பொழுதெல்லாம் நகரத்தின் இரைச்சல்கள், பரபரப்புக்கிற்கு மத்தியில் அது மட்டும் தனித்து ஒரு ஓரமாக கீழிறங்கி, அமைதியான ஒரு தனிப் பிரதேசமாக காட்சி அளிப்பதாக தோன்றும்.

சறுக்குப் பாதையில் சில போலிஸ் வாகனங்கள், பாலத்திலிருந்து பிரியும் அதன் ஆரம்ப இடமான செக்போஸ்டில் சில போலிஸ்காரர்கள், கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் வட்டம் என்று மிக சொற்பமான கூட்டமே அங்கு தென்படும்.

ஆனால் விரைவில் நானும் ஒரு நாள் கையில் விலங்கில்லாமல், பாதுகாப்புக்கு போலிஸ் இல்லாமல் அந்த மத்திய சிறைச்சாலைக்குள் காலடி எடுத்து வைக்கும் நிலை வரும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.

அப்படி ஒரு நாளும் வந்தது, உயிரோடு இயங்கிக் கொண்டிருந்த மத்திய சிறைச்சாலை விஸ்தாரமான புழல் சிறைக்கு மாறிய பிறகு.

சுதந்திர போரட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்களை ஆங்கிலேய அரசு கைது செய்து அந்தமானில் உள்ள செல்லுலர் சிறைக்கு கொண்டு போவதற்க்கு வசதியாக, துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள இந்த இடத்தில் 1837 ல் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலை நாடு விடுதலை அடைந்த பிறகு சாதரண குற்றவாளிகளை அடைக்கும் கொட்டடியாக மாறிப் போனது.

ஆரம்ப காலங்களில் சிறிய எண்ணிக்கையில் இருந்த குற்றவாளிகளின் எண்ணிக்கை, நகரமும், அதன் மக்கள் தொகையும் வளர வளர கூடிக்கொண்டே போனது. இதற்கிடையில் 1999 ல் 10 பேருக்கும் மேல் இறந்த கைதிகளின் கலவரம் வேறு.

இப்படியாக இருந்த சிறைச்சாலை நகருக்கு வெளியே புழல் ஏரிக்கு அருகில் பல ஏக்கர் பரப்பிற்க்கு மாறிச் சென்று விட, இரண்டு வருடங்களாக ஆள் அரவமற்று புதர் மண்டிப் போய் பாழடைந்து கிடக்கிறது சிறைச்சாலை.

இடித்து தரைமட்டமாக்கி அதை அருகில் இருக்கும் அரசாங்க மருத்துவமனை விஸ்தரிப்புக்கும், மெட்ரோ ரயில் திட்டம் பணிகளுக்கும் ஒதுக்கும் முன்னர் பொதுமக்களின் பார்வைக்காக சில நாட்கள் அரசாங்க அனுமதியுடன் திறந்து விட்டது சிறைத்துறை. இதைப் பார்க்க யார் வரப்போகிறார்கள் என்று அங்கே சென்றால் லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம். எங்களைப் போல நண்பர்களுடனும், தனியாகவும் வருபவர்களை விட குடும்ப சகிதமாக வந்தோரே அதிகம், குழந்தைகள் உட்பட.

அலுவலகத்தில் வேலை செய்யும் சக நண்பன், நானுமாக ஒரு குழுவும், மற்றுமொரு ஐந்து பேர் வேறொரு குழுவாகவும் சிறிய நேர இடைவெளிகளில் உள்ளே நுழைந்தோம். வண்டியை சிறையை நோக்கிச் செல்லும் சறுக்குப் பாலத்தின் ஒரமாக நிறுத்தி விட்டு முன்பிறமிருந்த படிக்கட்டின் வழியாக கீழிறங்கிச் சென்றோம். சினிமா தியேட்டரில் பிரபலமான நடிகர் நடித்த திரைப்படத்தைக் காண முதல் நாள் டிக்கெட் கவுண்டர் எப்படி தள்ளுமுள்ளுடன் இருக்குமோ அப்படித்தான் இங்கும் இருந்தது.


ஒருவர் மட்டுமே செல்லும்படியாக அமைக்கப்பட்டிருந்த பாதையில் நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் உள்ளே சென்றால் !


'ஆரம்பமே அலக்கழிப்பா இருக்கே' நு அலுத்துக் கொண்டு சிறை வாசல் அருகில் சென்றோம்.சினிமாக்களிலும், பத்திரிக்கை புகைப்படங்களிலும் பார்த்திருந்த சிறை வாசலை முதல் முறையாக நெருக்கமாக பார்த்ததில் ஏதோ ஒரு உணர்ச்சி மனதில். உள்ளே ஜனத்திரள் கூட்டம். ஒரு சில பேராக சென்று வந்து கொண்டிருந்த சிறை வளாகத்தில் ஆயிரக்கணக்கானோரின் காலடி பட்டதும் ஒரே தூசிப்படலம்.

