சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன் எதிரில் இருக்கும் மேம்பாலத்தை எத்தனையோ முறை பஸ்களில் கடந்து சென்றிருந்த போதிலும் கவனமோ, கண்ணோ எப்பொழுதாவது தான் மத்திய சிறைச்சாலையின் பக்கம் செல்லும். அப்பொழுதெல்லாம் சினிமாக்களில் நான் பார்த்த சிறை வளாகக் காட்சிகளும், அதிலே வரும் இரக்கமற்ற, கொடுரம் நிறைந்த சிறை வார்டன்களும், வார்டிகளும், சில சினிமாக்களில் பார்த்தது போன்ற கைதிகள் உட்கார ஒன்றிரண்டு ஆலமரம், அதைச் சுற்றி திண்டு போல உள்ள ஒன்றும், கொலைக் குற்றவாளிகளும், பிரபலமான தாதாக்களும், ஆட்டோ சங்கர், வீரமணி போன்றவர்களுமே என் நினைவில் வந்து செல்வர். அப்படி நினைக்கும்போது கூடவே, வாழ்க்கையில் எந்த ஒரு சுழ்நிலையிலும் இங்கு காலடி எடுத்து வைக்கும் நிலை வந்து விடக் கூடாது என்றும் நினைத்துக்கொள்வேன்.
நான் பார்க்கும்பொழுதெல்லாம் நகரத்தின் இரைச்சல்கள், பரபரப்புக்கிற்கு மத்தியில் அது மட்டும் தனித்து ஒரு ஓரமாக கீழிறங்கி, அமைதியான ஒரு தனிப் பிரதேசமாக காட்சி அளிப்பதாக தோன்றும்.
சறுக்குப் பாதையில் சில போலிஸ் வாகனங்கள், பாலத்திலிருந்து பிரியும் அதன் ஆரம்ப இடமான செக்போஸ்டில் சில போலிஸ்காரர்கள், கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் வட்டம் என்று மிக சொற்பமான கூட்டமே அங்கு தென்படும்.
ஆனால் விரைவில் நானும் ஒரு நாள் கையில் விலங்கில்லாமல், பாதுகாப்புக்கு போலிஸ் இல்லாமல் அந்த மத்திய சிறைச்சாலைக்குள் காலடி எடுத்து வைக்கும் நிலை வரும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.
அப்படி ஒரு நாளும் வந்தது, உயிரோடு இயங்கிக் கொண்டிருந்த மத்திய சிறைச்சாலை விஸ்தாரமான புழல் சிறைக்கு மாறிய பிறகு.
சுதந்திர போரட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்களை ஆங்கிலேய அரசு கைது செய்து அந்தமானில் உள்ள செல்லுலர் சிறைக்கு கொண்டு போவதற்க்கு வசதியாக, துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள இந்த இடத்தில் 1837 ல் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலை நாடு விடுதலை அடைந்த பிறகு சாதரண குற்றவாளிகளை அடைக்கும் கொட்டடியாக மாறிப் போனது.
ஆரம்ப காலங்களில் சிறிய எண்ணிக்கையில் இருந்த குற்றவாளிகளின் எண்ணிக்கை, நகரமும், அதன் மக்கள் தொகையும் வளர வளர கூடிக்கொண்டே போனது. இதற்கிடையில் 1999 ல் 10 பேருக்கும் மேல் இறந்த கைதிகளின் கலவரம் வேறு.
இப்படியாக இருந்த சிறைச்சாலை நகருக்கு வெளியே புழல் ஏரிக்கு அருகில் பல ஏக்கர் பரப்பிற்க்கு மாறிச் சென்று விட, இரண்டு வருடங்களாக ஆள் அரவமற்று புதர் மண்டிப் போய் பாழடைந்து கிடக்கிறது சிறைச்சாலை.
இடித்து தரைமட்டமாக்கி அதை அருகில் இருக்கும் அரசாங்க மருத்துவமனை விஸ்தரிப்புக்கும், மெட்ரோ ரயில் திட்டம் பணிகளுக்கும் ஒதுக்கும் முன்னர் பொதுமக்களின் பார்வைக்காக சில நாட்கள் அரசாங்க அனுமதியுடன் திறந்து விட்டது சிறைத்துறை. இதைப் பார்க்க யார் வரப்போகிறார்கள் என்று அங்கே சென்றால் லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம். எங்களைப் போல நண்பர்களுடனும், தனியாகவும் வருபவர்களை விட குடும்ப சகிதமாக வந்தோரே அதிகம், குழந்தைகள் உட்பட.
