Monday, November 17, 2008

என் முதல் கலர் மொபைல்


சிறுவயதிலிருந்தே குக்கிராமத்தில் வளர்ந்து, வாழ்ந்து வருபவன் திடிரென்று சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வந்தால் எப்படி உணர்வானோ அப்படித்தான் எனக்கும் இருந்தது நோக்கியா 6300 கலர் மொபைல் வாங்கியபொழுது. மதுரையில் இருந்த போதும் சரி, சென்னையிலும் சரி, நான் வைத்திருந்தது கருப்பு வெள்ளை மொபைல்கள் தான். மதுரையில் Reliance போன்களும் (500 ரூபாய்க்கு ரெண்டு குடுத்தாங்களே ! அந்த மொபைல் தான்) நீண்ட, ஒல்லியான, தட்டையான நான்கு கலர் டிஸ்ப்ளே (அதாங்க டூரிங் டாக்கிஸ்ல, பழைய கருப்பு வெள்ளை எம்.ஜி.ஆர், சிவாஜி படம் போடும் போது சிவப்பு, மஞ்சள், நீலக் கலர் லென்ச மாத்தி மாத்தி போடுவானே ! அது மாதிரி) உள்ள பனாசோனிக் வைத்திருந்தேன். சென்னை வந்த பிறகு நோக்கியா 3310. அப்புறம் நோக்கியா 1100. இப்படி கருப்பு வெள்ளையிலேயே நம்ம வாழ்க்கை முடிஞ்சுடுமோன்னு கவலைப்பட்டுகிட்டு இருந்தப்ப தான் நண்பன் ஒருவன் போன் செய்தான். 'Wavetel ள மொபைல் வாங்க போரேன் உனக்கு எதாவது வேனும்னா சொல்லு ஒரே மாடல் வாங்கி காசு கம்மி பண்ணி எடுத்துரலாம்' என்றான்.

சரி நாமளா என்னைக்கும் வாங்க போறது இல்ல, இப்படியாவது வாங்குவோம்னு நினைச்சு 'சரி' என்றேன். நான் அவனிடம் வாங்க சொல்லி கேட்டது நோக்கியா 6300. இணையத்தில் பல மொபைல் மாடல்களை பார்த்து கடைசியில் அப்பொழுது கயில் இருந்த எனது பட்ஜெட்டுக்கு தகுந்தார் போல உள்ள இந்த மாடலையே தேர்வு செய்தேன். பார்க்க அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்தது. தன்னிடமிருந்த ஐ.சி.ஐ.சி.ஐ க்ரெடிட் கார்டு மூலமாக எங்கள் இருவருக்கும் ஒரே மாடல் போனை வாங்கிக் கொண்டு வந்தான்.

(பின்னர் அடுத்த நாள் அவனின் நோக்கியா 6300 வை கொடுத்து விட்டு அதை விட அதிக மதிப்புள்ள Sony Ericcson வாங்கிக் கொண்டு வந்தது தனிக் கதை) வாங்கும் போது 6300 வின் மதிப்பு 8400 ரூபாய். சரியாக போன தீபாவளிக்கு இரண்டு வாரங்கள் முன்பு. ஐந்து மாதத் தவணையாக மொபைலுக்குரிய பணத்தை அவனின் பேங்க் அக்கவுண்டிலே செலுத்தி விட்டேன் மாதம் மாதம். முதல் கலர் மொபைல். அதனோடு 128 MB Micro SD Card இலவசம். Inbuild போன் மெமரி வெறும் 7 எம்பி தான். அதிகபட்சமாக 2 ஜி பி வரை போட்டுக் கொள்ளலாம்.

கேமரா, வீடியோ ரிக்கார்டர், எப். எம்., MP3 ப்ளேயர் என்று எல்லாமும் உண்டு. இந்த தீபாவளியோடு சரியாக ஒரு வருடம். இது வரை உபயோகப்படுத்தியதில் அதன் நிறை குறைகள் சில.

கேமராவோடு லேதர் பவுச் தந்து விடுவதால் கீறல் விழாமல் பார்த்துக் கொள்ள முடிகிறது. அதுவும் ஸ்டெயின்லஸ் ஸ்டில் பாடி என்பதால் கொஞ்சம் கீறல் விழுந்தாலும் பளிச்சென்று தெரியும். சில நேரங்களில் அதிகமாக சூடாகி விடுகிறது. மொபைலில் ப்ரதானமாக இருப்பது அதன் கேமராவும் 1.6 மில்லியன் கலர் டிஸ்ப்ளேவும் தான். மூலை முடுக்குகளில் உள்ள சிறிய கலர்கள், கறைகள் கூட அருமையாக பதிவாகிறது. அட்டகாசமான டிஸ்ப்ளே.