கர்ச்சிப்பை எடுத்து முகத்தில் கட்டிக் கொண்டேன் கண்கள் மட்டும் தெரிய. உள்ளே முதல் முறையாக செல்வதால் எதைப் பார்ப்பது, எதை விடுவது, எந்தப் பக்கம் சென்று எந்தப் பக்கம் வரவேண்டும் என்று தெரியவில்லை. சரி! ஒரு சுற்று சுற்றி வருவோம் என்று முதலில் பார்வையாளர் மாடத்திற்குள் நுழைந்தோம். ஒரளவிற்க்கு பெரிய கட்டடம். கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் சந்திப்பதற்க்காக அமைக்கப்பட்டிருந்த அதில் இரண்டு அடுக்கு கம்பி வளையம் போடப்பட்டிருந்தது.

கம்பி வளைய தடுப்புகளுக்கு இடையில் ஒரு அடி இடைவெளி. சந்திக்க வருபவர்கள் கைதியின் கையில் எதையும் மாற்றி விடக்கூடாது என்ற முன்னேற்பாடு. உள்ளே சென்று விட்டு வெளியே வர முயல்கையில் ஒருவர் தன்னோடு வந்த இரண்டு மூன்று பேர்களுக்கு அது செயல்படும் முறையை விவரித்துக் கொண்டிருந்தார்.

கம்பி வளையத் தடுப்பின் இறுதியில் ஒரு சிறிய சதுர வடிவிலான குறுகலான வழி உள்ளது. அதன் அருகில் உட்கார்ந்திருக்கும் வார்டன் அந்த ஓட்டை வழியாகத்தான் உறவினர்கள் கொண்டு வரும் பழங்கள், சாப்பாடு அயிட்டங்கள், மற்றவைகளை எல்லாம் உள்ளே நிற்கும் கைதிகளுக்கு பரிசோதித்து விட்டு வழங்குவார் என்று விவரித்துக்கொண்டிருந்தார்.
அந்த ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த முன்னால் கைதி போல இவர் என்று நினைத்துக் கொண்டு வெளியே வந்தோம். பொதுவாக சிறையை சுற்றி வருகையில் மூன்று, நான்கு முன்னால் கைதிகளையும் பார்க்க முடிந்தது. ஒரு நடுத்தர வயது கைதி ஒருவர் தன் மனைவி, உறவினர்கள், குழந்தைகளுக்கு தான் அடைக்கபட்டிருந்த செல், சாப்பிட்ட இடம், உள்ளே அலைந்து திரிந்த இடங்கள் என்று எல்லாவற்றையும் உணர்ச்சிபூர்வமாக காண்பித்து விவரித்துக் கொண்டிருந்தார்.

ஒரு நடுத்தர வயது கைதி ஒருவர் தன் மனைவி, உறவினர்கள், குழந்தைகளுக்கு தான் அடைக்கபட்டிருந்த செல், சாப்பிட்ட இடம், உள்ளே அலைந்து திரிந்த இடங்கள் என்று எல்லாவற்றையும் உணர்ச்சிபூர்வமாக காண்பித்து விவரித்துக் கொண்டிருந்தார்.
இன்னொரு வயதான ஒருவர் 'செக்யுரிட்டி ப்ளாக்' இன் முன்னால் நின்று கொண்டு அங்கு ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களின் சிலருக்கு ' நடுத்தர வயதாக இருக்கும் போது தானும், இப்போதைய அமைச்சர் அன்பழகனும் ஒரு போராட்டத்தில் கைது செய்யப் பட்டு அடுத்தடுத்த அறைகளில் இருந்ததாக சொல்லிக் கொண்டிருந்தார். கூறுவது உண்மையா, பொய்யா என்று யோசித்தபடியே ஒவ்வொருவரும் அவரைத் தாண்டிச் சென்ற வண்ணம் இருந்தனர்.

இப்படிப்பட்ட முன்னால் கைதிகள் கூறுவதை ஆர்வமாக கேட்க கூட்டம் அங்கு கூடிவிடுகிறது. அந்த கணத்தில் அவர்களுக்குள் ஒரு பெருமையோ, சந்தோசமோ, மற்றவர்கள் தம்மை ஆர்வமுடன் பார்க்கிறார்கள், தன் பேச்சை கேட்கிறார்கள் என்ற எதோ ஒரு விதமான உணர்ச்சியோ அவர்களிடத்தில் வந்து விடுவதை உணரமுடிந்தது.

விசிட்டர்ஸ் ப்ளாக் முடிந்தவுடன் அதை ஒட்டிச் செல்லும் பிரமாண்ட மதில் சுவரின் ஓரமாகவே சென்ற போது தூக்கு போடும் இடம் என்று கரியால் எழுதப்பட்டிருந்த ஒரு இடத்திற்குள் நுழைந்தால் அது ஓட்டு வீடு போல இருந்தது. "இதுக்குள்ள எப்படியா தூக்கு மாட்டுவாய்ங்க" என்ற படி வெளியே வந்து அடுத்த இடத்தை நோக்கி நகர்ந்தோம்.
சிறைக்குள் நாங்கள் ஆர்வமாக தேடியது தூக்கு போடும் இடம் தான். ஆனால் கடைசி வரையில் அதைப் பார்க்க முடியாமலே போனது. இன்னொரு குழுவாக சென்றிருந்த ஐந்து பேர் தாங்கள் தூக்கு மேடையை பார்த்ததாக அலுவலகத்தில் வந்து சொல்ல, அது எங்கிருக்கிறதென்று கேட்டு அடுத்த நாள் மறுபடியும் சிறைக்குச் சென்றோம். சிறைக்கு வெளியே கூவம் கரையோரமாகவே இருந்தது.