அலுவலகத்தில் வேலை செய்யும் சக நண்பன், நானுமாக ஒரு குழுவும், மற்றுமொரு ஐந்து பேர் வேறொரு குழுவாகவும் சிறிய நேர இடைவெளிகளில் உள்ளே நுழைந்தோம். வண்டியை சிறையை நோக்கிச் செல்லும் சறுக்குப் பாலத்தின் ஒரமாக நிறுத்தி விட்டு முன்பிறமிருந்த படிக்கட்டின் வழியாக கீழிறங்கிச் சென்றோம். சினிமா தியேட்டரில் பிரபலமான நடிகர் நடித்த திரைப்படத்தைக் காண முதல் நாள் டிக்கெட் கவுண்டர் எப்படி தள்ளுமுள்ளுடன் இருக்குமோ அப்படித்தான் இங்கும் இருந்தது.
ஒருவர் மட்டுமே செல்லும்படியாக அமைக்கப்பட்டிருந்த பாதையில் நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் உள்ளே சென்றால் !
'ஆரம்பமே அலக்கழிப்பா இருக்கே' நு அலுத்துக் கொண்டு சிறை வாசல் அருகில் சென்றோம்.சினிமாக்களிலும், பத்திரிக்கை புகைப்படங்களிலும் பார்த்திருந்த சிறை வாசலை முதல் முறையாக நெருக்கமாக பார்த்ததில் ஏதோ ஒரு உணர்ச்சி மனதில். உள்ளே ஜனத்திரள் கூட்டம். ஒரு சில பேராக சென்று வந்து கொண்டிருந்த சிறை வளாகத்தில் ஆயிரக்கணக்கானோரின் காலடி பட்டதும் ஒரே தூசிப்படலம்.
கர்ச்சிப்பை எடுத்து முகத்தில் கட்டிக் கொண்டேன் கண்கள் மட்டும் தெரிய. உள்ளே முதல் முறையாக செல்வதால் எதைப் பார்ப்பது, எதை விடுவது, எந்தப் பக்கம் சென்று எந்தப் பக்கம் வரவேண்டும் என்று தெரியவில்லை. சரி! ஒரு சுற்று சுற்றி வருவோம் என்று முதலில் பார்வையாளர் மாடத்திற்குள் நுழைந்தோம். ஒரளவிற்க்கு பெரிய கட்டடம். கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் சந்திப்பதற்க்காக அமைக்கப்பட்டிருந்த அதில் இரண்டு அடுக்கு கம்பி வளையம் போடப்பட்டிருந்தது.
கம்பி வளைய தடுப்புகளுக்கு இடையில் ஒரு அடி இடைவெளி. சந்திக்க வருபவர்கள் கைதியின் கையில் எதையும் மாற்றி விடக்கூடாது என்ற முன்னேற்பாடு. உள்ளே சென்று விட்டு வெளியே வர முயல்கையில் ஒருவர் தன்னோடு வந்த இரண்டு மூன்று பேர்களுக்கு அது செயல்படும் முறையை விவரித்துக் கொண்டிருந்தார்.
கம்பி வளையத் தடுப்பின் இறுதியில் ஒரு சிறிய சதுர வடிவிலான குறுகலான வழி உள்ளது. அதன் அருகில் உட்கார்ந்திருக்கும் வார்டன் அந்த ஓட்டை வழியாகத்தான் உறவினர்கள் கொண்டு வரும் பழங்கள், சாப்பாடு அயிட்டங்கள், மற்றவைகளை எல்லாம் உள்ளே நிற்கும் கைதிகளுக்கு பரிசோதித்து விட்டு வழங்குவார் என்று விவரித்துக்கொண்டிருந்தார்.
