இரண்டு வருடங்களுக்கு முன்பு பெங்களுர் கால் சென்டரில் வேலை பார்த்த நண்பன் ஒருவன் பார்வர்டு செய்த ஈமெயிலை இந்த ப்ளாக்கில் How safe is Bangalore என்ற தலைப்பில் publish செய்திருந்தேன். அதைப் படித்த ஒருவர் இதை போல தனக்கும் வந்த அந்த ஈமெயிலில் உண்மை இல்லையென்றும், பொதுவாக பீதியை கிளப்புவதற்க்காகவே இதுபோன்ற மெயில்களை சிலர் அனுப்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
என்னைப் பொருத்தவரையில் அது உண்மையோ, பொய்யோ தெரியாது...ஆனால் சமீபத்தில் நான் தங்கியிருக்கும் இடத்திற்கு எதிரே இருக்கும் ஒரு குடும்பத்தின் கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த அனுபவத்தின் மூலம் மெயிலில் குறிப்பட்டது உண்மையாக கூட இருக்கலாம் என்றே தோன்றுகிறது. அவன் படித்துக் கொண்டிருப்பது நந்தனம் கலைக்கல்லூரியில். நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும் என்ற வரிகளுக்கேற்ப எப்பவும் நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் பழக்கமுள்ளவன்.
சாதரணமாக நடந்து செல்வதே யாரையாவது அடிக்கச் செல்வது போலத்தான் இருக்கும். நடுத்தர உயரம், அதற்கேற்ற நல்ல பலமான உடல்வாகு. தன் அப்பாவின் ஏ டி எம் கார்டைக் கொண்டு பணம் எடுக்க தேவி தியேட்டர் எதிரில் இருக்கும் ஒரு பேங்க் ஏ டி எம் சென்டருக்கு சென்றிருக்கிறான். பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே நடந்து வருகையில் திடிரென்று அருகில் வந்த ஒருவன் சிநேக பாவத்துடன் இவன் தோள் மீது அணைத்தபடி கை போட, திரும்பிப் பார்த்து 'யார் நீங்க' என்று கேட்டு சுதாரிப்பதற்குள் இவனை அப்படியே வாரி இழுத்து அருகில் நின்றிருந்த ஆட்டோவுக்குள் அமுக்கியிருக்கிறான்.
அதற்க்குள் ஆட்டோ வேகமெடுக்க திமிறிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தால் ஆட்டோ ட்ரைவர் அருகில் ஒருவன், பின்னால் இவனை அமுக்கிப் பிடித்துக் கொண்டு இரண்டு பேர். கத்தியை காட்டி மிரட்டி இவன் போட்டிருந்த செயின், மோதிரம், ஏ டி எம் கார்டு, அதிலிருந்து எடுத்த பணம், வாட்ச் என்று சகலத்தையிம் கழட்டி பறித்துக் கொண்ட பின், இவனை அப்படியே விடாமல் பின்னால் இருந்த இரண்டு பேரும் அடி உதைகளால் பின்னியெடுத்திருக்கின்றனர். இவனால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பின்னால் விசாரித்த போது கூறினான்.
பல் உடைந்து, மூக்குடைந்து, காதில் இருந்து ரத்தம் வந்த பின்னர் எக்மோர் அருகில் இருக்கும் மேம்பாலத்தில் இவனை உருட்டிவிட்டு சென்றிருக்கின்றனர். அங்கிருந்து நடந்தே வீடு வந்து சேர்ந்த அவனை பார்க்கவே பரிதாபமாகத் தான் இருந்தது. முகமேல்லம் வீங்கி, கையில் கட்டுடன் மறுநாள் காட்சியளித்தான்.
ம்ம்ம்...என்ன பண்றது. கலியுகத்துல இப்படியெல்லாம் நடக்காம இருந்தா தான் ஆச்சரியப்படணும் போலிருக்கு.
No comments:
Post a Comment