அதிகாரப்பூர்வமாக கொலை செய்யும் இடம். தன் மனைவியை கொன்ற குற்றத்துக்காக 1970- ல் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையே இங்கு நிறைவேற்றப்பட்ட கடைசி தூக்கு. அதற்க்குப் பிறகு யாரையும் தூக்கில் போடாததால் அந்த இடம் செடி கொடிகளால் சுழப்பட்டு பாழடைந்து கிடந்தது. ஆட்டோ சங்கர் தூக்கு கூட சேலம் மத்திய சிறையில் தான் நிறைவேறியது.

கைதியின் கழுத்தில் கையிரை மாட்டி அவனை நிக்க வைக்கும் நீளமான கால் பகுதியின் கீழே இரண்டு கனமான கதவுகள் படுக்கை வசமாக. தண்டனை நிறைவேற்றும் நேரம் வரும் போது கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்பி லிவரை பிடித்து வார்டன் இழுக்க இரண்டு கதவுகளும் உட்புறமாக திறந்து கொள்கிறது.

கதவுக்கு கீழே நீண்ட படிக்கட்டுடன் ஒரு சிறிய அறை போல கட்டியிருக்கிறார்கள். உயிர் போன பிறகு உடலை அப்படியே கீழிறக்கி மேலே கொண்டு வர வசதியாக.

மதில் சுவரை ஒட்டியபடியே செல்ல முதலில் தென்பட்டது குவாரன்டின் ப்ளாக் என்ற மகளிர் சிறை வளாக கட்டிடம். உள்ளே செல்வதற்க்கு மட்டும் இரண்டு கதவுகள். நாங்கள் பார்த்த முதல் கைதியின் அறைகள். 15 அடிக்கு 15 அடி என்ற அளவிலான சிறிய அறைகள். உள்ளேயே ஒரு மூலையில் மேடான பகுதியில் கழிப்பறை.

அதற்க்குள்ளேயே தான் உறக்கம். உண்மையிலேயே கொடுமையான ஒரு தண்டன தான். சிறைக்குள் கம்பியை எண்ணியபடி ஒரு போட்டோ எடுக்கலாம் என்று ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டோம். கூச்சமாத்தான் இருந்தது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் "இங்க பார்ரா, இப்படி ஒரு ஆசையா இவனுங்களுக்கு" என்றபடி நகர்ந்து சென்றார். ஆனால் எங்களைப் போல பலரும் இப்படி போட்டோ எடுத்துக் கொண்டதை சிறை முழுவதும் பார்க்க முடிந்தது.

பின்னாளில் ஒரு வாரப்பத்திரிக்கையில் இந்த குவாரன்டைன் ப்ளாக்கில் தான் ஜெயலலிதா, சசிகலா, கலைஞர், காஞ்ஜி விஜேயேந்திரர் அடைக்கப்பட்டிருந்தனர் என்பதை படித்த பிறகு கொஞ்சம் புல்லரிச்சது என்னமோ உண்மைதான். ஹி...ஹி.

பின்னர் ஒவ்வொரு ப்ளாக்காக சென்று பார்த்தபடி இருந்தோம். ஒவ்வொரு ப்ளாக்கையும் சுற்றி இரும்பு கம்பி தடுப்புகள் அதிகம் இருந்தன. ஒரு ப்ளாக்கில் இருந்து மற்றொரு ப்ளாக்கிற்க்கு அவ்வளவு எளிதில் போய் விட முடியாதபடி.

மத்திய சிறையில் திரும்பும் திசையெல்லாம் இரும்புகள் தான். கதவுகள், கம்பிகள், தடுப்புகள், வளையங்கள் இப்படிப் பல. ஆள் அரவமில்லாமல் இரண்டு வருடங்கள் இருந்ததினால் எங்கு பார்த்தாலும் புதர்ச் செடிகள், கொடிகள் தான்.

சிறை முழுவதுமே பச்சை இலை தலைகளின் வாசம் மூக்கை துளைத்தது. நடந்து செல்லும் வழியில் ஆங்காங்கே பாதாள சாக்கடைக் குழிகள் திறந்தபடியே கிடந்தது. அதில் பெரும்பாலானவை எல்லாம் மண் மூடி விட்டது.

சிறைக்குள் அதிகமாக தென்பட்டது துளசி செடிகளும், மங்களப் பொருளாக பொங்கலன்று வீட்டின் முற்றத்தில் மாவிலையுடன் சேர்த்து சொருகும் "கண்ணுபுல்லாக்கு" என்னும் நீண்ட செடிகளும் தான். ஆனால் ஒரு மாதம் கழித்து மறுபடியும் சென்ற போது இவைகள் இல்லாமல் இருந்தது.