அந்த ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த முன்னால் கைதி போல இவர் என்று நினைத்துக் கொண்டு வெளியே வந்தோம். பொதுவாக சிறையை சுற்றி வருகையில் மூன்று, நான்கு முன்னால் கைதிகளையும் பார்க்க முடிந்தது. ஒரு நடுத்தர வயது கைதி ஒருவர் தன் மனைவி, உறவினர்கள், குழந்தைகளுக்கு தான் அடைக்கபட்டிருந்த செல், சாப்பிட்ட இடம், உள்ளே அலைந்து திரிந்த இடங்கள் என்று எல்லாவற்றையும் உணர்ச்சிபூர்வமாக காண்பித்து விவரித்துக் கொண்டிருந்தார்.
இன்னொரு வயதான ஒருவர் 'செக்யுரிட்டி ப்ளாக்' இன் முன்னால் நின்று கொண்டு அங்கு ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களின் சிலருக்கு ' நடுத்தர வயதாக இருக்கும் போது தானும், இப்போதைய அமைச்சர் அன்பழகனும் ஒரு போராட்டத்தில் கைது செய்யப் பட்டு அடுத்தடுத்த அறைகளில் இருந்ததாக சொல்லிக் கொண்டிருந்தார். கூறுவது உண்மையா, பொய்யா என்று யோசித்தபடியே ஒவ்வொருவரும் அவரைத் தாண்டிச் சென்ற வண்ணம் இருந்தனர்.
இப்படிப்பட்ட முன்னால் கைதிகள் கூறுவதை ஆர்வமாக கேட்க கூட்டம் அங்கு கூடிவிடுகிறது. அந்த கணத்தில் அவர்களுக்குள் ஒரு பெருமையோ, சந்தோசமோ, மற்றவர்கள் தம்மை ஆர்வமுடன் பார்க்கிறார்கள், தன் பேச்சை கேட்கிறார்கள் என்ற எதோ ஒரு விதமான உணர்ச்சியோ அவர்களிடத்தில் வந்து விடுவதை உணரமுடிந்தது.
விசிட்டர்ஸ் ப்ளாக் முடிந்தவுடன் அதை ஒட்டிச் செல்லும் பிரமாண்ட மதில் சுவரின் ஓரமாகவே சென்ற போது தூக்கு போடும் இடம் என்று கரியால் எழுதப்பட்டிருந்த ஒரு இடத்திற்குள் நுழைந்தால் அது ஓட்டு வீடு போல இருந்தது. "இதுக்குள்ள எப்படியா தூக்கு மாட்டுவாய்ங்க" என்ற படி வெளியே வந்து அடுத்த இடத்தை நோக்கி நகர்ந்தோம்.
சிறைக்குள் நாங்கள் ஆர்வமாக தேடியது தூக்கு போடும் இடம் தான். ஆனால் கடைசி வரையில் அதைப் பார்க்க முடியாமலே போனது. இன்னொரு குழுவாக சென்றிருந்த ஐந்து பேர் தாங்கள் தூக்கு மேடையை பார்த்ததாக அலுவலகத்தில் வந்து சொல்ல, அது எங்கிருக்கிறதென்று கேட்டு அடுத்த நாள் மறுபடியும் சிறைக்குச் சென்றோம். சிறைக்கு வெளியே கூவம் கரையோரமாகவே இருந்தது.
அதிகாரப்பூர்வமாக கொலை செய்யும் இடம். தன் மனைவியை கொன்ற குற்றத்துக்காக 1970- ல் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையே இங்கு நிறைவேற்றப்பட்ட கடைசி தூக்கு. அதற்க்குப் பிறகு யாரையும் தூக்கில் போடாததால் அந்த இடம் செடி கொடிகளால் சுழப்பட்டு பாழடைந்து கிடந்தது. ஆட்டோ சங்கர் தூக்கு கூட சேலம் மத்திய சிறையில் தான் நிறைவேறியது.
கைதியின் கழுத்தில் கையிரை மாட்டி அவனை நிக்க வைக்கும் நீளமான கால் பகுதியின் கீழே இரண்டு கனமான கதவுகள் படுக்கை வசமாக. தண்டனை நிறைவேற்றும் நேரம் வரும் போது கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்பி லிவரை பிடித்து வார்டன் இழுக்க இரண்டு கதவுகளும் உட்புறமாக திறந்து கொள்கிறது.
கதவுக்கு கீழே நீண்ட படிக்கட்டுடன் ஒரு சிறிய அறை போல கட்டியிருக்கிறார்கள். உயிர் போன பிறகு உடலை அப்படியே கீழிறக்கி மேலே கொண்டு வர வசதியாக.