2 மெகா பிக்சல் கேமராவானலும் எதாவது ஒரு டிஜிட்டல் கேமராவிற்க்கு பதில் இதையே உபயோகப்படுத்தலாம். நல்ல துல்லியம். ஆனால் ஜூம் செய்தால் படத்தின் தரம் குறைகிறது. வீடியோ கேமாரவும் சரியில்லை. எந்த ரெசலூசனில் வைத்தாலும் வீடியோ பதிவும் அதன் தரமும் குறைவுதான். அதேபோல் மொபைலில் சவுண்ட் டோன் அப்படி ஒன்றும் நன்றாக இல்லை. ஒரே ஒரு மோனோ ஸ்பீக்கர் மட்டும் உள்ளபடியால் டோன் கள் எல்லாம் சத்தம் குறைவாகத்தான் கேட்கிறது. மொபைலை நம் பக்கத்திலேயே வைத்துக் கொண்டால் தான் உண்டு.

மெமரி ஸ்பேஸ் அதிக ப்ரியாக இருந்தாலும் சாப்ட்வேர் அவ்வப்பொழுது ஹேங் ஆகி விடுகிறது. MP3 அதிகம் நான் கேட்பேன் என்பதால், சில நெரங்களில் அதை ஆன் செய்யும் போது மொபைல் தானாக ரீ ஸ்டார்ட் ஆகி விடுகிறது. அப்படி இல்லையேன்றால் ஹேங் ஆகி விடுகிறது. அந்தச் சுழ்நிலையில் நாம் ஒரு பாட்டை செலேக்ட் செய்ய அது மற்றொரு பாட்டை பாட ஆரம்பிக்கும். (என்ன கொடும சார் !).

Vodafone கனேக்ஸன் உள்ளபடியால் என்னிடம் மொபைல் கனேக்ட் வசதி உண்டு. அதாவது மொபைலை கம்ப்யுட்டருடன் இனைத்து இணையத் தொடர்பு பெறும் வசதி. சில நேரங்களில் Opera Mini, Yagoo Go! போன்ற மென்பொருள்களை உபயோகப்படுத்தி மொபைலிலேயே ப்ரவுஸ் செய்வதுன்டு. அவ்வப்போது சில தகவல்களையும் பதிவிரக்கம்செய்வதுண்டு. அப்படிச் செய்கையில் வைரஸ் ஏதாவது வந்திருக்குமா ! அதனால் சாப்ட்வேர் ஹேங், ரீ ஸ்டார்ட் ஆகிறதா என்பதும் தெரியவில்லை.

இதைக் கொடுத்து விட்டு ஆப்பில் ஐபோன் வாங்கலாமென்றால் அதில் நான் எதிர்பார்க்கும் வசதி பல இல்லை. வேற என்ன வாங்குறதுன்னு தான் தெரியல. நான் வாங்கிய போது இருந்த விலை 8400/- ரூபாய். சரியாக ஆறு மாதம் கழித்து அதன் விலை ரூபாய் 7400/- (ஆயிரம் ரூபாய் சரிவு). அதன் இன்றைய விலை 6700/- ரூபாய் (எல்லாம் வேவ்டல் மொபைல் நிலவரப்படி). முழுவதுமாக 1700 ரூபாய் சரிவு ஒரே வருடத்தில். ஆகையால் ஆசைக்காக இனிமேல் பணத்தை மொபைல்களில் முதலிடு செய்வதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்.
மொபைலில் இருந்து எடுத்த சில புகைப்படங்கள்
மெரீனா கடற்கரை


அலுவலகத்தின் மேல் மாடியில் இருந்து



அலுவலகத்தின் மேல் மாடி





பேய் வீடு அல்ல... இரவில் தெரியும் என் மான்சன்.







இரவில் சென்னை விமான நிலைய மாடியில் உள்ள பார்வையாளர் மாடத்திலிருந்து



சென்னை விமான நிலைய பார்வையாளர் மாடத்தின் உட்புறம்


மெரினா பீச்சில்


அண்ணா சதுக்கம் பின்புறம் கூவம் ஆறு கடலில் கடக்கும் இடத்தில்



காலையில் அலுவலகத்தின் மாடியில் இருந்து


Friday, August 22, 2008

சென்னை டு மதுரை விமானப் பயணம்


போன வருடம் ஜுலைக்குப் பிறகு ஒரு முறை மதுரைக்கும், அந்தமானுக்கும் விமானப் பயணம் செய்துவிட்டாலும் இதை பற்றிய என் முதல் பதிவு இதுதான்.