ஒரு சில ப்ளாக்குகள் சிறையின் மூலையில் இருந்தது. உள்ளே சென்றால் மிக மிகச் சிறிய அறை. கண்டம் அறை என்று பேர். 10 க்கு 10 அடி என்ற அளவிலேயே இருந்தது. ஒருவன் உட்கார மட்டும் தான் முடியும். என்னைப் போல ஆறடி உயரம் உள்ளவர்கள் சரியாக காலை நீட்டி படுக்க கூட முடியாது. படுக்கைக்கு பக்கத்திலேயே கை எட்டும் தூரத்தில் கழிப்பறை. நாங்கள் போனது நல்ல வெயில் நேரமாக இருந்ததால் ஒரே அனலாக இருந்தது உள்ளே. எப்படித்தான் கைதிகள் இருந்தார்களோ.

இப்படிப்பட்ட சிறைகள் கடுங்காவல் தண்டனைக் கைதிகளுக்கு உரியனவாக இருக்கும் போல. இந்த அறைகள பார்த்தாலே எவனுக்கும் கொலை, கொள்ளை அடிக்கணும்னு தோனாது. பின்னர் உள்ளே உள்ள மருத்துவமனை, சமையல்கூடம், ஏ ப்ளாக், பி ப்ளாக், சி ப்ளாக், செக்யுரிட்டி ப்ளாக், வெளிநாட்டவர்களை அடைத்து வைக்கும் ப்ளாக் என்று தரத்திற்க்கு ஏற்றவாறு சிறைக் கட்டிடங்கள் இருந்தன.

மருத்துவமனை கட்டிடம் உள்ளே முழுவதும் மாத்திரைகள் சிதறிக் கிடந்தன. ஏ க்ளாஸ், பி க்ளாஸ், சி க்ளாஸ் என்று பெயருக்கேற்றவாறு சிறைகளும் அப்படித்தான் இருந்தன. பார்க்கவே அருவருப்பாக சில சி க்ளாஸ் அறைகள்.

அதில் சில அறைகளுக்கு அப்படியே நேர் எதிரில் வரிசையாக கழிப்பறைகள். எப்படித்தான் இருந்தனரோ. நான்கு வகையான செக்யுரிட்டி ப்ளாக்குகள். எல்லாமே அறை எண்ணிக்கையில் தான் வித்தியாசம். சிறைகளிலேயே பார்க்க நன்றாக, சுத்தமாக இருந்தது இந்த வெளிநாட்டவர்கள், செக்யுரிட்டி ப்ளாக்குகள் தான். எல்லாமே சிமெண்ட் தரை. அறையும் காற்றோட்டமாக, சுத்தமாக இருந்தது.

அடுத்து மிக நீண்ட ஒரு ஹாலில் சிமெண்டிலான பல படுக்கைகள் கைதிகள் படுத்துறங்க. பொதுவாக எல்லா அறைகளிலுமே அடைக்கப்பட்டிருந்த கைதிகள் எதையாவது வரைந்தோ, கிறுக்கியோ இருந்தனர். ஒரு சிலர் அவரவர் மதக்கடவுள்களின் உருவத்தை ஒவியமாக வரைந்திருந்தனர்.

ஐந்து மணி வரை தான் அனுமதி என்பதால் அவசர அவசரமாக எல்லவற்றையும் பார்த்து விட்டு வெளியே வந்தால் சரியாக ஐந்து மணி. வெளியே கேட்கும் சத்தம், நகரத்தின் இரைச்சல்கள் துளி கூட உள்ளே இல்லை. நெடிய மதில்சுவரை ஒட்டினார் போல ஓடும் தண்டவாளங்களின் மேல் செல்லும் ரயில்களின் சத்தம் மட்டும் தான் உள்ளே கேட்கிறது.
சிறையின் பாதுகாப்பிற்க்கு நீண்ட நெடிய மதில் சுவர்கள். 6 அடி உயரமுள்ள மூவர் ஒருவர் தோள் மீது ஒருவர் ஏறி நின்றால் மட்டுமே சுவரின் விளிம்பை தொட முடியும். அதற்க்கும் மேலே கரண்ட் கம்பிகள். இதிலெல்லாம் ஏறி தப்பிப்பது என்பது முடியாத காரியம் என்ற போதிலும் இதிலேறி தப்பியவன் ஆட்டோ சங்கர்.

வெளி உலகத் தொடர்பே இல்லாமல் பல வருடங்களாக உள்ளே இருப்பவர்கள் வாழ்க்கையில் பின் தங்கிப் போவது மட்டுமில்லாமல், தனிமை காரணமாக மனச் சிதைவுக்கு ஆளாவதும் அதிகம்.

தமிழகத்தில் முதன்முறையாக சிறை வளாகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிப்பது இதுவே முதல் தடவை. பார்த்த லட்சக்கணக்கானோரின் மனதில் தண்டணை எவ்வளவு கொடியது என்று மட்டும் உணர வைக்காமல், அவர்களின் மனதில் இனி குற்றம் செய்யலாகாது என்ற ஒரு சிறிய மாற்றத்தை உண்டு பண்ணினாலே அது சிறைத்துறையினருக்கு கிடைத்த வெற்றி தான்.

















































இதயத்தில் எழுதிய உறவுகள் என்றும் இறப்பதில்லை...