மதில் சுவரை ஒட்டியபடியே செல்ல முதலில் தென்பட்டது குவாரன்டின் ப்ளாக் என்ற மகளிர் சிறை வளாக கட்டிடம். உள்ளே செல்வதற்க்கு மட்டும் இரண்டு கதவுகள். நாங்கள் பார்த்த முதல் கைதியின் அறைகள். 15 அடிக்கு 15 அடி என்ற அளவிலான சிறிய அறைகள். உள்ளேயே ஒரு மூலையில் மேடான பகுதியில் கழிப்பறை.
அதற்க்குள்ளேயே தான் உறக்கம். உண்மையிலேயே கொடுமையான ஒரு தண்டன தான். சிறைக்குள் கம்பியை எண்ணியபடி ஒரு போட்டோ எடுக்கலாம் என்று ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டோம். கூச்சமாத்தான் இருந்தது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் "இங்க பார்ரா, இப்படி ஒரு ஆசையா இவனுங்களுக்கு" என்றபடி நகர்ந்து சென்றார். ஆனால் எங்களைப் போல பலரும் இப்படி போட்டோ எடுத்துக் கொண்டதை சிறை முழுவதும் பார்க்க முடிந்தது.
பின்னாளில் ஒரு வாரப்பத்திரிக்கையில் இந்த குவாரன்டைன் ப்ளாக்கில் தான் ஜெயலலிதா, சசிகலா, கலைஞர், காஞ்ஜி விஜேயேந்திரர் அடைக்கப்பட்டிருந்தனர் என்பதை படித்த பிறகு கொஞ்சம் புல்லரிச்சது என்னமோ உண்மைதான். ஹி...ஹி.
பின்னர் ஒவ்வொரு ப்ளாக்காக சென்று பார்த்தபடி இருந்தோம். ஒவ்வொரு ப்ளாக்கையும் சுற்றி இரும்பு கம்பி தடுப்புகள் அதிகம் இருந்தன. ஒரு ப்ளாக்கில் இருந்து மற்றொரு ப்ளாக்கிற்க்கு அவ்வளவு எளிதில் போய் விட முடியாதபடி.
மத்திய சிறையில் திரும்பும் திசையெல்லாம் இரும்புகள் தான். கதவுகள், கம்பிகள், தடுப்புகள், வளையங்கள் இப்படிப் பல. ஆள் அரவமில்லாமல் இரண்டு வருடங்கள் இருந்ததினால் எங்கு பார்த்தாலும் புதர்ச் செடிகள், கொடிகள் தான்.
சிறை முழுவதுமே பச்சை இலை தலைகளின் வாசம் மூக்கை துளைத்தது. நடந்து செல்லும் வழியில் ஆங்காங்கே பாதாள சாக்கடைக் குழிகள் திறந்தபடியே கிடந்தது. அதில் பெரும்பாலானவை எல்லாம் மண் மூடி விட்டது.
சிறைக்குள் அதிகமாக தென்பட்டது துளசி செடிகளும், மங்களப் பொருளாக பொங்கலன்று வீட்டின் முற்றத்தில் மாவிலையுடன் சேர்த்து சொருகும் "கண்ணுபுல்லாக்கு" என்னும் நீண்ட செடிகளும் தான். ஆனால் ஒரு மாதம் கழித்து மறுபடியும் சென்ற போது இவைகள் இல்லாமல் இருந்தது.
ஒரு சில ப்ளாக்குகள் சிறையின் மூலையில் இருந்தது. உள்ளே சென்றால் மிக மிகச் சிறிய அறை. கண்டம் அறை என்று பேர். 10 க்கு 10 அடி என்ற அளவிலேயே இருந்தது. ஒருவன் உட்கார மட்டும் தான் முடியும். என்னைப் போல ஆறடி உயரம் உள்ளவர்கள் சரியாக காலை நீட்டி படுக்க கூட முடியாது. படுக்கைக்கு பக்கத்திலேயே கை எட்டும் தூரத்தில் கழிப்பறை. நாங்கள் போனது நல்ல வெயில் நேரமாக இருந்ததால் ஒரே அனலாக இருந்தது உள்ளே. எப்படித்தான் கைதிகள் இருந்தார்களோ.