விவரம் தெரிந்த நாளிலிலிருந்து வேலைக்கு செல்லும் நாள் வரை வீட்டு மொட்டை மாடிகளில் நின்று கொண்டு பறக்கும் விமானங்களை அண்ணாந்து பார்த்ததோடு சரி!, பின்னர் சென்னைக்கு வந்த பிறகு வெளிநாடு செல்லும் நண்பர்கள், உறவினர்களை வழியனுப்ப மீனாம்பாக்க விமான நிலையம் வரும் போது கண்ணாடி ஜன்னல்கள் வழியாக அருகில் பார்த்ததோடு சரி. அதில் ஏறி ஒரு நாள் பயணம் செல்வேன் என்று என்றும் நினைத்ததில்லை.

ஆனால் அதற்க்கான சந்தர்ப்பம் வெகு சீக்கிரமே எனக்கு வாய்த்தது. சென்னையில் என்னை போல பல மதுரை நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் பேச்சுலர் விடுதிகளிலும், தனியாக வீடு எடுத்தும் தங்கி வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அப்படி ஒரு கல்லூரி வகுப்பு நண்பன் ஒருவன் தங்கியிருக்கும் விட்டிற்கு சென்றேன். என்னைபோல் ஒரு BPO வில் பணியாற்றி கொண்டிருந்தான். அம்பத்தூர் OT தாண்டி சில நிமிட நேர நடையில் உள்ளது அவன் வீடு. O.T. பஸ் ஸ்டான்டிற்க்கு வண்டியில் வந்து பிக் அப் செய்தவன் நேராக அருகில் இருக்கும் Wine Shop கு விட்டான். அங்கு ஒரு முழு நீள பாட்டிலும், சில நொறுக்கு தீனிகளுமாக வாங்கிக் கொண்டு வீட்டிற்க்கு சென்றோம். Stafford ஹாஸ்பிட்டல் பஸ் ஸ்டாப் அருகில் இருந்தது அவன் குடியிருந்த அபார்ட்மெண்ட். நண்பனுக்கு திருமணம் ஆகி விட்டதால் சுலபமாக வீடு கிடைத்தது. வேலை விசயமாக கேரளாவிற்க்கு சென்றிருந்தார் அவரின் மனைவி. வாங்கி வந்த பொருட்களை பரப்பி, பின்னர் எல்லாம் முடிந்த பின் நான் டிவி யில் முழ்க, நண்பன் விட்டில் இருக்கும் கணிணி மூலம் இணையத்திற்குள் சென்றான்.

திடிரென்று July 7 ம் தேதி நான் ஊருக்கு செல்லலாம் என்றிருக்கிறேன் விமானத்தில், நீயிம் வருகிறாயா என்றான். எவ்வளவு? என்றேன். என்ன ஒரு ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரும் என்றான்.பொதுவாக சென்னையிலிருந்து மதுரை செல்ல நார்மல் டிக்கெட் 3500/-. பாராமவுன்ட் மற்றும் ஏர் டெக்கானில் மட்டும் இரண்டு, முன்று மாதங்களுக்கு முன்பே புக் செய்து விட்டால் டிக்கெட் தொகை பாதி தான் வரும் என்றான்.இதற்க்கு முன் விமானத்தில் சென்றதில்லை இனிமெலும் அந்த சந்தர்ப்பம் வாய்க்குமா என்று தெரியாததால் சரி என்றேன். அப்போழுதே இணையம் மூலமாக எனக்கும் அவனுக்குமாக 2 டிக்கெட் முன்பதிவு செய்தான். பயண தேதியிலிருந்து ஒரு மாதம் பத்து நாள்களுக்கு முன்பே முன் பதிவு செய்ததால் ஒருவருக்கு ஆயிரத்து ஐநூறு வந்தது.