காதலித்தால் கவிதை வரும் என்பர்
நானும் காதலித்தேன்
ஆனால்… கடைசியில் கிடைத்தது
கவிதை மட்டுமே…
காதலியல்ல

நான் விரும்புன பொண்ணு கிடைக்கலைன்னாலும்..
கோடிக் கொட்டிக்
குடுத்தாலும் காதல் கிடைக்காது டே – நு ஒரு பாட்டு இருக்கு. அப்படி ஒன்னு
எனக்கு கிடைச்சும் அதை கோட்ட விட்டத யார்கிட்ட போய் சொல்றது.
நாம நேசிக்கிற பொண்ண விட நம்மளை நேசிக்கிற பொண்ண கல்யாணம் பண்ணுனா வாழ்க்கை சந்தோசமா இருக்கும்- நு வள்ளி படத்துல ரஜினி சொல்லுவாரு.
ஆனா அப்படி ஒரு சூழ்நிலை எனக்கு வந்தபோது உண்மையிலே தடுமாறித்தான் போனேன்.

சரியா இது தவறான்னு கல்லூரி படத்துல வர்ர ஹீரோ போல முடிவெடுக்க முடியாத ஒரு சூழல். பல மாசமா சரியான தூக்கம் கூட இல்லை. எனக்கு கிடைக்கலைனாலும் நான் விரும்புன பெண்ணை பக்கத்துலேயே வச்சுகிட்டு இன்னோரு பொண்ணை காதலிக்க எனக்கு மனசு கேக்கல. அப்படி பண்ணினா உண்மையான காதலா அது இருக்காதுனு எனக்கு தோனுச்சு.

ஆரம்பத்துல எனக்கு சம்பந்தப்பட்ட ஆளை சுத்தமா புடிக்காட்டியும் எப்படியோ தெரியல கொஞ்ச கொஞ்சமா மனசுக்குல இருந்த, நான் விரும்புன பழைய ஆளை துரத்திட்டு இவங்க வந்து உட்கார்ந்துட்டாங்க. நீண்ட தயக்கம் அப்படி இப்படின்னு ஒரு வழியா பத்து மாசம் ஒடிப்போனப்பிறகு தலைவர் சொன்ன டயலாக்க செயல்படுத்திடலாம்னு நினைச்சா திடிர்னு ஒரு கட்டாய அலுவலக இடமாற்றம்.

அதுக்கப்புறம் நான் நினைச்சுருந்தா பேசியிருக்க முடியும். சம்மதம்னு சொல்லியிருக்க முடியும். ஆனா அதுல எனக்கு விருப்பம் இல்ல. ரொம்ப நாள் இழுத்தடுச்சுட்டோமேயின்னு ஒரு குற்ற உணர்ச்சி. என்ன பண்றது.
நம்ம Bad Luck, Miss பண்ணிட்டேன் அப்படி இப்படின்னு என்னன்னமோ சொல்லிகிட்டு ஒரு வழியா வெளிய வந்துட்டேன்.

கண்டிப்பா, உண்மையில அப்படி ஒருத்தர் வாழ்கையில கிடைக்கிறது  கஷ்டம்தான்.

ஆனா என்ன பண்றது ! வாழ்க்கை என்னும் பயணத்துல வந்து போற ரயில் சினேகிதிகளா அவங்களை நினைச்சுக்கவேண்டியதுதான். என்ன ஒன்னுன்னா, அவங்க வரலைன்னாலும் அவங்களோட ஞாபகங்கள் என்னோட பயணம் முடியிர வரைக்கும் தொடர்ந்து என்கூட வந்துகிட்டே இருக்கும்.

இருந்தாலும் கடைசி நாள்ல நடந்த Farewell க்கு அப்புறம் இப்படித்தான் சொல்ல, நினைக்க தோனுது.

பிரிந்து போன நாளில் எல்லோரும் கொடுத்தார்கள் "நினைவுப் பரிசு"
ஆனால்
நீ மட்டும் தான் கொடுத்தாய் "உன் நினைவுகளை பரிசாக"

Monday, April 27, 2009

கலியுக (ஆ)சாமிகள்

இரண்டு வருடங்களுக்கு முன்பு பெங்களுர் கால் சென்டரில் வேலை பார்த்த நண்பன் ஒருவன் பார்வர்டு செய்த ஈமெயிலை இந்த ப்ளாக்கில் How safe is Bangalore என்ற தலைப்பில் publish செய்திருந்தேன். அதைப் படித்த ஒருவர் இதை போல தனக்கும் வந்த அந்த ஈமெயிலில் உண்மை இல்லையென்றும், பொதுவாக பீதியை கிளப்புவதற்க்காகவே இதுபோன்ற மெயில்களை சிலர் அனுப்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

என்னைப் பொருத்தவரையில் அது உண்மையோ, பொய்யோ தெரியாது...ஆனால் சமீபத்தில் நான் தங்கியிருக்கும் இடத்திற்கு எதிரே இருக்கும் ஒரு குடும்பத்தின் கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த அனுபவத்தின் மூலம் மெயிலில் குறிப்பட்டது உண்மையாக கூட இருக்கலாம் என்றே தோன்றுகிறது. அவன் படித்துக் கொண்டிருப்பது நந்தனம் கலைக்கல்லூரியில். நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும் என்ற வரிகளுக்கேற்ப எப்பவும் நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் பழக்கமுள்ளவன்.