இப்படிப்பட்ட சிறைகள் கடுங்காவல் தண்டனைக் கைதிகளுக்கு உரியனவாக இருக்கும் போல. இந்த அறைகள பார்த்தாலே எவனுக்கும் கொலை, கொள்ளை அடிக்கணும்னு தோனாது. பின்னர் உள்ளே உள்ள மருத்துவமனை, சமையல்கூடம், ஏ ப்ளாக், பி ப்ளாக், சி ப்ளாக், செக்யுரிட்டி ப்ளாக், வெளிநாட்டவர்களை அடைத்து வைக்கும் ப்ளாக் என்று தரத்திற்க்கு ஏற்றவாறு சிறைக் கட்டிடங்கள் இருந்தன.
மருத்துவமனை கட்டிடம் உள்ளே முழுவதும் மாத்திரைகள் சிதறிக் கிடந்தன. ஏ க்ளாஸ், பி க்ளாஸ், சி க்ளாஸ் என்று பெயருக்கேற்றவாறு சிறைகளும் அப்படித்தான் இருந்தன. பார்க்கவே அருவருப்பாக சில சி க்ளாஸ் அறைகள்.
அதில் சில அறைகளுக்கு அப்படியே நேர் எதிரில் வரிசையாக கழிப்பறைகள். எப்படித்தான் இருந்தனரோ. நான்கு வகையான செக்யுரிட்டி ப்ளாக்குகள். எல்லாமே அறை எண்ணிக்கையில் தான் வித்தியாசம். சிறைகளிலேயே பார்க்க நன்றாக, சுத்தமாக இருந்தது இந்த வெளிநாட்டவர்கள், செக்யுரிட்டி ப்ளாக்குகள் தான். எல்லாமே சிமெண்ட் தரை. அறையும் காற்றோட்டமாக, சுத்தமாக இருந்தது.
அடுத்து மிக நீண்ட ஒரு ஹாலில் சிமெண்டிலான பல படுக்கைகள் கைதிகள் படுத்துறங்க. பொதுவாக எல்லா அறைகளிலுமே அடைக்கப்பட்டிருந்த கைதிகள் எதையாவது வரைந்தோ, கிறுக்கியோ இருந்தனர். ஒரு சிலர் அவரவர் மதக்கடவுள்களின் உருவத்தை ஒவியமாக வரைந்திருந்தனர்.
ஐந்து மணி வரை தான் அனுமதி என்பதால் அவசர அவசரமாக எல்லவற்றையும் பார்த்து விட்டு வெளியே வந்தால் சரியாக ஐந்து மணி. வெளியே கேட்கும் சத்தம், நகரத்தின் இரைச்சல்கள் துளி கூட உள்ளே இல்லை. நெடிய மதில்சுவரை ஒட்டினார் போல ஓடும் தண்டவாளங்களின் மேல் செல்லும் ரயில்களின் சத்தம் மட்டும் தான் உள்ளே கேட்கிறது.
சிறையின் பாதுகாப்பிற்க்கு நீண்ட நெடிய மதில் சுவர்கள். 6 அடி உயரமுள்ள மூவர் ஒருவர் தோள் மீது ஒருவர் ஏறி நின்றால் மட்டுமே சுவரின் விளிம்பை தொட முடியும். அதற்க்கும் மேலே கரண்ட் கம்பிகள். இதிலெல்லாம் ஏறி தப்பிப்பது என்பது முடியாத காரியம் என்ற போதிலும் இதிலேறி தப்பியவன் ஆட்டோ சங்கர்.
வெளி உலகத் தொடர்பே இல்லாமல் பல வருடங்களாக உள்ளே இருப்பவர்கள் வாழ்க்கையில் பின் தங்கிப் போவது மட்டுமில்லாமல், தனிமை காரணமாக மனச் சிதைவுக்கு ஆளாவதும் அதிகம்.
தமிழகத்தில் முதன்முறையாக சிறை வளாகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிப்பது இதுவே முதல் தடவை. பார்த்த லட்சக்கணக்கானோரின் மனதில் தண்டணை எவ்வளவு கொடியது என்று மட்டும் உணர வைக்காமல், அவர்களின் மனதில் இனி குற்றம் செய்யலாகாது என்ற ஒரு சிறிய மாற்றத்தை உண்டு பண்ணினாலே அது சிறைத்துறையினருக்கு கிடைத்த வெற்றி தான்.