சரியாக ஜுலை 7 ம் தேதி காலை 7 மணிக்கு புறப்பாடு. 5.30 மணிக்கு கிளம்பி 6.00 மணிக்கெல்லாம் நான் விமான நிலையம் சென்று விட்டேன். நண்பன் தன் இரவு நேர அலுவலக பணியை முடித்து கொண்டு சரியாக 6.15 போல வந்து செர்ந்தான். அடையாள அட்டைகளையும், ஆன் லைன் டிக்கெட்டையும் பரிசோதித்த விமான நிலைய செக்யூரிட்டிகள் உள்ளே அனுமதித்தனர். உள்ளே சென்ற உடனேயே சோதனைக் கூடம். கையில் இருந்த லக்கேஜ் மற்றும் சோதனைகள் முடிந்த பிறகு உள்ளே உள்ள இருக்கைகளில் அமர்ந்தோம். ஒருவருக்கு ஒரு லக்கேஜ் மட்டும் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்த அதிகாலையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சரியாக 6.50 க்கு மைக்கில் மதுரை செல்லும் பயணிகள் தயாராக இருக்கும் தங்கள் நிறுவன பஸ்ஸில் சென்று அமருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதிகாலை நேரத்தில் வாக்கி டாக்கியோடு அலைந்து கொண்டிருந்த ஏர் ஹொஸ்டஸ் களின் அழகு முகங்களை தரிசித்தபடியே பஸ்ஸில் சென்று அமர்ந்தோம். பஸ் நிரம்பியதும் ஓடு பாதையில் நின்றிருந்த ஏர் டெக்கான் விமானம் அருகே சென்றது.

72 இருக்கைகள் உள்ள சிறிய ரக விமானம். ஒவ்வொருவரையிம் வரவேற்று அவரவர் இருக்கைகளில் அமர வைத்தனர். நண்பருக்கு இரண்டாவதோ, மூன்றாவதொ விமானப் பயணம். எனக்கு முதல் விமானப் பயணம். ஐன்னலோர சீட்டில் தான் உட்காருவேன் என்று அடம் பிடிக்காமல் பக்கத்து சீட்டிலேயே அமர்ந்தேன். புறப்பட்ட விமானம் சிறிது தூரம் சென்றதும் நின்றது. மூன்று விமானங்கள் தரையிறங்க இருப்பதால் பத்து நிமிடங்கள் தாமதமாகும் என்று அறிவித்தார் விமானி.அதற்குள் உள்ளே உள்ள ஏர் ஹொஸ்டஸ் பாதுகாப்பு பெல்ட் அணிவது பற்றிய செய்முரை விளக்கம் அளித்தார். அவரின் விளக்கத்தை கவனிப்பதை விட அவரைத்தான் அதிகம் கவனித்து வந்தோம். ஹி..ஹி..என்ன ஒரு அழகு.

மூன்று விமானங்களும் தரையிரங்கிய பின்னர் ஒடு தளத்திற்க்கு கிளம்பி, சிறிது நொடிகளிலேயே மேலே எழும்பியது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் சித்திரை பொருட்காட்சியில் ஜைன்ட் வீலில் மேலே, கிழே சுத்தும் போது அடிவயிறு ஜிவ்வென்றிருக்குமே அந்த ஒரு அனுபவம் விமானம் மேலே ஏறும் போது மறுபடியும் வாய்க்கும் என்றிருந்த எனக்கு அப்படி எதுவும் ஆகவில்லை, நார்மலாக்கத்தான் இருந்தது.

ஜன்னல் வழியாக பார்த்த போது மேகங்களுக்கிடையில் விமானம் செல்வது தெரிந்தது. ஏறுவதற்க்கு முன்பே மொபைல் போன், மற்றும் அலைவரிசைகளில் இயங்கக்கூடிய அனைத்து உபகரணங்களையும் Switch Off செய்யும் படி கேட்டுக் கொண்டார். விமான கட்டுப்பாட்டு அறையுடன் அவருடனான அலைவரிசை தொடர்பு பாதிக்கக்கூடாது என்பதற்க்காகவே இந்த செயல் இழக்கம். விமானம் குறிப்பிட்ட சில அடி உயரம் எழும்பியதும் மொபைல் போன் தவிர மற்ற Electronic பொருட்களான Mp3 ப்ளேயர், கேமரா போன்றவற்றை ஆன் செய்து கொள்ளலாம் என அறிவித்தார் விமானி. இதில் மற்ற தொலைதூர விமானத்தில் தருவது போன்ற எந்த இலவச உணவும் கிடையாது. Cabin Crew - ம் பணிப்பெண்ணும் தள்ளி கொண்டு வரும் உணவு வண்டியில் நமக்கு வேண்டியதை பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டியதுதான். அப்படி வந்த வண்டியில் நாங்கள் ஆரஞ்சு பழரசமும், ஜம்போ பாக் எனப்படும் ப்ரெட், பட்டர், உப்பு தடவிய அயிட்டங்களையும் வாங்கிக் கொண்டோம்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்களே ஒரு பெரிய பாலித்தீன் பையை எடுத்து வருகின்றனர். அதில் சாப்பிட்டு முடித்த கழிவுகளை பயணிகள் கொட்டி விட வேண்டும்.