சாதரணமாக நடந்து செல்வதே யாரையாவது அடிக்கச் செல்வது போலத்தான் இருக்கும். நடுத்தர உயரம், அதற்கேற்ற நல்ல பலமான உடல்வாகு. தன் அப்பாவின் ஏ டி எம் கார்டைக் கொண்டு பணம் எடுக்க தேவி தியேட்டர் எதிரில் இருக்கும் ஒரு பேங்க் ஏ டி எம் சென்டருக்கு சென்றிருக்கிறான். பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே நடந்து வருகையில் திடிரென்று அருகில் வந்த ஒருவன் சிநேக பாவத்துடன் இவன் தோள் மீது அணைத்தபடி கை போட, திரும்பிப் பார்த்து 'யார் நீங்க' என்று கேட்டு சுதாரிப்பதற்குள் இவனை அப்படியே வாரி இழுத்து அருகில் நின்றிருந்த ஆட்டோவுக்குள் அமுக்கியிருக்கிறான்.

அதற்க்குள் ஆட்டோ வேகமெடுக்க திமிறிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தால் ஆட்டோ ட்ரைவர் அருகில் ஒருவன், பின்னால் இவனை அமுக்கிப் பிடித்துக் கொண்டு இரண்டு பேர். கத்தியை காட்டி மிரட்டி இவன் போட்டிருந்த செயின், மோதிரம், ஏ டி எம் கார்டு, அதிலிருந்து எடுத்த பணம், வாட்ச் என்று சகலத்தையிம் கழட்டி பறித்துக் கொண்ட பின், இவனை அப்படியே விடாமல் பின்னால் இருந்த இரண்டு பேரும் அடி உதைகளால் பின்னியெடுத்திருக்கின்றனர். இவனால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பின்னால் விசாரித்த போது கூறினான்.

பல் உடைந்து, மூக்குடைந்து, காதில் இருந்து ரத்தம் வந்த பின்னர் எக்மோர் அருகில் இருக்கும் மேம்பாலத்தில் இவனை உருட்டிவிட்டு சென்றிருக்கின்றனர். அங்கிருந்து நடந்தே வீடு வந்து சேர்ந்த அவனை பார்க்கவே பரிதாபமாகத் தான் இருந்தது. முகமேல்லம் வீங்கி, கையில் கட்டுடன் மறுநாள் காட்சியளித்தான்.

ம்ம்ம்...என்ன பண்றது. கலியுகத்துல இப்படியெல்லாம் நடக்காம இருந்தா தான் ஆச்சரியப்படணும் போலிருக்கு.

அழிந்து வரும் சமண சிற்பங்களும், சமணப் படுகைகளும்

சமீப காலங்களில் வரும் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று. புராதான கல் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட ஒர் இடத்தின் முன் நிற்கும் இளம் ஜோடி கீழே கிடக்கும் எதோ ஒன்றை எடுத்து அந்தச் சிற்பத்தில் தங்கள் இரண்டு பேரின் பெயரையும் எழுதுவதற்க்கு செல்ல எத்தனிக்கையில் திடிரென்று அவர்களை இடைமறிக்கும் நடிகர் ஆமிர்கான் கையிலிருக்கும் பொருளை வாங்கி அந்த ஆணின் முகத்தில் கிறுக்குவார். 'ஏன் இப்படி செய்கிறிர்கள். என் முகம் என்னாவது' என்று எகிற, பதிலுக்கு ஆமிர்கானோ உங்கள் முகத்தை பாதுகாப்பது எப்படியோ அப்படித்தான் இது போன்ற ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட எண்ணற்ற சிற்பங்களையும் கலாச்சார சின்னங்களையும் பாதுகாப்பது' என்று கூறி அதன் முக்கியத்துவம், அவசியத்தை கூறிக் கொண்டு போவார்.
இவ்விளம்பரத்தில் வரும் இளம் ஜோடிகள் போல் தான் இன்றைய பெரும்பான்மையோர் உள்ளனர் நம்மிடத்தில், சில மாநில அரசாங்கங்களையும் சேர்த்து. அப்படி நான் பார்த்த ஒன்று மதுரை மாவட்டம் கீழவளவு கிராமத்தில் இருக்கும் ஒரு மலையில். காரணம் அம்மலையில் இருப்பது பல நூறோ, ஆயிரமோ வருடங்களுக்கு முற்பட்டதான சமண சிற்பங்களும், சமணப் படுகைகளும் தான்.மதுரையிலிருந்து கிழக்காக மேலுரை தாண்டி வலதுபுறம் திரும்பினால் வரும் தஞ்ஜாவூர், புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது இந்த கீழவளவு கிராமம்.
திருப்பரங்குன்றம் மலை போல வெறும் பாறைகளால் ஆனாலும் அளவில் மிகச் சிறியது. மதுரையிலிருந்து சரியாக 47 கீலோ மீட்டர். பள்ளிக் காலங்களில் அந்த கிராமப் பகுதியின் வட்டார நண்பர்களுடன் அந்த மலையில் பலமுறை ஏறிச் சுற்றியிருக்கிறேன். மலை உச்சியில் குகை போல இருக்கும் ஒரு இடத்தில் நீர் சுனை உண்டு. அவ்விடத்தில் பருந்துப் பார்வை பார்த்தபடி உட்கார்ந்தோ, படுத்தோ விட்டால் கண்கள் தானாக மூடிக்கொண்டு விடும். அப்படி ஒரு எகாந்தம், இனிமை, தனிமை.
ஆனால் அப்பொழுது சமண மதத்தை பற்றியோ, அவர்கள் வழிபாடு, வரலாறு, வாழ்வியல் முறைகளைப் பற்றியோ ஒன்றும் தெரியாது. ஆதலால் கால் போன போக்கில் மலையை சுற்றுவதோடு சரி. சைவ, வைணவ மதத்தைப் போல சமண மதமும் அரசர்கள் காலத்தில், தமிழகம், இந்தியா முழுவதும் மிகுந்த செல்வாக்கோடு இருந்திருக்கிறது. இப்போழுது இருக்கும் ஜெயின் மதத்தவர்களே அப்போழுது சமணர்கள் என்று அழைக்கப்பட்டனர். சமணத் துறவிகள் பெரும்பாலும் வாழ்ந்த மலைக் குன்றுகளில் கோயில்கள், சிற்பங்கள், ஒவியங்கள் இப்படிப் பலவற்றை உருவாக்கினர். அப்படி வாழ்ந்த பகுதிகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ளன. மற்ற இடங்களை பற்றி அவ்வளவாக தெரியாவிட்டாலும், மதுரையை சுற்றி பல இடங்களில் வாழ்ந்ததற்கான தகவலை எஸ். ராமகிருஷ்னன் எழுதிய 'தேசாந்திரி' என்னும் நூலில் இருந்து தெரிந்து கொன்டேன்.
அவை மதுரையை சுற்றியிருக்கும் மேலக்குயில்குடி, நாகமலை (மதுரை காமராஜர் பழ்கலைக்கழகம் செல்லும் வழியில்), திருப்பரங்குன்றம் பின்புறத்தில், ஆனைமலை (மதுரைக்கும் மேலூருக்கும் நடுவில் வரும் ஒரு மலை), மற்றும் கீழவளவு மலையில். இதில் எல்லா மலைகளிலும் விளையாட்டாக ஏறி இறங்கி விட்டாலும் அதிகம் சுற்றித் திரிந்தது திருப்பரங்குன்றத்தில் தான். கல்லூரியில் என்னோடு படித்த திருநகர், பசுமலை, பைக்காரா நண்பர்களோடு திருப்பரங்குன்றம் மலைகளில் பொழுதை போக்க பலமுறை சுற்றித் திரிந்திருக்கிறேன். மலையின் முன்புறம் உள்ள திருப்பரங்குன்றம் எப்படி எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படுமோ, அதற்கு நேர்மாரனது மலையின் பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதி. யாருமற்ற அமைதிப் பிரதேசம். மலையின் பின்புறம் உள்ள குடைவறைக் கோயில்கள், கல் சிற்பங்களை கண்டிருக்கிறேன்.




யானைமலை - நரசிங்க பெருமாள் கோயில்



யானைமலை



திருப்பரங்குன்றம் மலையின் பின்புறம். மலையின் மேலே உள்ளது காசி விஸ்வநாதர் கோயிலும், தர்காவும்



திருப்பரங்குன்றம் மலையின் அடிவாரம், பின்புறத்தில்




ஆனால் அப்பொழுது இதெல்லாம் சமணர்கள் காலத்தில் உருவாக்கியது என்ற விவரம் தெரியாது. அங்கிருக்கும் குடும்ப சகிதமான குரங்குகளோடு விளையாடவும், மலையை ஒட்டி உள்ள சரவணப் பொய்கையில் டைவ் அடித்து குளிக்கவும், யாருமற்ற தனிமையில் நண்பர்களோடு பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டை உள்ளிழுக்கவும் மட்டுமே அந்த இடம் எனக்கு பழக்கப்பட்டிருக்கிறது.