 


விமானம் பரந்து கொண்டிருக்கும் போது எவ்வளவு அடி உயரத்தில் விமானம் பறக்கிறது, வெளியே உள்ள வெப்ப நிலை, விமானத்திற்குள் உள்ள வெப்ப நிலை ஆகியவற்றை விமானி சொல்லிக் கொண்டு வந்தார். அந்த கணக்கு எனக்கு சரியாக நினைவு இல்லை. வெளியே மைனஸ் 3 டிகிரி இருப்பதாக சொன்னதும் மட்டும் நினைவிருக்கிறது. வேகம் மணிக்கு 450 கிலோ மீட்டர் தரைத்தள வேகம்


விமானம் ஒரே இடத்தில் நிற்ப்பது போலத்தான் இருந்தது. அதற்க்குள் மதுரை விமான நிலையத்தை நெருங்கி விட்டதாக விமானி அறிவித்தார். 7.10 க்கு சென்னையில் கிளம்பிய விமானம் சரியாக 8.10 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் தரையிரங்கியது.





தரையிரங்கியவுடன் வெளியே வந்தால் விமான நிலைய மொட்டை மாடியில் டி வி எஸ் பள்ளி குழந்தைகள் நின்று தரையிரங்குவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஒரு டாட்டா காண்பித்து விட்டு வெளியே வந்தோம். விமான நிலைய டாக்ஸிகள் நிறைய இருந்தது. வேண்டாம் பஸ்ஸில் போய்க் கொள்கிறோம் என்று சொன்னாலும் விடவில்லை. பஸ் ஸ்டாப் அதிக தூரம், நடக்க முடியாது, உங்களை போன்ற பயணிகளை நம்பித்தான் நாங்கள் இந்த தொழில் செய்கிறோம், பெருங்குடி பஸ் ஸ்டாப்பிலாவது இறக்கி விடுகிறேன், ஐம்பது ரூபாய் கொடுங்கள் என்று பின்னாலே சுற்றினார் ஒரு நடுத்தர வயது டாக்ஸி ட்ரைவர். வேண்டாம் அதிக தூரமானாலும் நாங்கள் நடந்தே சென்று பஸ்ஸில் செல்கிறோம் என்று கூறி நடந்தோம்.





அவர் பாவம் தன் டாக்ஸியை பின்னாலேயே சிறிது தூரம் ஒட்டிக்கொண்டு வந்து பின்னர் ஒரு இடத்தில் நின்று விட்டார். இதற்க்கு முன்னால் இரு சக்கர வாகனத்தில் பல தடவை விமான நிலையம் சென்றிருந்தாலும் பஸ் ஸ்டாப் எங்கிருக்கிறது என்று சரியாக கவனிக்காததால் அருகில் தான் இருக்கும் என்று நினைத்து நடக்க ஆரம்பித்தோம். அது என்னடாவென்றால் போய்க்கொண்டே இருந்தது. அந்த நேரத்திற்கு வர வேண்டிய மாநகர பஸ்சும் ஏனோ வரவில்லை. 50 ருபாயை பெருசாக நினைத்து நடந்து சென்று விடுவோம் என்று நினைத்தது தவறு என்று உணர்த்தோம். மறுபடியும் ஏதாவது ஒரு டாக்ஸி வராதா என்று ஏக்கத்தில் திரும்பி, திரும்பி பார்த்தது தான் மிச்சம். சிறிது தூரம் சென்றதும் லோடு ஏற்றிக்கொண்டிருந்த மினி வேனை அனுகி எப்போது புறப்படும் என்று விசாரித்தோம். சிறிது நேரமாகும் என்றார்கள். பின்னர் இன்னும் சிறிது தூரம் சென்றதும் பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வந்தது. நிறுத்தச் சொல்லி கையை ஆட்டினால் ட்ரைவர் தான் இடது பக்கம் திரும்புவதாக சைகை செய்தார். அதுவும் முடியாது என்ற நிலையில் என்னடா இது காலக்கிரகமா இருக்குதேனு கொஞ்ச தூரம் நடந்தால் அதே பள்ளி வேன் மறுபடியும் வந்தது. இந்த முறை கையை நீட்டினால் தான் வலது புறம் திரும்புவதாக சைகை செய்தார் ட்ரைவர். வேறு வழியில்லாமல் ஒரு வழியாக பெருங்குடி பஸ் நிலையத்தை அடைந்தோம். சரியாக ஒரு கிலோ மீட்டர் தூரம்.