அதைப் போலத்தான் பல்கலைக்கழகத்திற்க்கு எதிரில் இருக்கும் மலையும். மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம் எதிரில் இருக்கும் ஆயிர வைசியர் மேல்நிலைப்பள்ளியில் +1, +2 படிக்கும் காலத்தில் ஐந்து...ஆறு நண்பர்களுடன் க்ளாசை கட் அடித்து விடு வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி எதிரில் இருக்கும் நண்பனின் வீட்டுக்கு சென்று விடுவோம். நண்பனின் அம்மா, அப்பா எல்லோரும் வேலைக்கு சென்று விடுவதால், எதிர் வீட்டில் இருக்கும் சாவியை வாங்கி கொண்டு வீட்டிற்குள் நுழைவோம். வீட்டிலிருந்து சிறிது தூரம் பின்னோக்கி நடந்து சென்றால் வந்து விடும் மலை. அப்பொழுதே மலையின் ஒரு பகுதியில் கல்குவாரிகள் இருந்ததுண்டு. அடிவாரத்தில் இருந்த அந்த கல்குவாரியின் பல அடி உயர பள்ளத்தில் தண்ணிர் தேங்கி இருக்கும். பல அடி உயர மலை முகட்டில் மேலேறி அங்கிருந்து தண்ணிரில் டைவ் அடித்து முழ்கும் அந்தப் பகுதி சிறுவர்களுடன் நாங்களும் சிறிது நேரம் குளிப்பதுண்டு. பின்னர் அந்த மலை இடுக்குகளில் இருந்து வழியும் தண்ணிரில் மிதந்து வரும் மீன் குஞ்சுகளை பிடித்து அருகிலேயே தீயை மூட்டி சுட்டு கையோடு நண்பனின் வீட்டில் இருந்து கொண்டு சென்ற உப்பு, மிளகாய் பொடியை தூவி சாப்பிடுவதுண்டு.பின்னர் மதியத்திற்கு மேல் மலையேற்றம். மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது தூரத்தில் மதுரை நகரம் முழுவதும் தெரியும். கீழே மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் மீட்டர் கேஜ் ரயில். பசுமை போர்த்திய புல்வெலிகள். மலையில் நீண்ட குகை போன்று ஒன்றிரண்டு உண்டு. ஆனால் பயத்தில் நாங்கள் உள்ளே யாரும் செல்வதில்லை. முன்னே இருக்கும் ஒன்றிரண்டு சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கல்லை மட்டும் தடவிப் பார்த்து ' இந்த மலையில எவன்டா வேல வேட்டி இல்லாம இதெல்லாம் செதுக்கி வச்சுருக்கிறது' என்றபடியே அந்தப் பகுதியை கடந்து செல்வதுண்டு. உண்மையில் அது ஒரு கனாக்காலம் எனக்கு.
கீழவளவை சுற்றி ஏராளமான கல்குவாரிகள் உண்டு. தரையை மட்டுமே தோண்டும் இவர்கள் மலையில் கை வைக்க மாட்டார்கள் என்றே நினைத்திருந்தேன். ஒரு வருடங்களுக்கு பிறகு மதுரை சென்றிருந்தபோது அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவிற்க்காக அந்தப் பகுதியில் இருந்த ஒரு கிராமத்திற்கு செல்ல நேரிட்டது. மலை இருந்த இடத்தை பார்த்த போது மலையில் பாதி இல்லை.







ப்ரட் துண்டுகளை போல மலை பாதியாக வெட்டியெடுக்கப்பட்டிருந்தது. கண்டிப்பாய் மறுமுறை செல்லும்போது நான் ஓடி ஆடித் திரிந்த அந்த மலை இருக்காது. இன்னும் ஆறு மாதங்களிலேயோ, இல்லை ஒரு வருடத்திலோ அந்த இடத்தில் மலை என்ற ஒன்று இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் ஆகிவிடும். அந்தப் பகுதி மக்களுக்கும் அந்த மலையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
நித்தம் பலமுறை கேட்கும் வெடிச்சத்தமும், வெடிமருந்துகளால் அந்தப் பகுதி கண்மாய், ஊரணி போன்றவை விஷத்தன்மை ஆனது தான் மிச்சம். அருகில் வசிக்கும் கிராம மக்கள், கல்குவாரிகள், அனுமதி கொடுத்த அரசாங்கம், இதில் யாரைக் குற்றம் சொல்ல. இங்கே சிதைக்கப்படுவது இது பொன்ற சிறிய மலைகள் மட்டும் அல்ல...என்னைப் போன்றவர்களின் சிறு வயது நினைவுகழும் தான். பணத்திற்க்காக சக குடும்பத்தவர்களையே கொல்லும் இவ்வுலகில் மலை என்ன சாதரணம், இல்லையா !
இதைப் போலவே நாகமலை, புதுக்கோட்டை அருகில் இருக்கும் அஜந்தா, எல்லோரா குகை ஒவியங்களைப் போல புகழ் பெற்ற சித்தன்ன வாசல் மலையும் ஒவியங்களும் கல் குவாரி முதலாளிகளால் சிதைக்கபட்டு சுக்கு நூறாக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன் தேசாந்திரி நூலில் சொன்னது போல காலத்தில் மீதமிருக்கும் இது போன்ற சில இடங்கள் தான் சரித்திரம் உண்மையென மெய்ப்பித்துக் கொண்டு இருக்கின்றன. காலம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இது போன்ற மலைகளை காப்பாற்றி வைத்திருக்கும் தெரியவில்லை. ஒரு கல் சிலையாகும் போது, அது மனிதனின் கலைநுட்பத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால், அதே சிலை உடைக்கப்பட்டுத் திரும்பவும் கல் ஆகும் போது, அது தனிமனிதனின் வீழ்ச்சியை மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் வீழ்ச்சியைக் குறிப்பதாகவே அமையும் என்று சொன்னது  எவ்வளவு பெரிய உண்மை.