ஆசுவாசமாக சிறிது நேரம் டி சாப்பிட்டு விட்டு பஸ்ஸுக்காக காத்திருந்தால் வேறு மார்க்கமாக செல்லும் பேருந்துகளே வந்த வண்ணமிருந்தன. நண்பன் ஆட்டோவில் ரிங் ரோடு சென்று அங்கிருந்து மதுரைக்குள் நுழையும் வெளியூர் பேருந்துகள் மூலம் மாட்டுத்தாவணி சென்று அங்கிருந்து வீடு திரும்பலாம் என்று ஐடியா கொடுத்தான். எங்கள் இருவர் வீடும் அண்ணா நகரில் அருகருகே தான். அதன்படியே ஆட்டோவில் ஏறி ரிங் ரோடு சந்திப்பில் இறங்கி கொண்டோம். விருதுநகர், அருப்புகோட்டை, சாத்தூர் பகுதிகளிலிருந்து வரும் வெளியூர் பேருந்துகள் எதுவும் நிற்பதாக தெரியவில்லை. இதற்கிடையில் இருவர் விட்டிலிருந்தும் போன் மேலே போன் என்ன இன்னும் வந்து சேரவில்லை என்று.

வந்த ஒன்றிரண்டு லாரிகள், கறிக் கோழி ஏற்றிய லாரிகள் எதையும் விடவில்லை. மாட்டு வண்டி எதெனும் வந்தால் அதிலாவது ஏறி சென்று விடலாம் என்றால் ஒருவரும் நின்றபாடில்லை. அரை மணி நேரம் கழித்து சிமெண்ட் லோடு ஏற்றிய லாரி ஒன்று விலாசம் கேட்டபடி வந்து நின்றது. அவர்களிடம் சென்று கேட்டதற்க்கு ஏற்றிக் கொண்டனர். கடைசியில் அவர்கள் விசாரித்த விலாசம் எங்கள் இருவர் வீட்டின் அருகிலேயே இருந்தது. பின்னர் அண்ணா நகரை ஒட்டி பின்புறமாக செல்லும் ரிங் ரோடில் ஒரு ஒர்க் ஸாப் அருகில் இரங்கிக் கொண்டோம். ஒர்க் ஸாப் வைத்திருப்பவனும் நண்பனே. லாரி ட்ரைவருக்கு வழி சொல்லி விட்டு பின்னர் நண்பரின் ஒர்க் ஸாப் வண்டியில் ட்ரிபில்ஸ் அடித்து குறுக்கு வழியில் வண்டியூர் வந்து இறங்கி அங்கிருந்து நடந்து வீட்டை அடைந்தோம்.

பொதுவாக பஸ் பயணம் என்றால் 9 மணியிலிருந்து, 10 மணி நேரம் வரை ஆகும். இதே ஆம்னி பஸ் என்றால் சரியாக 8 அல்லது 8.30 மணி நேரம். அரசாங்க பஸ் என்றால் சில நேரங்களில் 12 மணி நேரம் கூட ஆகலாம். கோயம்பேட்டில் இரவு 9 மணிக்கு எடுத்தால் மறுநாள் காலை 9 மணிக்கு மாட்டுத்தாவணிக்குள் நுழையிம் பஸ்கள் ஏராளம். ஆனால் விமானப் பயணம் முன்பு அரைமணி நேரமாக இருந்தது இப்பொழுது 1 மணி நேரம். விமானப் பயணத்தை விட நாங்கள் வீடு போய் சேர ஆன நேரம் மட்டும் சுமார் இரண்டு மணி நேரம். நல்ல அனுபவம் தான் போங்க.



பச்சை கோடு தான் நாங்கள் நடந்த தூரம்

Sunday, February 03, 2008

சோதனை முயற்சி !

வலைதிரட்டிகளில் சிக்க ஒரு சோதனை முயற்சி...ஹி...ஹி... இப்பவாவது தமிழ்மணம் தேன்கூடு ல வருதான்னு பாக்குறேன்.